திங்கள், 27 ஜூன், 2022

அகஸ்தியர் கூறும் ஞானதவம்


🔥 அகஸ்தியர் கூறும் ஞானதவம் 🔥


"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்றி”
- அகஸ்தியர் மெய்ஞ்ஞான சூத்திரம்




வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் !
கண்ணில் நின்ற ஒளிபாரு ! இதுவே ஞானதவம் !

கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து கண்மணி நடுவே ஊசி முனைவாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு !


நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண்இரண்டும் 
அடங்கிப்போகும் ! இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் 
உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும் !!
இதை விண்ணில் நின்று, எல்லாமே வெட்டவெளிதான் என உணர்ந்து 
அங்கிருந்து உபதேசம் தீட்சை செய்தகுருவை போற்று !

🙏உன் ஞானசற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டுசெய் !🙏
"குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்"

- ஒளவைக்குறள் !

குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார் ?!

நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல் 
இருப்பது கொடும் பாவமல்லவா ?

குருவைப் பணி !

குரு பார்க்க கோடிவினை தீரும் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள்!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

புதன், 22 ஜூன், 2022

பெரியாழ்வார் ஞானத்தில் கண்ணன்

அண்ணல் கண்ணன் ஒர்மகனைப் பெற்ற யசோதை நங்காய் உன் மகனை கூவாய்''
பாடல் - 202
ஸ்ரீ பெரியாழ்வார்
______________





.  பக்தியில்.......,
கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடுசென்று எல்லோருக்கும் துன்பத்தை கொடுக்கிறான். கோபியர்கள் யசோதையிடம் சென்று உன் மகனை வெளியே விடாதே! வீட்டுக்கு உள்ளே கூப்பிடு! வீட்டிலேயே இருத்திவிடு என்கிறார்களாம்!
ஞானத்தில்.......

கண்ணன் புறத்தே போனான் என்றால் நம் மனம் போனது
எனப்பொருள்!

"மனம் போன போக்கில் போனால் என்னாகும்? துன்பமே மிச்சம்!"
கண்ணனை வீட்டின் உள்ளேயே இருத்திவிட்டால்! _"நம் மனதை கண் மணி ஒளியிலேயே இருத்திவிட்டால் பேரின்பமே!"
அதனால் கண்ணனை வெளியே விடாதீர்கள்! வெளியே பார்க்க பார்க்க வினையே! உங்கள் பார்வையை வெளியே விடாதீர்கள்! பார்வை உள்ளே திரும்பினால் ஒளி கண்ஒளி பெருகும்!


நூல்: பரம பதம்
பக்கம்: 44
www.vallalyaar.com

செவ்வாய், 21 ஜூன், 2022

ஞானி என யாரை சொல்லலாம் ?



#ஞானி_யார் ?
ஞானி என யாரை சொல்லலாம் என்றால் ?


இறைவன் நம்முள்ளும் காரியப்படுகிறான் என்றும், எப்படியிருக்கிறான் என்றும் கூறி, அவனை , தான் அடைந்த அனுபவம் கூறி, இந்த இறைவன் தன்னை இப்படியெல்லாம் ஆட்க்கொண்டான் என்றும் கூறி, பாடி அருள்பவரே !


தன்னுள் இருக்கும் இறைவனை காணமுடியாதவன் ஞானம் பெற
முடியாது ?! *ஞானம் என்பது பரிபூரண அறிவு! ஞானம் என்பது தன்னை - தான் யார் என்று அறிவதே உணர்வதே யாகும் !*




தன்னை அறியாதவன் தலைவனை அறியமாட்டான்!


*கண்ணே சரீரத்தின் விளக்கு*
- #பைபிள்_வாசகம்


"கண்ணில் ஒளியாக துலங்குகிறான் இறைவன்"
- #உபநிஷத_வாசகம்


*காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான்*
- #அப்பர்_வாசகம்


*கண்ணகத்தே நின்று களிதரும் தேனே*
- #திருவாசகம்


"கையறவிலாத நடுக்கண் புருவப்பூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு"
- #திருவருட்பா



இப்படி எல்லா ஞானிகளும் "கண்ணில் மணியில் ஒளியானவன் கடவுள்" என்றே கூறியிருக்கின்றனர்!
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!
- #ஞானசற்குரு #சிவசெல்வராஜ் அய்யா
#வள்ளலார் #திருவடிகள் போற்றி!
#Vallalar #meditation
www.vallalyaar.com

திங்கள், 20 ஜூன், 2022

🔥திருவடி எது? 🔥

 🔥    திருவடி எது?    🔥

"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே"

     திருமந்திரம் - 138 

இறைவனின் திருவடியே நமது கண்கள் ! சற்குரு உபதேசம் பெற்று
தவம் செய்தால் நம் உள்ளம் புரிந்து கொண்டால் நம் கண்களே
சிவமாகிய ஒளி உள்ளது என தெளிவாக உணரலாம் ! 

தேறிட்டாம்பா ! என நம் உறுதியை பார்த்து மற்றவர் கூற வேண்டும் ! 

திருவடியாகிய நம் கண்களே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்கு
நம்மை அழைத்துச் செல்லுமாதலால் அதுவே சிவலோகம் அல்லவா ? எப்படிபோகும் ? 

நாம் கண்ணில் மணியில் ஒளியை வைத்து சிந்தித்தால் அல்லவா செல்லும் !
மணியில் மனதை இருத்து ! திருவடியே நமக்கு கதி மோட்சம் தருவதாகும். 

திருவடி மூலமாகத் தானே சிவலோகம் சேரலாம் ! சேர்ந்து சிவ நடனம் காணலாம் !
கண்டால் தானே கதி மோட்சம் ! 

திருவடியே தஞ்சம் என பரிபூரண சரணாகதியானாலே
நம் உள்ளம் தெளிவாகும் ! 

அதாவது வினைகளற்று பரிசுத்தமாகும் !
அழுக்காகிய மும் மலம் அகன்று ஆத்மா தெளிவாக துலங்கும் ! 


எல்லாவற்றுக்கும் தேவை திருவடி !
எல்லாம் பெற தேவை திருவடி !
நாம் நாட வேண்டியது திருவடி !


 இறைவன் திருவடிகளே நம் கண்கள்! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com



First Book of Guru 










கண்மணி ஒளி - ஞானதவமே உயர்ந்த ஞான நிலை

 "ஒண்போதலர் கமலச் சிறுக்கால் உறைத்தொன்றும் நோவாமே
  தண்போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ!"
பாடல்-94















குட்டிக்கண்ணன் இளமையான கண்மணி, தனது குஞ்சுப்பாதங்களால் நடக்கையில் - தளர்நடை கால்நோவுமா?

நமது கண்மணியை நினைந்து ஞான தவம் இயற்றுகையில் வலிக்காது!

இதைத்தான் நமது திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளும்,

"நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவர்" எனப் பாடியுள்ளார். கண்மணி ஒளியை எண்ணி ஞானதவம் செய்வதே மேலானது. நோவாது நோன்பு நோற்பதாம்!

மற்றெல்லா யோகங்களும் தவங்களும் உடலை வருத்தி பலவிதமாக கஷ்டப்பட்டு செய்யும் பயிற்சிகளாகும், சித்தர்களும் ஞானிகளும் சைவ ஆச்சார்யர்களும் வைணவ ஆச்சார்யர்களும் சொன்ன இந்த கண்மணி ஒளியை எண்ணி செய்யும் ஞானதவமே உயர்ந்த ஞான நிலை பெற வழிவகுக்கும்,
துன்பமிலாது பேரின்பம் பெறும் ஒப்பற்ற ஞான மார்க்க மாகும்!

பரமபதம்
பக்கம்-38
குருவின் திருவடி சரணம்

வெள்ளி, 17 ஜூன், 2022

நாம் பிறந்த இடம் எது ? கீழான இடத்தை நினைக்காதீர்கள்.

          🔥 கண்மணிமாலை 🔥


"சிற்றம் பலமுஞ் சிவனும் அருகிருக்க 

வெற்றம் பலந்தேடி விட்டோமே - நித்தம்

பிறந்திடத்தைத் தேடுதே பேதைமட நெஞ்சம்

கறந்திடத்தை நாடுதே கண்"

    - பட்டினத்தார் 


ஆன்மாக்களே, 

     இந்நூலை நீங்கள் சரியாக படித்து உணர்ந்திருப்பீர்களானால் இந்தப் பாடலுக்குரிய ஞான விளக்கத்தை சரியாக புரிந்து கொள்வீர்கள் ! அதை விடுத்து இந்தப்பாடலை ஆபாசமாக நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இது எதுவுமே புரியவில்லை என்று பொருள். 

சிந்தித்துப் பாருங்கள். 


 சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க - 

     சிற்றம்பலமாகிய கண்ணும் அதில் ஒளியாக நின்றிலங்கும் சிவனும் அருகிருக்க, 

 வெற்றம்பலந்தேடி விட்டோமே - 

     ஒன்றுமில்லாத வெருமையான வெளியிடங்களை தேடிவிட்டோமே ; 

 நித்தம் பிறந்திடத்தை தேடுதே பேதை மட நெஞ்சம் - 

     நம் பேதை மனம் தினமும் நாம் பிறந்த இடத்தை தேடுகிறது. 


நாம் பிறந்த இடம் எது ? 

நாம் ஜீவாத்மாக்கள் அல்லவா ? நாம் பரமாத்மாவிலிருந்துதானே பிறந்தோம் ! நமது பேதை மனது தினமும் நாம் பிறந்த இடமாகிய பரமாத்மாவையே தேடுகிறது எனக் கூறுகிறார் ! 

கீழான இடத்தை நினைக்காதீர்கள். 

 கறந்திடத்தை நாடுதே கண் - 

     நமது கண்கள் சூரியனும் சந்திரனும் ஆகும் அல்லவா ? இந்த இரு ஒளிக்கலைகளும், அகமுகமாக அக்னி கலையோடு கூடும்போது நாம் நம் ஜீவனை ஒளியாக நம் முன்னே காணலாம் !  நாதத்தொனி கேட்கலாம் ! 

     பின்னர் நமக்கு இறைவன் பிரசாதமாக சகஸ்ராராரத்திலிருந்து அமுதம் சொட்டும். அந்த மங்காத பால் கறக்கும் இடத்தையே நமது கண் நாடுதே என பட்டினத்தார் கூறுகிறார்.  எவ்வளவு உயர்ந்த ஞானம் ! 

தவறாக பொருள் கொண்டு மோசம் போகாதீர்கள். எல்லா ஞானவான்களும் மிக உயர்ந்த பொருளையே - இறைவனையே - அடையும் வழியையே கூறுகின்றனர். 

எனவே,,, 


 "மெய்ப்பொருளை" உணருங்கள் ! 

 "திருவடியை" சரணடையுங்கள் ! 

 "கண்மணிமாலை" யைப்பற்றி கனிந்து நில்லுங்கள் ! 

 மரணமிலா பெருவாழ்வு வாழலாம் ! 


"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !" 


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


 இறைவன் திருவடிகளே நம் கண்கள் ! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts