பிறவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 அக்டோபர், 2023

🔥 ஆன்மநேயம் ? 🔥 சநாதனதர்மம்


நாம் செய்த முற்பிறவி பிராரத்துவ வினையால் பிறந்த நாம்,,,

இப்பிறப்பில் மேலும் மேலும் பாவஞ்செய்யாமல், நல்ல குருவை பணிந்து, திருவடி தீட்சை பெற்று இப்போது செய்கின்ற கர்மங்களை பகவான் பாதத்தில் அர்ப்பணித்து எல்லாம் நீயே என பரிபூரண சரணாகதி அடைந்து வாழ்வோமானால் ஆகாமியகர்மம் நம்மை சேராது.

இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை !
" கர்மாவை செய் பலனை என்னிடம் விட்டுவிடு "

என பகவத் கீதையில் கண்ணன் உரைத்ததை சிந்திக்கவும்.

" எல்லாம் அவன் செயல் "
என்பதை முழுமையாக உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை !

" என் செயலாவது யாதொன்றுமில்லை "
என முழுமையாக இறைவனிடம் - திருவடியில் சரணடைந்து வாழ்வதுதான் வாழ்க்கை.

" நான் யார் "
என்பதை அறிய முற்படுவதே அதற்காக பிரயர்த்தனபடுவதே வாழ்க்கை !

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம். பெரியவன் சிறியவன் எல்லாம் கிடையாது.

எல்லாதொழில் செய்பவரும் வேண்டும் !

எல்லோரும் எல்லா தொழிலையும் செய்ய முடியாது ! எல்லோரும் தத்தம் கடமையை சரிவரச் செய்தாலே நாடு சுபிட்சமடையும், மனித வாழ்க்கை மேம்படும்.

இப்போது நமக்கு கிடைத்த வாழ்க்கை எப்படிபட்டதாயினும் சரி, அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து சிறப்புடன், அர்ப்பணிப்பு மனபாவத்துடன் வாழ்ந்தால் ! யாரும் வாழ்வாங்கு வாழலாம் !

நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதுவும் செய்துவிட முடியுமா ?

போலீஸ், கோர்ட்டு இதெல்லாம் எதற்கு ?

நம் சுதந்திரம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். பிறரை துன்புறுத்தாத செயல்களை செய்யத்தான் நமக்கு சுதந்திரம் இருக்கிறது.

நம்மால் ஒரு சிறு உயிருக்கும் எப்போதும் எந்த துன்பமும் வராமல் வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை !

இன்றைய உலகில் எல்லோரும் மனிதநேயம் வேண்டும். மனிதநேயம் உலகம் முழுவதும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்திய ஞானிகள் என்றோ இதைவிட மேலாக உபதேசித்துள்ளனர்.


"ஒன்றேகுலம் ஒருவனே தேவன்"
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
"எவ்வுயிரும் தம்முயிர் போல் கருதுக"


இப்படி மனிதநேயத்தைவிட மிக உயர்ந்த ஆன்ம நேயத்தை போதித்தனர் !

மனிதனை மட்டும் நேசிக்க சொல்லவில்லை !
எல்லா ஜீவராசிகளையும் உன் உயிர்போல் அன்புகாட்டு என்பதே ! சிறந்தது.

உலகுக்கே இந்திய நாடு ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்றது.
இதுவே இந்தியாவின் பெருமை.

மனம் விரிந்து பரந்து இருக்க வேண்டும். எல்லா ஆத்மாவும் இறை சொரூபந்தான் என்பதை உணர வேண்டும்.

அதுதான் வாழ்க்கை.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

புதன், 30 ஆகஸ்ட், 2023

🔥 பிறவி ? 🔥 நூல் : சநாதனதர்மம்



நூல் : சநாதனதர்மம் 1

🔥 பிறவி ? 🔥

மனிதனாக பிறக்கவே மாதவம் செய்திடல் வேண்டும் என்றார்கள்.
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஒளவையார் வாக்கு.
மனிதனாக பிறந்த நாம்தானே மற்றெல்லா உயிர்களையும் அடக்கி ஆள்கிறோம்.
நாம் பிறந்த தேதி மாதம் வருடம் தெரியும் எங்கிருந்து பிறந்தோம் ?
தாயின் கருப்பையில் 10 மாதம் இருந்தது தெரியுமா நமக்கு ?

பிறந்து வளர வளரத்தானே ஒவ்வொன்றாக அறிகிறோம்.
தாய் தந்தை சுற்றம் உலகம் இப்படி ஒவ்வொன்றாக அறிந்து வளருகிறோம்.
அறிவிக்கப்படுகிறது. தெரிவிக்கபடுகிறது. சூழ்நிலையாலும் மாறுபடுகிறது.
அறிவிப்பவர் அறிவுக்கு தகுந்தபடி ! புகட்டப்படுகிறது. இவையெல்லாம் எப்படி நிகழ்கிறது ?
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் கரு உருவாகிறது !
உருவாகும் கரு எல்லாம் உருப்பெறுவது இல்லை !

கல்யாணமாகி குழந்தையில்லை என ஏங்குவோர் கோடி கோடியாக உள்ளனரே !
ஆணும் பெண்ணும் சேர்ந்தால் பிண்ட உற்பத்தி மட்டும் தான் !
உடல் என்னும் அற்புதமான இயந்திரத்தை உருவாக்கியவன் யார் ?
உடல் இயங்க அதற்கு உயிர் அவசியமல்லவா ? உயிரை கொடுத்தது யார் ?
மனிதனால் உயிரை கொடுக்க முடியுமா ? உயிர் என்றால் என்ன ?
கருவிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு உயிர் இருந்தால் தானே நாம் மகிழ்வோம்.

பிறக்கின்ற குழந்தை அழுதால் நாம் மகிழ்வோம் !
பிறக்கின்ற குழந்தை அழவில்லையெனில் நாம் அழுவோம் !
கருவிலே உருவாகும் பிண்ட உற்பத்தி, அதன்பின் உயிர் சேர்தல் எப்படி நடக்கின்றது ? யாரால் ?
உருவானால் !? பத்திரமாக வளர்க்கத்தான் நம்மால் முடியுமே தவிர உருவாக்க முடியாது !?
நமக்கு அப்பார்ப்பட்ட ஒரு சக்தி இதையெல்லாம் நடத்துகிறதல்லவா ?
அந்த சக்தி எது ? எதன் அடிப்படையில் நடக்கின்றது ?
இதற்கெல்லாம் விடை, உலகில் ஞானபூமியாக விளங்கும்
இந்திய நாட்டின் ஞானிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

இந்த உலகம் எப்போது தோன்றியதோ ! மனிதன் எப்போது தோன்றினானோ ?!
கணக்கிட முடியாத காலத்திற்கும் முன்னது இங்கே இருந்த ஞானிகள் வாழ்க்கை !
உபதேசம் ! நூல்கள் !

உலகமனைத்திற்கும்,,,
ஒரே நெறி ! ஒரே வாழ்க்கைமுறை ! ஒரே கடவுள் ! ஒரே பண்பாடு !

அதுவே "சநாதனதர்மம் !"
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

திங்கள், 5 ஜூன், 2023

தொடர்ந்து நின்றானைத் தொழுமின்

"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறனெறி நாடில்" 

திருமூலர் பாடல் - 20

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும்? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன்! இதுவே தேவ இரகசியம்! நாம் என்று? எங்கு? யாருக்கு? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார்? அடிகள் உறையும் அறனெறி நாடு - அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன. அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம்! கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.

 "தொடர்ந்து நின்றானைத் தொழுமின்" 

திருமூலர் பாடல்-26

நாம் எத்தனை பிறவி எடுத்தோமோ தெரியாது? பிறவி தோறும் நம்மோடு உடனிருந்தவன்! தொடர்ந்து ஒவ்வொரு பிறவியிலும் நம்முடனேயே நம் உடலுள்ளேயே நம் உயிராக இருந்தவன் அவன் தானே! அந்த இறைவன் தான்! எல்லா பிறப்பிலும் நமக்கு உற்ற துணை பரம் பொருளான நம் உயிர் அல்லவா? அதை தொழ வேண்டாமா? அதை அறிய, வேண்டாமா? இப்பிறப்பிலுள்ள அப்பா அம்மா மனைவி மக்கள் சொந்தம் பந்தம் நட்பு எதுவும் நம்முடன் இல்லை! அப்பன் எத்தனை அப்பனோ? அம்மை எத்தனை அம்மையோ இன்னும் எத்தனை பிறவியோ, முன்னும் எத்தனை ஜன்மமோ? யாரறிவார்? ஒன்றுமட்டும் உண்மை எல்லா பிறவியிலும் உயிராக இருந்தது இறைவன் தானே! அப்படியானால் எல்லாம் அவர் அறிவார் அல்லவா? அவரை சரணடைந்தால் நாம் உண்மை அறிய முடியுமல்லவா? எல்லாம் அறிந்த அவரால் நம்மை வழி நடத்த முடியும்? அந்த பரம்பொருளை சரணடைந்தால் தானே நாம் உருப்பட முடியும்! உன்னுள் இருக்கும் ஒண்பதத்தை தொழு! நீ கதி மோட்சம் பெற இது ஒன்றே வழி!

(ஒண்பதத்தை தொழு!)

இறைவன் திருவடியாக விளங்குகின்ற நமது கண்மணியில் உணர்வுடன் தவம் செய்.  

ஞான சற்குருவின் திருவடியே சரணம்  🙏🙏🙏


www.tamil.vallalyaar.com

வெள்ளி, 30 டிசம்பர், 2011

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!


இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம்  மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?

இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து  இனியும்  பிறப்பது அல்ல!?

இந்த பிறவி இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குதான் நம் ஞானிகள் வழி
கூறுகிறார்கள்.

அது என்ன? எப்படி? நாம் ஞான குரு ஒருவரை பெற்று
உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே  மறுபிறவியாம்! அதாவது
உடலால் பிறந்த நாம் உணர்வால் நம் சூட்சம உடலை பிறப்பிக்க ஒரு
குருவை பெற்றே ஆகவேண்டும்!

யார் நம்மை, சூட்சம சரீரத்தை பிறப்பிக்க செய்கிறாரோ அவரே குரு!
நம் வாழ்வின் பெரும் பேறே இதில்தான் இருக்கிறது!  ஞானமடைய
இதுவே வழி!


நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும
தேகம் உள்ளது! முதலில் அதை உணரவேண்டும்! குருவானவர் தீட்சையின்
மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்க செய்கிறார்!

ஸ்தூல தேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறு பிறவி!
பிறந்த இப்பிறவியிலே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!
இதை யார் உணர்கிறார்களோ அவரே ஞானம் பெறுகிறார்!

வேதங்களில் சொல்லபடுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே!

மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்"
மறுபடியும் பிறந்தால் தான் பரலோக ராஜ்யம்!? எப்படி?
எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ?  அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!

அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழி கூறும் உபநயனம்!

வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்! 

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!

பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான  தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!


குரு   மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று  தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை"  என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!

பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்! 

சனாதன தர்மம் - சற்குரு சிவசெல்வராஜ்.
http://www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Popular Posts