வெள்ளி, 29 ஜூன், 2012

வாலையை பணியாமல் சித்தராக முடியாது!

"அவளை யறியா அமரரும் இல்லை
அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளின்றி யூர் புகு மாறறி யே னே"






அவள் - சக்தி - வாலை - தாய் - 'உ' இடது கண்மணி  ஒளி!
சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா?
சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே! உடலில் சக்தி
இருந்தால் தானே நடமாட முடியும்! பின்னரல்லவா தவம் செய்வது?!
ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது! சக்தி - வாலை
துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய
இயலாது!  பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க
சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும்
சிவமயம்! சிவம் சக்தி மயம்!



அவளே வாலை! தாய்! கன்னி 'ய' குமரியில் குடிகொண்டு முக்கடல்
தீரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் தாய்! பாலா பரமேஸ்வரி
சக்தியில்லையேல் ஒன்றுமில்லை! அசைவற்றிருக்கும் சிவம், அசையா
கல்போன்ற ஒளி களிநடம் புரிய சக்தி தான் தேவை! அந்த தாய் வாலை அருள்
தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்! சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்! நம்மை கருவாய்
வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி
அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே! நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!

 உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி ! ஆதிபராசக்தி! கன்னிகா பரமேஸ்வரி! நம் கண்ணுக்கு கண்ணாக விளங்குபவள் ! நம் உயிர் துலங்க உறுதுனையானவள் சக்தியே! தாயே!
தாயை வணங்கும் முதல் தெய்வம் தாயே என இன்று எல்லோரும் கூறுவது
உடல் கொடுத்த தாயை பற்றி! உயிராய் இருந்து வளர்க்கும் தாயை அறிவார்
இல்லை! இறைவனை அடைய அமுதூட்டி  வழிகாட்டும் உலகத்தாயை அறியவில்லை!

அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து
பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை! வாலையை  பணியாமல் யாரும்
தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம்
புரியவேண்டாமா? அந்த சக்தி மாமாயை வாலை கன்னி 'ய' குமரி அடியேனை
கன்னியாகுமரி யிலே சற்குருவாக இருத்தி தங்க ஜோதி  ஞான சபை தந்து
இத்தனை ஞான நூற்களையும் எழுதி வெளியிட்டு உலகத்துக்கு சேவை செய்யும் அருள் புரிந்தவள்! தாயை பணிந்தால் தயவுடையவனானேனே! அதனால் தான் எல்லோருக்கும் ஞான இரகசியங்களை போதிக்கிறேன்!
எழுதுகிறேன்!

 
"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே  கண்டு கொள் பணிந்தே"









புதன், 27 ஜூன், 2012

திருவடி தவத்தின் பயன் என்ன?




நம் கண்மணியில் வலது கண் சூரியன், இடதுகண்  சந்திரன் ஆகிய இரு
கண்மணிகளிலும் தவம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை ! ஜோதி பாதம்! திருவடி!!

இந்நிலை பெரும் முயற்சியிலிருக்கும்  சாதகனுக்கு படிப்படியாக உச்சியில் இருந்து  உள்ளங்கால் வரை  உள்ள 72000 நாடி நரம்பிலும்  கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும்!!

உடல் தூய்மையடையும்! நோய் நோடிவராது! உடல் உறுதி பெறும்! உள்ளம் பண்பாடும்!  இறை அருள் கிட்டும்! எல்லா ஞானிகளின்  ஆசிர்வாதம் பெறுவான்!!

ஜோதி தரிசனம் கிட்டும்!

திரைகள் விலகும் ஆன்மா பிரகாசிக்கும்! அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும்!

உச்சியை அடைந்தால் அறிவுப் பிரகாசம்! பரவெளி காணலாம்! வெட்ட வெளியில் உலவலாம்! பேரின்பம்! பேரின்பம்! பேரின்பமே!

இது தான் சனாதன தர்மம் உரைக்கிறது!







-ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி



புதன், 20 ஜூன், 2012

தவம் பற்றி கேள்விகள்.

1. தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்?

தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம்.

தீட்சை பெற முக்கிய தகுதி :

1 . சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
2 . போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விடு நீங்க வேண்டும்.
3 . ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும். இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் தீட்சை பெறலாம்.


2. தவம் செய்வது எப்படி?

  • தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. 
  • தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. 
  • தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. 
  • தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.
  • கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. 

கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.


இறைவன் திருவடியில் (நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே.

அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே.

குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை
நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும். இங்நனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம்.

 நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே.

நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம்.
பேரின்பம் பெறலாம்.


3 குருடர்கள் ஞானம் பெற முடியுமா?

நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது.

இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.

இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை.

இதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.

ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.

எங்கள் ஞான சற்குரு நாதர் திரு.சிவசெல்வராஜ் அய்யா 2 கண் இல்லா அன்பர்களுக்கு தீட்சை தந்து உள்ளார்.


www.vallalyaar.com

திங்கள், 18 ஜூன், 2012

வினை திரை எங்கு உள்ளது ?

காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.


 நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனையளவு ஓட்டை உள்ளது!?
அதை மறைத்து ஒரு மெல்லிய கண்ணாடி போன்ற ஜவ்வு-படலம் உள்ளது!?
இதெல்லாம் பெரும் ரகசியம்! இதை தக்கலை பீர் முகமதுவும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்! இறைவா என் இரு கண் படலத்தை நீக்கியருள் என வேண்டுகிறார்? ஞானிகள் கூற்று என்பதற்கு இதுவும் சாட்சி!

இறைவனை-ஒளியை காணாத கண்ணில் உள்ளவர் ஒளி படலம் வழியாகவே வெளியே தெரியும்! படலம் தான் நம் மும்மல திரை! (ஆணவம் கன்மம் மாயை) படலம் வழி பார்க்கின்ற மனிதனின் படலம் - வினை எப்படி
உள்ளதோ அப்படி அவன் செயல்படுகின்றான்! பார்வையே வினையாய் செயல்படுத்துகின்றது! 

படலம் இருக்கும் வரை  வினையிருக்கும் வரை சராசரி மனிதனே! சற்குருவை சரணடைந்து உபதேசம் கேட்டு தீட்சை பெற்று படலமாகிய வினை திரை அகல கண்மணி ஒளிபெருக்க தவம் செய்யவேண்டும்! படலம் அகன்றாலே நம் கண்மணி ஒளி நாம் காண நம் கண்முன் தோன்றும்! காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணுமடா என்கிறார் காகபுசுண்டர் ! உலகில் உள்ள மனிதர் அனைவருக்கும் உள் ஒளியாக துலங்கும் அந்த இறைவனை எல்லோருக்கும் பொதுவில் விளங்கும் பேரொளி, இருகண்ணும் உள்
சேரும் இடத்தில் பெருங்கண்ணாக நெற்றி கண்ணாக  அக்னி ததும்பும் அருட் கண்ணாக துலங்குகிறார் ! அதை கண்டவர் தீச்செயலை விட்டுவிடுவர்! தீச்செயலை விட்டாலே அவ்வொளியை காண்பார்! இதுவரை காணாத அம்மானுடர் கண் படலம் நீங்க பெற்று கண்ணொளி கண்டு தண்ணொளி கண்டு பேரின்பம் அடைவர்! பெறுதற்கரிய பெரும் பேறு இதுவே! குருவை நாடு! கண்ணை மூடிய படலம் நீக்க வழியறி! விழித்திரு!




ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை
கன்னியாகுமரி

திங்கள், 11 ஜூன், 2012

இறைவன் திருவடி கண்மணியே


" மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த  
அணியே அணியும் அணிக் கழகே  அணுகாதவர்க்கு
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியே நொருவரைநின் பத்மபாதம் பணிந்த பின்னே"

அபிராமி பட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி  பாடல்
இது! ஆசி வழங்கி அருள் பாலித்தார் பட்டர் பெருமான்!

மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக எழுதவில்லை!
மணியே என்றால் மாணிக்கமே என்று பொருள் சொல்லி இருக்கின்றனர். அப்படியல்ல!


மணியே - கண்மணியே, மணியின் ஒளியே கண்மணியில் உள்ள ஒளியே
ஒளிரும் மணி புனைந்த அணியே - ஒளி பொருந்திய மணியை உடைய கண்ணே, அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின்  ஒளியே, அணுகாதவருக்கு பிணியே - கண்மணி ஒளியை அணுகாதவருக்கு பிறவி பிணியே, பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணி தீர மருந்து கண்மணி ஒளியே, அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இது தான், பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியை இறைவனின் தாமரை திருவடி என்பது அதை பணிந்த நாம் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள்.


இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு ! அபிராமி  பட்டர் பிணிக்கு மருந்தே என நம் பிறவிப்பிணி தீர நம் கண்மணி யிலுள்ள ஒளி தான் மருந்து என்றார். இதையே வள்ளலாரும் நல்ல மருந்து  இம்மருந்து சுகம் நல்கும்  வைத்திய நாத மருந்து, அருள்வடிவான மருந்து அருட்பெருஞ்சோதி மருந்து என்றார்.

அபிராமி பட்டர் இறைவன் திருவடிகளை பணிந்த பின் வேறொருவரை பணிய மாட்டேன் என்றார். இதையே திருநாவுக்கரசரும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்படோம் என்று உறுதிபட கூறுகிறார்.

ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்று தான்! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றை தான் சொன்னார்கள்! நன்றை த் தான் சொன்னார்கள்!

"கண்ணின் மணியை கருத்தின் தெளிவை
விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நாந் தொழு ந் தெய்வமே"

தாயுமான சுவாமிகள் உரைத்த ஞானம்! இறைவனை, கண்ணின் மணியில்
ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும்
மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும்
எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார்
தாயுமான சுவாமிகள்.

காளத்தியான்  அவன் என் கண்ணில் உள்ளான் காண்'
என்  திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

 சனாதன தர்மம்
ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Popular Posts