வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

🔥ஞானநிலை🙏மோனநிலை 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 15


வாழ்க்கை வாழ்வதற்கே !

நாம் பிறந்தது சிறப்பாக வாழவே !

சாவதற்கல்ல !

நல்லபடியாக வாழ்வதற்கே !

நாடு போற்ற வாழ வேண்டும் !

உற்றார் பெற்றார் கற்றார் நாட்டார் போற்ற வாழ வேண்டும் !

அப்படிப்பட்ட வாழ்வே மரணத்தைப் போக்கும் !


எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது முட்டாள்களின் வாதம் ! இப்படித்தான் வாழ வேண்டும் என்பதே ஆன்றோர் அறிவுரை ! ஆன்றோர் காட்டிய வழிதான் ஆண்டவனை காட்டும் !

பிறந்த நாம் எப்படி வாழ வேண்டும் என உபதேசித்தபடி வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, என்றும் வாழ ஞானிகள் அவர்கள் சுட்டிக் காட்டிய குருமார்க்கமாக சென்று மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்ய வேண்டும்.

உண்டு உறங்கி வாழ்வதல்ல வாழ்வு ! உண்டுவளந்தான் என்ற பெயரே மிஞ்சும் ! தூக்கம் தொலைத்தால் ஆயுள் விருத்தியாகும் !

"ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தூங்கி பழகுவானானால் அவன் ஆயிரம் வருடம் ஜீவித்திருப்பான் ! என்று வள்ளலார் உரைத்துள்ளார்."


நாமெல்லாம் பல மணி நேரம் தூங்குகிறோம் ஏன் ?

நம் ஆகாரம், ஒழுக்கநிலை, உழைப்பு இவற்றையெல்லாம் பொறுத்து உடல் சோர்வடைகிறது. அப்போது உடல் உள் உறுப்புகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. தூங்கிவிடுகிறோம். தூங்கி எழுந்ததும் உற்சாகம் வந்து விடுகிறதல்லவா ?

கடுமையான தூக்கம் வந்தால் கண்ணை கட்டுகிறது என சொல்வோமல்லவா ? ஏன் ?

உயிர் கண்ணில் உள்ளதால் அது தூக்கம் என்று நிலைகொள்ள வேண்டியிருப்பதால் அந்நிலை !


தூங்கும்போது நம் உயிர் ஒடுங்கி விடுகிறது ! உயிர் ஒடுங்கிவிட்டால் நாம் செயலிழந்து விடுகிறோம் !

பல மகான்கள் தங்கள் உயிரை ஆதாரத்தில் ஒடுங்கச் செய்து விடுவதால் புறச்செயல் அற்று சமாதியில் ஆழ்ந்து விடுகின்றனர் ! இப்படி சமாதி கூடி அறிதுயில் கொள்வது ஒன்றும் மேலானதல்ல என வள்ளலார் கூறுகிறார் !


உயிர்அறியாது ஒடுங்குவது தூக்கம் !

உயிரை அறிந்து ஆதாரத்தில் ஒடுக்குவது சமாதி !

சாதாரண மக்களுக்கு தூக்கம் ஒரு வரப்பிரசாதம் ! ஓய்வு கிடைக்கிறது.

ஓய்வு என்றால் என்ன ?

சும்மா இருப்பது தானே ?!


சும்மா இருப்பதுதான் ஞானம் !

அறியாமல் சும்மா இருந்தால் ஓய்வு !


அறிந்து உணர்ந்து சும்மா இருந்தால் ஞானம் கிட்டும் ! அறிந்து உணர்ந்து சும்மா இருக்க குரு வழிகாட்ட வேண்டும் !


உயிரை அறிந்து ஆதாரங்களில் ஒடுங்கிவிடாமல் உணர்வோடு சும்மா இருப்பதுவே ஞானநிலை ! மோனநிலை !


"சமாதி பழக்கம் பழக்கமல்ல, சகஜ பழக்கமே பழக்கம்" என வள்ளலார் கூறுகிறார்.


சமாதியில் மூழ்குவது பெரிதல்ல, உயிர் அனுபவம் உணர்ந்து பெற்ற பேரின்ப நிலையிலேயே சகஜமாக எப்போதும் இருப்பதுவே சிறப்பு ! என்கிறார்.


சகஜ நிலையிலேயே எப்போதும் இருப்பதுவே மரணமிலா பெருவாழ்வுக்கு வழியாகும் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts