வெள்ளி, 4 நவம்பர், 2016

கணவனே கண் கண்ட தெய்வம்

மெய் என்றால் உடல்! இது ஆண், பெண் என இரண்டாக ஈர்ப்புடன் படைத்தான் இறைவன்! இயங்க வேண்டும் என அவன் கருதியதால், ஆண் பெண் இணைய வேண்டியதாயிற்று! நம் பாவத்தை பொறுத்து மெய்கொண்டு பரிதவிக்கிறோம்!

ஆணும் பெண்ணும் சமமே! இருவருக்கும் ஆன்மா ஒன்றே! உடலில் பேதம் இருந்தாலும் மெய்யுணர்வு அனைவர்க்கும் ஒன்றே! உடலால் பிரித்துவைத்த இறைவன் உயிரால் நம்மை ஒன்றாகவே படைத்தான்! எல்லோர் உடலிலும் ஆணாயினும் பெண்ணாயினும் வலதுபக்கம் ஆண் அம்சம், இடது பக்கம் பெண் அம்சம்! வலது சிவம், இடது சக்தி இது மெய்!

மெய்யால் வித்தியாசப்பட்ட ஆண் பெண் ஒன்றுபட்டு வாழ்வதே இல்லறம்! அது நல்லறமாக விளங்க வேண்டும்.

பெண் வெறும் பிள்ளைபெறும் கருவி எனக் கருதாது தன்னில் சரிபாதி என கருதுபவனே நல்லதொரு கணவன்!

அந்த கணவனே கண் கண்ட தெய்வம் என வாழ்பவளே உத்தமி, பத்தினி! தன மனையாளின் கருத்துக்கு செவிமடுப்பவன், பிற பெண்களை தாயாக கருதுபவன் ஞானம் பெறுவான்!

கருவை சுமந்து, உருவை தர தாய் பட்ட வேதனை சொல்லி மாளாது! வயிற்று பாரம் இறக்கிவிட்டு மனபாரம் சாகும்வரை சுமக்கும் தாய்மைக்கு ஒப்பார் யார்?! பேதை மனங்கொண்டவள் பெண் என்பர்! ஆனால் பேடாக (மனநலம் குன்றிய) பிள்ளை பிறந்தாலும் தாங்கி காக்கும் தாய் கடவுளுக்கு நிகரல்லவா?
என்னைக் கேட்டால் உலகில் சிறந்தவள் மனைவியே என்பேன்! தாயை விட சிறந்தவள் மனைவியே! ஏனெனில் தாய் ஸ்தானம் கிடைப்பது மனைவிக்குத்தான்! மனைவி உத்தம குணவதியாக பத்தினியாகவும் திகழ்கிறாள்! கணவனின் எல்லாவற்றிலும் எல்லா நிலையிலும் எல்லா காலத்திலும் சரிபாதியாக நிற்பவள் மனைவியே! மனைவி, சிவத்தின் பாதி சக்தியாக துலங்குபவள்! மனைவி, விஷ்ணுவின் மார்பில் லக்ஷ்மி என அமர்ந்தவள்! மனைவி, பிரம்மனின் நாவில் சரஸ்வதி என இருந்தவள்! இப்படி இறைவனே மனைவியை எப்படி போற்ற வேண்டும் என நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

நம் மனைக்கு தலைவி! வீட்டுக்காரி என்றும் இல்லக்கிளத்தி என்றும், மனைவி நம் உயிரோடும் உடலோடும் கலந்தவள் என்றும் மெய்ஞானம் பெற்றவரும் கூறுவார்! மனைவி தான் பெற்ற மக்களோடு, தான் கொண்ட கணவனையும் இரு கண்களாக கருதுபவள்! நல்லதொரு மனைவி ஒருவனுக்கு மந்திரி போலவும், தாய் போலவும், வேலைக்காரி போலவும், தாசி போலவும் இருக்கிறாள்! நற்பன்புகளோடு அமைந்த மனைவியும், மேற்கூறிய குணங்களும் மனைவியை பெற்ற ஆடவனே புண்ணியம் செய்தவன் ஆவான்! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
திருமணங்கள் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன! எப்பிறவி பந்தமோ இப்பிறப்பு மனைவி! மனைவியை மதிப்பவனே மனிதன்! மிதிப்பவன் மிருகம்! மனைவியை அடிமையாக கருதாமல் தன் உயிராக எவன் ஒருவன் கருதுகிறானோ அவனே உத்தமன்! ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்பவனே உத்தமன்!

தாயை விட மனைவியே சிறந்தவள்! ஒரு பெண் தாயாவது மனைவியான பின்னே! நல்ல மனைவியே நல்ல தாயாக முடியும்! தந்தையும் தாயும் உடல் கொடுத்தவர்கள்! மெய் கொடுத்த கண்கண்ட தெய்வம் தான்! *மெய்யினுள் மெய்ப்பொருள் கொடுத்தது அந்த இறைவன்தானே!* உடல் அழியும் தன்மையுடையது அதைத்தான் தாய் கொடுக்க முடியும்! மனைவியானவள் மெய்யினுள் மெய்ப்பொருள்போல கணவனின் உயிருக்கும் உடலுக்கும் பரவசம் நல்கக் கூடியவள்! மனைவி மட்டுமே தரக்கூடியது சிற்றின்பம்! தாயால் தர முடியாதது!? தாயின் பாசம் பெற்று வளர்த்து ஆளாக்குவதோடு முடிந்தது! மனைவியின் பாசம் எங்கிருந்தோ வந்து மணமாகி சாகும்வரை உள்ள பந்தம்! பிரிக்க முடியாத பிணைப்பு கணவன் மனைவி உறவு!
தாயின் அன்பு அவளின் பல பிள்ளைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்! மனைவியின் அன்பு தன் மணாளன் ஒருவனுக்கு மட்டுமே! தாய் பிள்ளையை கருவிலே வயிற்றிலே பத்து மாதம் மட்டுமே சுமக்கிறாள் பின் இறக்கி வைத்து விடுவாள்! மனைவி தன கணவனை எங்கிருந்தோ வந்த பந்தப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மனதிலே சுமக்கிறாள்! இறக்கி வைப்பதேயில்லை! எனவே, எல்லாவிதத்திலும் தாயைவிட மனைவியே சிறந்தவள்! இது பலரும் அறியாத, உணராத உண்மை! சத்தியம்!


ஒருவனது வாழ்க்கை நல்லயிருப்பதும், மோசமாவதும் மனைவியை பொறுத்தே! பொறுமையான நல்ல குணவதியை மனைவியாக பெற்றவன் பூர்வ ஜென்மத்தின் புண்ணியம் செய்தவனே! அவனே பாக்கியாவன்!
ஈருடல் ஓருயிர் என வாழ்வது கணவன் மனைவியே! நகமும் சதையும் போல வாழ்வது கணவன் மனைவியே! வள்ளுவரும் வாசுகியும் போல உத்தம தம்பதியாக வாழ்வதே பாக்கியம்! ஒரு பெண்ணுக்கு மிக மிக புனிதமான பட்டம், உன்னதமான பாக்கியம் பத்தினி என்பதே! அது மனைவி என்ற ஸ்தானத்திற்கு உரியதே! ஒரு பெண் முதலில் மனைவியாகிறாள்! பின்னர் தான் தாயாகிறாள்! மனைவியே சிறந்தவள்! இது மெய்! மெய்! மெய்!
மனைவியால் தான் இன்பம் பெறுகிறான் ஆண்மகன்! கணவனாகி கைப்பிடித்த காரியையுடன் கலந்து மகிழ்ந்து உடலால் உணர்வால் சிறிய அளவிலே பெறும் இன்பமே சிற்றின்பம்! இது மெய்!

பெண்ணான ஆத்மாவான நாம் - மனிதர்கள் பரமாத்மாவான புருஷோத்தமனான இறைவனோடு இணைவதே பேரின்பம்! ஜீவ பிரம்ம ஐக்கியம் என்று வேதமும் ஞானியரும் உரைத்துள்ளனர்!

உடலால் உலகில் பெரும் இன்பம் சிற்றின்பம்! ஆத்மாவால் பரத்தில் பெரும் இன்பம் பேரின்பம்! உலகில் மனைவியால் தானே, நாம் இன்பம் பெற முடியும்! எப்படியானாலும் மனைவியே சிறந்தவள்! நாம் நல்ல மனைவியாக வேண்டும் அந்த நாதனுக்கு!

ஜீவா பிரம்ம ஐக்கியமே நாம் அறிந்து உணர்ந்து அடையவும் வேண்டியது ஆகும்! இது மெய்! உண்மை! சத்தியம்!

மெய் மெய்யாக இங்கே கூறிய அனைத்தும் அறிந்துணர்வது அவசியமே!
--- *ஞானசற்குரு ஸ்ரீ சிவ செல்வராஜ் அய்யா*

Popular Posts