.வள்ளலார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
.வள்ளலார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா?

பத்தாமிடம் இருக்கும் வாலையை பற்ற முடியுமா? பக்தியோடு
அவள் திருவடியை பற்றனும்!

பற்ற வைக்கணும் திருவடியாகிய கண்மணி ஒளியை!
குருவருளால் பற்றவைத்து நம் தவத்தால் பற்றின ஒளியை பெருக வைக்கணும்!

ஒளி பெருகப் பெருக நம் திருவடி மெய்ப்பொருளை பற்றப் பற்றவே நம்முள் ஒளி
பெருகி உட்புகுந்து பத்தாமிடத்து தாயிடம் வாலையிடம் பணிவுடன் சேரும்!

புறப்பற்றை விட்டு அகப்பற்றுடன் பத்தை அடைய வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்துடனே
தவம் செய்தால் பற்றி விடலாம்!

வேறு யோகங்கள் செய்து பூஜைகள் செய்து ஊர் ஊராக சென்று
தீர்த்த யாத்திரைகள் செய்து அலைந்து பணம் பொருள் செய்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!

தாயை காண தவம் தான் செய்ய வேண்டும்! தாயை காண திருவடியான நம் கண்மணி ஒளியை
பற்றித்தான் தவம் செய்ய வேண்டும்! முதலில் வாலை தாயின் திருவடியை சிக்கென பிடி! பிறகு
உன்னிடம் உள்ள வாலைத்தாயின் திருவடியான உன் கண்ணைப்பிடி! பக்தியோடு தாயை
பணிந்து பணிவோடு உறுதியோடு உன் உள்ளே இருக்கும் வாலைத்தாயின் பாதம் சேர்!

இதை தவிர எந்த மார்க்கமும் கிடையாது!  இருப்பதாக சொல்வர் அறியாமையில் சொல்வர்!
இருப்பாதமே கதி என இருந்தாலே ஞானம்!

அபிராமி பட்டரும் மகாகவி காளிதாசரும் பக்தியில்
ஊறி ஞானத்தில் திளைத்தவர்கள்! நம் வள்ளலாரும் அப்படிதான்! பிறக்கும் போது யாரும்
ஞானி அல்ல!!? பிறந்து கடுமையாக தவம் செய்து பக்தி செய்து ஞானம் பெற்றவர்களே எல்லோரும்!!

எனவே உலகத்தாயாம் வாலைத்தாயின் பாதம் பணி!!
  

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ஜீவகாருண்யம் : ஒளியுடல் பெறுவது எப்படி ?


 

ஜீவ காருண்ய ஒழுக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என வலியுறுத்தவே வள்ளலார் "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்றொரு தனி நூலே இயற்றியுள்ளார். படியுங்கள்! முழுவதும் படியுங்கள்! ஆழ்ந்து படியுங்கள்! ஒவ்வொரு ஜீவர்கள்  மீதும் நீங்கள் காட்ட வேண்டிய அன்பு எப்படியிருக்கணும் என்று தெளிவாக விரிவாக கூறியிருக்கிறார் வள்ளலார்! பிற ஜீவர்கள் மீது மட்டும் அன்பு காட்டினால் போதுமா?! உன்ஜீவனை கருணையுடன் பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! கருணையோடு பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! சாப்பாடு போடுவதோ பிற பிற வகைகளில் பிற ஜீவர்களுக்கு சேவை செய்வது மட்டுமல்ல ஜீவகாருண்யம்!? உன் ஜீவனை பிறந்து பிறந்து செத்து செத்து துன்பப்படும் உன் ஜீவனை கருணையுடன்
பார்!! உன் ஜீவன் நித்திய ஜீவனே! பிறப்பும் இறப்பும் வாழ்க்கையில் படும் துன்பமும் ஏன்? எதனால்? எப்படி? என தெரிய வேண்டாமா? ஆக துன்பமே வாழ்வாகிறது பலருக்கு! ஏன் ? உன் ஜீவனும் இன்பமாக வாழ வழி காணக் கூடாதா?

பிற உயிர்போல கருதியாவது உன் ஜீவனிடம் கருணை காட்டு! இது தான் ஜீவகாருண்யம்! பிற ஜீவர்களிடம் கருணை காட்டுவது பரோபகாரம்! உன்ஜீவனை ரட்சிக்க அது ஒருவழி! உன் ஜீவனை கருணையோடு பார்!
உன் ஜீவன் கடைத்தேற யாது வழி? உன் ஜீவன் முக்தியடைய சத்விசாரம் செய்! நீ யார்? எங்கு இருந்து  வந்தாய்? எதனால் வந்தாய்? ஏனிந்த துன்பம்? இது தீர யாது வழி?


யாரிடம் போய் தெரிந்து கொள்வது? இதை சொல்ல வல்ல ஒரு ஞான சற்குருவை பணித்து உபதேசம் தீட்சை கேள்!  உன்  ஜீவனை ரட்சிக்க வழி தேடிக் கொள்! ஞானிகள் அனைவரும் உரைத்த ஜீவகாருண்யம் இதுதான்! ஓவ்வொரு ஞானியும் முதலில் தன் ஜீவனை நேசித்து இறையருள் பெற்றனர்! ஞான தவம் செய்து தன் ஜீவனை சக்தியுள்ளதாக்கினர்! பின்னரே  ஜீவர்களுக்கு
சேவை செய்தனர்! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!

முதலில் நீ உருப்படும் வழியை பார்? உன்னிடம் பொருள் இருந்தால் அல்லவா பிறருக்கு உன்னால் உதவமுடியும்!?  உன் ஜீவன் அருள் பெற்று இருந்தால் அல்லவா பிற ஜீவர்களை கருணையுடன் கண்டு உதவ முடியும்?!வள்ளலார்  என்ற ஜீவன் கடும்தவம் செய்து அருட்பெருஞ்ஜோதி யாகிய இறைவன் அருள் பெற்றதால் தான் இறைமயமானதால் தான் வாடிய பயிரை கண்டும் வாடினார்?!! அன்பும் கருணையும் தன்னுள் இருந்து தான் வெளிப்படனும்! அதற்க்கு முதலில் தன் ஜீவன் அன்புமயமாக கருணை இரக்கமே உருவாக, மலர நீ ஞான தவம் செய்! நீ உன் ஜீவனை கருணையுடன் பார்! வள்ளலார் தான் ஜீவனை பார்த்தார்! 9 வயதில் இருந்து ஆன்மீக சாதனை செய்தார் செய்தார் செய்து கொண்டே இருந்தார்! செய்த தவம் பலித்தது! பால் நினைத்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆட்க்கொண்டார்! அருள் பெற்றார்! ஊன உடலே ஒளியுடலாக ஓங்க பெற்றார்!


 ஞான சற்குரு சிவசெல்வராஜ் தங்க ஜோதி ஞான சபை






-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வெள்ளி, 23 நவம்பர், 2012

விதி படி வாழ்வது அல்ல மனித வாழ்க்கை

விதியை மதியால் வெல்லலாம்! எப்படி?

விதிக்கப்பட்ட பிராரப்த கர்மம்(~50 % கர்மம்) மூலம் பிறவி எடுத்தோம், நாம் சேர்த்து வைத்த கர்ம வினையால் எடுத்த பிறவி.நாம் பிறந்து வந்தது நாம் முடிவு பண்ணியது அல்ல, நமது தாய் தந்தை முடிவு பண்ணி வந்தது அல்ல.நாம் இப்பிறவி எடுத்து வந்து, நம் மதியால் நமது கர்ம வினையை அழித்து "நாம் யார்" என்று தெரிந்து கொள்ளவேண்டியது.எப்படி தன்னை அறிவது? தவம் செய்யவேண்டும்.

விதி படி வாழ்வது அல்ல மனித வாழ்க்கை!  விதியை வெல்ல கூடியவன் மனிதன். இறைவன் நமக்கு ஒரு சான்ஸ் கொடுத்து உள்ளார். 50% கர்மத்தை கொடுத்து மனிதனாக பிறப்பிக்க வைத்தான். மனிதனாக பிறந்த நாம் அதை உணர்ந்து , இந்த விதி வினையில் இருந்து எப்படி விடுதலை அடையவேண்டும் என்று பார்க்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனம்! பிறந்து. மேலும் மேலும் வினையை சேர்த்து இன்னும் இறந்து பிறக்க கூடாது. நாம் செய்ய வேண்டியது ஏற்கனவே கொண்டு வந்தது ப்ராப்த கருமத்தை தீர்த்து வினை இல்லாத நிலையை தேடவேண்டும். நம் வாழ்வை வினை இல்லாத தன்மைக்கு அமைத்து கொள்ள வேண்டும். 



மேலும் அறிய .....

சனி, 27 அக்டோபர், 2012

சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?

சிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார் வள்ளலார் ! சித்தர்களும் ஞானிகளும் சிறு தெய்வங்களை வழி பட்டதே இல்லை!? சிறு தெய்வங்கள் எல்லாம் சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏவல் செய்யும் மெய்க்காப்பாளர்களே! ஏவளர்களே! இறைவனின் செல்ல பிள்ளைகளான சித்தர்களும் ஞானிகளும் இட்ட கட்டளை படி பணிகளை செவ்வனே செய்பவை தான் சிறு தெய்வங்கள்! உலக நலன் கருதியே இப்பணி நடக்கும்! என் நண்பர் ஒருவர் தெய்வத்தில் பெரிசாவது சின்னதாவது ! ஒரே தெய்வம் தானே, நான் என் குல தெய்வத்தை தான் வணங்குகிறேன்! எனக்கு எல்லாமே அதுதான் என்றார்!? அவர் குல தெய்வம் 'சுடலைமாடன்'. இங்கே குமரி மாவட்டத்தில் உள்ள சுடலை காப்போன் சுடலை மாடன்! பெரிதாக வில்லுபாட்டு கதைகள் எல்லாம் உண்டு! ஒவ்வொரு ஊர் எல்லையிலும் இசக்கியம்மன் முத்தாரம்மன் என தேவதைளும் உண்டு! எல்லை காவல் தெய்வங்களே இவைகள்! ஊர் புறங்களிலே இது போல் தேவதைகள் எல்லாம் வைத்து வழி படுகிறார்கள் மக்கள்! இதில் கொடுமை என்றால்; உயிர் பலி தான்! வாய் இல்லா பிராணிகளை அந்த தேவதைகளுக்கு பலி கொடுக்கிறார்கள்! சுற்று புற ஊர்களிலே நடக்கும் இது போன்ற உயிர் பலியை வடலூரில் இருந்த போது வள்ளலார் தடுத்து நிறுத்தி நல்வழி காட்டியிருக்கிறார்!

ஆதி சங்கரர் காஞ்சி வந்த போது அப்போது மட மக்கள் ஏராளமான ஆடு, மாடுகளை காமாட்சி அம்மனுக்கு பலி கொடுத்து தான் வழிபட்டனர்! மிகவும் வருந்திய சங்கரர் காமாட்சியம்மனை துதித்தி மக்களுக்கு நல்ல புத்திமதி கூறி திருத்தினார். ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார்! பலி கொடுத்ததால் உக்ர ரூபமாய் இருந்தாள்! பாயாசம் படைத்தால் சாந்த ரூபமாய் அருளும் தாயாகிறாள்! இப்படி பற்பல ஊர்களிலும் யாரோ வழிகாட்டி மக்கள் தெய்வத்தை வணங்குவதை விட்டு தேவதைகளை வழி பட ஆரம்பித்து விட்டனர்.


அரபு நாட்டிலே முன்னூறுக்கும் மேல் உருவங்களை வைத்து வழி பட்டவர்களை திருத்தி, எல்லா வல்ல இறைவன் ஒருவனே அவனே "அல்லாஹ்"! அவனை மட்டுமே, ஒளியான அந்த ஒரே இறைவனை வழிபட வழிகாட்டினார்! முகமது நபி பெருமான்! தான் கண்ட ஒளியான எல்லோருக்கும் கூறி அவர் வழங்கிய திரு குரானை ஓதினார்! இயேசு பெருமானும் அவர் காலத்தில் மக்களிடையே இருந்த மூட பழக்க வழக்கங்களை மாற்றி தேவன் ஒருவரே அவர் ஒளியானவரே அவர் எல்லா மக்களுக்கு பிதா! அவரை தூய்மையான அன்பால் வழிபடுங்கள் என்று கூறி அருளினார்!


"துள்ளும் மரியாமனதை பலி கொடுத்தேன் துட்ட கன்ம தேவதைகளில்லை" என தாயுமான சுவாமிகள் நம் மனதை தான் பலி கொடுக்க வேண்டும் பிற உயிர்களை யல்ல! என்றும் துட்ட தேவதைகளை வழிபட வேண்டாம் என்றும் தெளிவாக கூறியுள்ளார். நமது பாரத பழம் பெரு நாட்டிலே தோன்றிய ஒவ்வொரு மகானும் சிறு தெய்வ வழிபாடு செய்ததேயில்லை?! ஆக உலகில் உள்ள எந்த மத ஞானி யானாலும், எல்லாம் வல்ல, அந்த பேரொளியை, இறைவனை, ஒரே கடவுளை, பரம் பொருளை, பரமாத்மாவைதான் அன்பால் வழிபட சொன்னார்கள்! தவம் செய்து இறைவனை அடையுங்கள் என்று கூறி,அடையுங்கள் என்று கூறி, அடைய வழியாக விழியையும் காட்டி சென்றுள்ளனர்! ஞானம் பெற விழி உள்புகு!

பாகவதத்தில் கிருஷ்ணபரமாத்மா இந்திர பூஜை செய்ய வேண்டாம் என கோகுல வாசிகளை தடுத்தார். கோவர்த்தன மலையை குடையாக பிடித்து எல்லோரையும் காத்தான். கடவுளை பணித்தால் தேவதைகள் ஒன்றும் செய்யாது.

சிறு தெய்வங்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவை! தந்திரத்தில் அடங்குவபவை! மனிதன் வசபடுத்தி விடலாம்! நல்லது கெட்டது நடக்கலாம். சிறு சிறு தேவதைகள் யார் என்றால், இறைவனால் இந்த பிரபஞ்சத்தை பரிசீலிக்க நிர்மாணிக்கபட்டவர்கள். தாம்!

சர்வ வல்லமை படைத்த இறைவன்

படைப்பு தொழில் புரிகையில் - பிரம்மா
காக்கும் தொழில் புரிகையில் - விஷ்ணு
மறைத்தல் தொழில் புரிகையில் - மகேஸ்வரன்
அருளல் தொழில் புரிகையில் - சதாசிவன்
அழிக்கும் தொழில் புரிகையில் - ருத்ரன்

என பஞ்சமூர்த்திகளாக விளங்குகிறார்! அந்த ஏக இறைவனின் அருள் அம்சங்களே! பஞ்ச பூதங்களான உலகை பரிபாலிக்க நவகிரகங்களை அஷ்டதிக் பாலகர்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் அதி தேவதைகள், இப்படி கடைசி வரை பூதகணங்கள் எல்லைக்காவல் தெய்வங்கள் வரை போகிறது!!

 நீ படைத்தவனை வணங்க வேண்டுமா ? இறைவனால் படைக்க பட்டவர்களை வணங்க வேண்டுமா? நாம் வணங்கி வழி படவேண்டியது சர்வ வல்லமை படைத்த எங்கும் நிறைந்த அந்த அருள் மயமான பெருஞ்சோதியை தானே!? அதை விடுத்து மாடன் கருப்பன் முனியன் என்று போனால் இந்த ஜென்மத்தில் விமோசனம் இல்லை! எல்லவற்றுக்கும் மேலான பரம்பொருளைப்பார்!

அது உன்னிலே உன் மெய்ப்பொருளாக விழியாக உள்ளதே! உன் கண்ணிலே மணியிலே ஒளியாக துலங்கும் எல்லாம் வல்ல இறைவனை பார்ப்பதை உணர்வதை விடுத்து ஊர் உலகெங்கும் தேடுகிராயே, உனக்கு அறிவு இருக்கிறதா? கையில் வெண்ணை இருக்க நெய்க்காக ஊரில் அலையாதே!
மதம் கிடையாது? ஜாதியே கிடையாது! நாடு மொழி வேற்றுமை கிடையாது?

ஒரு உண்மை சம்பவம் கூறினால் உங்களுக்கு புரியும்? என் சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று!? கேரளத்தில் ஓர் பித்தன் சித்தன் இருந்தான். மலையாள மொழியில் பிராந்தன் என்றனர் அவரை. அவர் பெயர் நாராயணன்! பிராந்தன் என்றால் பைத்தியகாரன்! உலக மக்களாகிய பைத்தியகார பயல்கள் அந்த ஞானிக்கு வைத்த பெயர் நாரணத்து பிராந்தன்! எப்படி? ஒரு நாள், எப்போது போல சுடுகாட்டிலே நம் நாரணத்து இருத்த போது திடீர் என்று காளி தோன்றினாள்! நம்மாள் கண்டுக்கவே இல்லை! காளியே கூப்பிட்டாள், நான் தோன்றினால் தரிசனம் பெற்றவருக்கு எதாவது வரம் கொடுக்கவேண்டும். உனக்கு என்ன வரம் வேண்டும் என்றால் காளி! அதிபயங்கர ரூபிணியாக! எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ போ என்றார் நாரணத்து பிராந்தன்! இல்லை எதாவது வரம் தந்து தான் தீர்வேன் என காளி மீண்டும் கூற , நாரணத்து தன் ஒருகால் வீங்கி இருப்பதை காட்டி இன்னொரு காலுக்கு மாற்று என்றார்! உடனே காளி அது உன் கர்மம்! நீ அனுபவித்து தான் என்று கூற, போய்விடு ஓடிவிடு என்று கத்தினான் நம் நாரணத்து பிராந்தன்! ? காளி போய் விட்டது நம்புங்கள்! இது சத்தியம்! உண்மை! கோவண துணி ஒன்றே சொந்தமென கொண்ட கேரளத்து நாரணத்து பிரான்தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்?! ஞானியை விட தேவதைகள் ஒன்றுமில்லாதது தான்?

 இதோடு ஒப்பிட்டு இன்னொரு உண்மை சம்பவம் கூறுகிறேன், நமது திருஅருபிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், வேட்டவலம் ஜாமீன் தார் மாளிகைக்கு சென்றார்! அவர் வீட்டு வாசல் படியை மிதித்தது தான் தாமதம், வேட்டவலம் ஜாமீன் மனைவியை பிடித்த பிரம்ம ராட்சசன் ஐயோ நான் போகிறேன் என்று ஓடி விட்டது! வள்ளலார் ஒன்றும் செய்யவில்லை! அவர் காற்று பட்டதுமே காத்து கருப்பு எல்லாம் காத தூரம் ஓடிவிட்டது?! இது தான் ஞானி லட்சணம்! அங்கே காளியால் கர்ம வினை தீராது என்று கூறப்பட்ட விஷயம் இங்கே ஞான சற்குருவால் வள்ளலாரால், வள்ளலாரை கண்டதுமே தீர்ந்தது! "குரு பார்க்க கூடி வினை தீரும்" அதற்க்கு இது ஒரு உதாரணம்! அது மட்டுமா? வேட்டவலம் ஜமீன் மனைவிக்கு தீராத மகோரதம் வியாதி வள்ளலார் விபூதி கொடுக்க உடனே குணமானது! சுத்த ஞானிகள் கைபட்ட கால்பட்ட மண்ணே பொன் ஆகும்போது? பேய்கள் ஓடாதா? நோய்கள் தீராதா? இப்போது புரிந்ததா? சிறு தெய்வங்களால் நமக்கு ஒரு பிரயோஜனம் இல்லை!?


ஞானியை பணிந்தால் அவரே நம் குருவாகி தாயாகி தந்தையாகி நம் கர்மவினைகளை போக்கி நம்மை கடவுளிடம் சேர்ப்பார்! இது சத்தியம்! 

மகாகவி காளிதாசனுக்கு அருளினாள் மாகாளி! அம்பிகை! மூடன் மகாகவி யானான்! அம்மாவசையன்று நிலவும் வந்தது! அருட்கவியானான் மகாகவி காவி காளிதாசன்! என்ன பயன்? முடிவு ஒரு பெண்ணாலே மாண்டானே! வேதனை வேதனை! வாலை தாயின் ஆதி சக்தியின் பரிவார தேவதைகளில் ஒன்று காளி! பரிவார தேவதைகளையும் காவல் தெய்வங்களையும் கும்பிடுவதை விட்டு, கண்ணான கடவுளை, கண்ணில் துலங்கும் கடவுளை , கண் உள்ளே விளங்கும் வாலையை பணிந்தாலே மோட்சம் கிட்டும்!! சிந்தித்து தீர்க்கமாக முடிவெடு! அறிவில்லாமல் அயோக்கிய சாமியார்கள் பின்னே போய்விடாதே! ஏமாறாதே! வேதனை படுவாய்?!



ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வாலை - கன்னி-ய-குமரி - ஞானம் பெற விழி 

 ------------------------------------------------------------------------------

குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை



எங்கள் குரு திரு.சிவ செல்வராஜ் அவர்களை பற்றி அவர் எழுதிய நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது.குருவை பற்றி அவரே கூறுவது.
பணியுரை!

வந்தனம். நன்றி. நலமே நிலவுக.எல்லாம்வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியால், அடியேன் திருச்சி ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் கருணையால்,1980ம் வருடம் விழி திறக்க பெற்றேன். வழி காட்டி ஆன்மிக பாதையில் நடை பயிலச் செய்தனர்.கண்ணியனானேன். கடைத்தேற வழி கிட்டியது.

குமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் எனும் ஊரில், அறிதுயில் கொண்ட அருகம்புல் சித்தர் நடராஜ சுவாமிகளை சமாதி வைக்கும் பெரும் பேறு அடியேனுக்கு கிட்டியது. 6 சென்ட் நிலம் காணிக்கையாக கொடுத்து புண்ணியம் தேடி கொண்டேன். அருகம்புல் சித்தர் பெருமகனாரோடு பலகாலமாக பழகும் பாக்கியம் கிட்டியதால் ஞான நிலைகள் பல அறியும் பேறு கிட்டியது.

 அடியேனுக்கு பீரப்பா பற்றி கூறி அருளியதும் அருகம்புல் சித்தரே. பாடினேன் அவர் மகிமையை. பார்த்துஅருளினார்.

அடியேனை அடியேனின் தீட்சா குருநாதர் ஞான சித்தர் ஜோதி ராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி ஆகும் சமயம் அடியனே அழைத்து குருவாக இருக்க பணித்தார்கள். குருவிற்கு சமாதி வைக்கும் பேறும் கிட்டியது. பெரும் பேறு பெற்றேன்.

குருவின் பரிபூரண அருள் பெற்றேன். ஆன்மிக அனுபவங்களை தந்து வள்ளல் பெருமான் அடியேனை மெருகேற்றினார்.

தேரூர் எனும் ஊரில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊரில், அருள்மிகு அழகிய மணவாள விநாயகர், அருள்மிகு ஹனுமான் கோயில் கொண்டுள்ள மடத்தில் ஆன்மிக பணிபுரிந்து வரும் குருமஹதேவ் அவர்களை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். ஒரு வருடம் அவர் அருளுரைகளை கேட்டு அறிவு பெற்றேன்.

அடியேன் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் அருள் பெற குரு மகாதேவ் அவர்களே காரணமானார். குரு மகாதேவ்அவர்களை சமாதி வைக்கும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. பெரும் புண்ணியம் கிட்டியது.

1980 முதல் 1992 வரை 12 வருடம் தீவிர சாதனையின் பயனாக வள்ளல் பெருமானின் அருளால் “கண்மணி மாலை” எனும் கருத்தோவியம் ஆன்மிகபுரட்சி நூல் வெளியிட்டேன். வெளியிடவைத்தனர் சித்தர்கள் பலர். அருள் புரிந்தார் அம்மையப்பன். காலங்காலமாக பலரும் இரகசியம்என மறைத்த ஞானத்தை இந்நூல் பரசியமாக்கியது.
 
மரணமில்லா பெருவாழ்வு பெற்ற ஞானிகள் , சித்தர்கள் நம் நாட்டில் ஏராளம். ஒப்பற்ற இறைவனை உணர்ந்து ஒளி உடல் பெற்ற மகான்கள் ஏராளம். இந்தியாவின் பெருமையே இதுதான்.எந்தன் வாழ்வில் அருள் கூட்டிய ஞானிகள் பலர். வழி காட்டியோர் பலர். இன்னார் என்று அறிவிக்காமலேயே எனக்கு வழி காட்டிய தெய்வம் சற்குரு கோவிந்த சுவாமிகள். கன்னியாகுமரி பகவதி அம்மன் வாலை அருள் பெற சற்குரு கோவிந்த சுவாமிகளின் அருளாசியே காரணம்.

கோவிந்த சுவாமிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலே காட்சி தந்து கருணை புரிந்து வழி காட்டியதால் அடியேன் இன்று குருஸ்தானத்தில் இருந்து வழி காட்ட முடிகிறது. வள்ளல் பெருமான் கூடவே இருந்து நடத்துகிறார். சூட்சம நிலையில் இருந்து ஆன்மிக ஞானத்தை உலக மக்களுக்கு உணர்த்தி வருவதே கோவிந்த சுவாமிகளின் ஒப்பற்ற பணி.இந்த ஒப்பற்ற ஒளி நிலை அடைந்த ஞானியை பாடி “சற்குரு கோவிந்தா சுவாமிகள்” என்ற நூலை வெளியிட்டேன்.

திருச்செந்தூர் செந்திலாண்டவனும்,சுசீந்திரம் ஆஞ்சநேயரும் கன்னியாகுமரி பகவதியம்மனும் உயிர் காத்து உன்னத நிலை தந்து குருவாக்கி குவலயம் வணங்க வைத்தனர். பிறந்த பயனை பெற்றேன்.

உலகீன்ற அன்னை. எவ்வுயிருகும் தாய். எல்லா உயிரினுள்ளும் சக்தியாக ஒளிர்பவள். மகாமாயை. ஆதி சக்தி. அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி. சித்தர்கள் வணங்கும் வாலை குமரி.என்றும் கன்னி.
உலகை காக்கும் தாய்.அடியேனுக்கு காட்சி கொடுத்து கன்னியாகுமரியில்
அமர்த்தி,என்னைபக்குவபடுத்தி குருபீடத்தில் அமர்த்தியவள் இந்த வாலை.

வலிந்து எம்மை ஆட்கொண்டார் வள்ளல் இராமலிங்கர். அறிவிலா சிறு பருவத்தே எம்மை உடனிருந்து காத்த ஒளியான ஞானி. இன்று அடியேனை பரிபூரணமாக ஆட்கொண்டு சற்குருவாக அமர்த்தி , ஞான உபதேசம் திருவடி தீட்சை கொடுக்க அருள் புரிந்து வருகிறார் வள்ளல் பெருமான். நான் உரைக்கும்வார்த்தையெல்லாம் வள்ளல் பெருமான் எம் உள்ளத்திலிருந்து வெளிபடுத்துவதே. எம்மை, எம்குடும்பத்தை , எம் சீடர்களை காத்து அருள்வதும் மெய்ஞான சற்குரு வள்ளல் பெருமானே.

சற்குரு வள்ளல் பெருமானின் அருளால் இதுவரை 38 ஞான நூற்களை வெளியிட்டு உள்ளேன்.ஆனைத்தும் மெய் ஞான இரகசியங்களை வெளிப்படையாக கூறுவது. இதில் திருமந்திரம் , திருவாசகம்,திருவருட்பா, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஞானிகளின் பாடல்களுக்கான மெய்ஞான விளக்கங்கள், ஞான மேதை தக்கலை பீர்முஹம்மது ஒலியுள்ள அவர்களின் பாடல்களும், இயேசு கிறிஸ்துவின் பைபிளின்உரைகளும் அடங்கும்.
அணைத்து ஞானிகள்கூறியுள்ள மெய்பொருள்ஒன்றே – “கண்களே” – என்றும், கண்கலே நம் உடலில் உள்ள இறைவனை காண நாம் உட்புகும் வாசல் என்பதை என் நூல்கள்மூலம் விளக்கி தெளிவுபடுத்தியுள்ளேன். காலம் காலமாக இரகசியம் என்று மறைத்து வைத்திருந்த இரகசியங்களை இநூல்கள் வெளியிடுகிறது.

இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீட்சை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில் நடத்தியும் வருகிறேன். சீடர்கள் காணிக்கையால் வாழ்கிறேன். வள்ளல் பெருமான் வளமோடு வாழ்வாங்கு வாழ வைக்கிறார்.

சைவ உணவு உட்கொள்பவர்கள் மட்டுமே ஞானம் கிட்டும். சைவ உணவே சன்மார்க்க உணவு. வாருங்கள். உங்களுக்கும் ஞானம் கிட்டும் எட்டும்.
மரணமில்லா பெரு வாழ்வு வாழ முதலில் உபதேசம். அடுத்து தவம் செய்யும் முறை உணர்த்தி திருவடி தீட்சை. மெய்பொருளை எல்லோரும் அறிந்து உணர்ந்து எல்லோரும் இன்புற்று வாழ வழி காட்டுகிறார் வள்ளலார். அடியேன் ஒரு கருவியாகவே செயல்படுகிறேன்.

இப்பணி செய்ய வைத்த பரமனுக்கு நன்றி. பாமரன் அடியேனை பண்புள்ளவனாக மாற்றிய வாலை பொற்பாதமே சரணம். சரணம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.





















என்றும் உண்மையுள்ள
சிவ செல்வராஜ்

செவ்வாய், 8 மே, 2012

ஜோதி தரிசனம் கிட்டும்!



எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் ,
பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில்
உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு
நெருப்பாக இருக்கிறான்!!

நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால்  தீட்சை பெற்று கண்மணியில் உணர்வு பெற்று அதை
நினைந்து நினைந்து உணர்ந்து  உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்!!

தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில்
நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடரவேண்டும்!!

அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும்! கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும்!!

மனம் அங்கே நிற்பதால் கை கூடும்!!

இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி
கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு
கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே!!

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருறுக்கியொ  ரோப்பிலா   ஆனந்தக்
கண்ணின்று காட்டி களிம்பறுத்  தானே " - திருமந்திரம்

சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்!!

நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன்
ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும்
ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும்
ஒன்றான நிலை ! ஜோதி பாதம்! திருவடி!!

இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக
உச்சியில் இருந்து உள்ளங்கால்வாரை உள்ள 72000  நாடி நரம்பிலும்
கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும்.

உடல் தூய்மையடையும்! நோய் நொடி வராது! உடல் உறுதி பெறும்!
உள்ளம் பண்பாடும்! இறைஅருள் கிட்டும் ! எல்லா ஞானிகளின்
ஆசிர்வாதமும் பெறுவான்!

ஜோதி தரிசனம் கிட்டும்!

திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்! அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்!

உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம்! பரவெளி காணலாம்!
வெட்ட வெளியில் உலாவலாம் ! பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே!

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

வினையறுக்க வந்ததே இப்பிறவி


மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற நம் பஞ்சேந்திரியங்களும் நம் உயிர் ஆற்றலினால் செயல்படுகிறது.

உணர்தல் பேசுதல் பார்த்தல் நுகர்தல் கேட்டல் அனைத்தும் ஆத்மாவின் செயலால் - உயிர் ஆற்றலால் தான் ஐம் புலன்களும் ஆத்மஸ்தானத்தில் - உயிர் இருக்கும் இடம் - ஓளி துலங்குமிடத்தில ஒடுங்கி விடுகிறது.

ஐம்புலன்களால் மனம் எண்ணி, புத்திக்கு அனுப்பி, சித்தத்தில் உறுதிப்பட்டு அகங்காரம் செயல்படுகிறது. ஒவ்வொரு காரியமும் இப்படியே நடக்கிறது.

எச்செயலும் ஏதாவது கர்மத்தை - வினையை உண்டாக்கி விடும்.  வினைகள் தீர்க்க படவேண்டும். இது தீரத்தான் தியானம் தவம் தேவை.

வினை இருக்கும் வரை பிறப்புண்டு, வினை இல்லமால் போனால் தான் பிறவி இல்லாது போகும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.  "வினை போகமே ஒரு தேகம் கண்டாய் " அவரவர் வினைகளுக்கேற்ப  பிறவி
அமைகிறது. வினை முழுவதும் தீர வேண்டும். அதற்குதான் தவம். வினையறுக்க வந்ததே இப்பிறவி.

வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.

பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம். நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக  வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும். குருவே சரணம்
என்று இருந்தால் இப்போது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் கண்ணனிடம் நம் கண்மணி ஒளியிடம் சமர்பித்துவிடவேண்டும். கண் அவன் கணவன். ஆத்மாக்களுக்கு கணவன் பரமாத்மாதான். கண்ணன் நம்
கண்மணியில் உள்ள ஒளி. அதிலே சரணடைந்து விட்டால் நம் செயல்களை கண்ணன் திருவடியில் கண்மணி ஒளியில் விட்டால் நமக்கு ஆகான்மியம் இல்லை.

குருவை பெற்று, கண் திறக்கப் பெற்று, தவம் செய்யச் செய்ய இனி ஆகான்மியம் இல்லை! சாதனையில் இறங்கும் சாதகனின் பிராரப்தம் குருவருளால் தீரும்! ஆகான்மியம் இல்லாது போய் - பிராரப்தம் கரைஞ்சு போய் - சஞ்சிதமும் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு தீரும். "தலைக்கு வரும் துன்பம் தலைபாகையோடு போகும்" குருவே கூட இருந்து காப்பாற்றுவார்.

வினை தீரத்தீர இறைவனை நெருங்கி விடுவோம்.

பஞ்சமா பாதகம் செய்பவனாயினும் குருவால் உபதேசம் பெற்று சாதனை செய்தால் உத்தமனாகலாம். வால்மீகி மகரிஷி, அருணகிரி நாதர் இன்னும் பலர் உதாரணத்திற்கு இருக்கிறார்கள். கண்ணன் திருவடியில்
சரணானாலே நமக்கு வினையில்லை என்றாகும்.

"நாம் செய்பவனல்ல சாட்சி மாத்திரமே"  என வாழ்ந்தால் வினைகளிடமிருந்து விடுதலை! பிறவி கடலில்
நீந்தி கரையேறாலாம்.

நம் கண்மணி ஒளியிலே நாட்டம் வைத்து எந்த காரியம் செய்தாலும் அதனின்று எந்த வினையும் நமக்கு வாராது.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
வள்ளல் யார்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

சித்தர்கள் போற்றும் வாலை


சித்தர்கள் போற்றும் வாலை


வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமு மாமே

- திருமந்திரம்

மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்! மணம் அங்கே நிறுத்தி கண்மணியில் நிறுத்தி தவம் செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால் பெரிதாகும்! கண்மணி சுழல சுழல காற்று வேகமாகி ஒளியை பேருக்கும்! “மன்மணம் எங்குண்டு வாயு அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!

அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில லோக அன்னைக்கு சேவகம் செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும் 2 கோடியாகும்! அவ்வாறு உள்ள 2 கோடி பூதகணங்கள் தான் தாயின் கட்டளையை நிறைவேற்றும் சேவகர்கள்! மிகப்பெரிய இரகசியம் இது! சித்தர் சொன்ன இரகசியம்! ஆய்ந்து அறிந்து அறிய முடியாத மனோவாக்கு காயத்துக்கு அப்பாற்பட்ட அந்த அரணுக்கு இவளே எல்லாமாம்!



ஆதி சக்தியாக படைத்ததால் தாய்! சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய் துலங்குவதால் மனைவி! உயிரெல்லாம் சக்தியம்சமல்லவா சிவம் படைத்தாரல்லவா எனவே உயிரை படைத்ததால் உயிராக உள் பாதியாக சக்தி துலங்குவதால் மகளுமாவாள்! ஆஹா அற்புதம்! எவ்வளவு பெரிய உண்மை இது!

 ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக பூதகணங்கள் உள்ளன! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது! “நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர்” முருகப் பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்! வீரபாகு முதலானவர்கள்! முருகனின் கணங்கள் தன முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவபடுத்தி ஞானபாதைக்கு அழைத்து செல்வர்!

தாயே வாலையே என மகாமாயையைபணிந்தால் அரவணைப்பாள்! மும்மலத்தில் பெரியது மாயை! எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்! தாயே என்று சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!

உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக பார்த்தால் மட்டுமே தப்பலாம்! அபிராமி பட்டரைப் போல!

அழுதால் அமுதம் தருவாள்! ஞானசம்பந்தருக்கு தந்தது போல! பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு தந்ததை போல! இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அன்னையின் மகிமையை!! அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்! இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது போல! எம்மை பொறுத்தவரை எல்லாமே தாய்தான்! வாலைதான்! கன்னியகுமரி பகவதி அன்னைதான்! சரணம்! சரணம்! சரணம்!

ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின் மந்திர மணி மாலை என்னும் நூலில் திருமந்திர பாடலுக்கான விளக்கம்

Popular Posts