புதன், 24 ஏப்ரல், 2024

எல்லோர் உள்ளிலும் இறைவன் இருக்கிறான் !



"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்"

அன்னதானம், பசித்த யாராயினும் அவர் யார் என விசாரியாமல் பசிக்கு உணவு கொடுக்கணும் ! சுத்த சைவ உணவையே வழங்க வேண்டும்.

பணக்காரனும் பசிக்கு சோறுதானே சாப்பிட வேண்டும் பணத்தையா சாப்பிடுவான் !
எல்லோருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கு உணவு கொடுங்கள் !

ஜீவனுக்கு கொடுக்கும் உணவு சிவனுக்கே வழங்கும் நைவேத்தியமே !

அன்னதானத்தை விட மேலானது ஞானதானம் !

ஞானதானம் யார்க்கும் சொல்லலாம் ! பாவி துஷ்டன் ஆண் பெண் என்றெல்லாம் பார்க்க வேண்டாம் !

எல்லோர் உள்ளிலும் இறைவன் இருக்கிறான் ! உள்ளிருக்கும் சிவனை ஒவ்வொரு ஜீவனுக்கும் உணர்த்துங்கள் ! இதுவே ஞானதானம் !

தானத்தில் சிறந்தது ஞானதானமே !

" அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்றல்லவா !"

என்ன எழுத்து ' அ ' ' உ ' என்ற எட்டையும் இரண்டையுமே !
இதுவே ஞான எழுத்து ! ஞானம் தரும் எழுத்து ! நம் தலை எழுத்தை மாற்றும் எழுத்து ! ஜீவனை சிவனாக்கும் எழுத்து !  லட்சம் பேர்களுக்கு சோறு போடுவதை விட ஒரு மனிதன் ஆத்ம ஞானம் பெற ஞானதானம் செய்வதே சாலச் சிறந்தது !! அடியேன் இங்ஙனம் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஞானதானம் செய்துள்ளேன். இறைவன் அருள்கிறான் அடியேன் தானம் செய்கிறேன் ! 

அடியேனுக்கு இந்த ஜீவனை சிவனாக்கும் வேலை மட்டுமே !

வேறு வேலை கிடையாது !
சோம்பி இருக்கிறேன் !
சும்மா இருக்கிறேன் !

எனவே தான் அழைக்கிறேன் யாராயினும் வரலாம் ஞானதானம் பெறலாம் !
கன்னியாகுமரி வருக ! அருள் பெறுக !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

திங்கள், 8 ஏப்ரல், 2024

தோணி போல் காணு மடா அந்த வீடு

🔥திருமந்திரம் 1554 - ஞானவிளக்கம்🔥

"அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி"

நம் கண்ணே "தோணி" என்கிறார் !

தோணி போல் காணு மடா அந்த வீடு என்கிறார் ஒரு சித்தர் !
திருமூலரும் அந்த வீடு கண்ணாகிய வீட்டை தோணி என்றே பரிபாஷையாக கூறுகிறார் !


குருதீட்சை பெற்று தெளிந்து அறிவாக கண்மணி ஒளியில் நிலைத்து தவம் செய்பவரே 
பெறுவர் ஞானம் !

தோணியிலே - கண்ணிலே ஏற்றும் கனல் உள்ளே ஆத்மஸ்தானத்தால் ஈர்க்கப்படும் !

அறிவு துலங்கும் ஆத்மஸ்தானம் அழைத்ததாக கூறுவது இந்நிலையே !

இப்போது தோணியில் வேண்டாத குப்பைகள் பெரும்பாரமாக இருக்கின்றது.

தோணி அக்கரையை அடைய வேண்டாத மும்மலக் குப்பை பாரத்தை கடலில் தூக்கி வீச வேண்டும் ! பாரம் இல்லையெனில் தோணியை விரைந்து ஒட்டி அக்கரையை அடையலாம் !

அக்கரை சேர மிகுந்த அக்கறை வேண்டும் !

அக்கரையில் அல்லவா இருக்குது ஆனந்தம் தரும் அமுதம் !

"இக்கரை கடந்திடில் அக்கரையே இருப்பது சிதம்பர சர்க்கரையே"
 என வள்ளலார் பாடி மகிழ்கிறார் ! தோணியில் ஏறித்தான் போக முடியும் !


சீர்காழியிலே கோயில் கொண்ட இறைவன் திருநாமம் தோணியப்பர் !
கண்ணே தோணி ! இறைவனையடைய உதவும் பிரயாணம் செய்ய தேவை !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

கண்ணன் அருள்பெறலாம்! ஸ்ரீபெரியாழ்வார்

 #வைகுண்டஏகாதசி : #ஸ்ரீபெரியாழ்வார்

🔥கண்ணன் அருள்பெறலாம்!🔥

"அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!"
காயாம் பூ வண்ணம் கொண்டாய்".

- (பாடல் 249)

அழகிய ஒளியுடைய சக்கராயுதத்தை கையில் தரித்திருப்பவனே ! அழகனே !

இந்த உலகத்தில் எது அழகு ?

பெண்களா ?
இயற்கையா ?
அடுக்கு மாடி கட்டிடமா ?
கோபுரமா ?
சிற்பமா ?
சிலையா ?
யார் ? எது ? தெரியுமா ?

இந்த உலகத்திலேயே அழகு பேரழகு ஒளி தான் !! ஜோதியே அழகு !

விளக்கு நிறைய ஏற்றுங்கள் அதுதான் பேரழகு ஜோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே என அதன் அழகில் லயிக்காத ஞானியே யில்லை எனலாம் !

ஒளியே அழகு ஒளிமிகுந்த கண்ணன் கையில் ஒளியான சக்கராயுதம் ! அழகுக்கு அழகு !

நமது வலது கண்ணே சக்கரம்.
இடது கண் சங்கு !

இடது கண் ஒலி - வலதுகண் ஒளி !

ஐம்பூதங்களும் ஒருங்கே அமையப் பெற்ற கண்ணில் ஐம்பூதமே அஞ்சுடர் ! வலக்கையில் வலது கண்ணில் அஞ்சுடர் ஆழி - சக்கராயுதம் !

ஒருசமயம் கண்ணன் சிவனை 1008 மலர்களால் பூஜிக்க முனைந்த போது ஒரு பூ குறைந்ததாம் !

1007 மலரை சிவன் திருவடியில் சமர்ப்பித்தாயிற்று !!
இன்னும் ஒரு மலருக்கு எங்கே போவது ?

கண்ணன் என்ன செய்தான் தெரியுமா ?

தன் கண்மலர் ஒன்றையே எடுத்து 1008வது மலராக சிவனின் திருவடியில் சார்த்தி வணங்கினான் அகமகிழ்ந்த சிவன் சக்கராயுதத்தை மகா விஷ்ணுக்கு வழங்கினார் !

கண்மலரையே இறைவனுக்கு அர்ப்பணித்ததால் அக்கண்ணே, வலதுகண்ணே சக்கராயுதமாம் ! கண்ணை சமர்ப்பித்ததால் மகா விஷ்ணுவே கண்ணனாம் ! புராணமே ஞானம் !

சரியான குருமூலம் சரியாகபொருள் அறிந்து தவம் செய்து நீங்களும் கண்ணன் அருள்பெறலாம் !

கண்ணன் சிவனுக்கு சமர்ப்பித்த கண்மலர் காயாத மலர் ! வாடாத மலர் ! காயாம் பூ !

அந்த காயாம் பூ கண்மணி நிறத்தவனே கண்ணன் ! 
அதன் மத்தியிலே ஊசிமுனை அளவு ஒளியாக திகழ்கிறான் !

#கிருஷ்ணமணி ! #கண்மணி ! #கண்ணன் ! #கிருஷ்ணன் ! #மணிவண்ணன் !
அவனே #திருமால் ! #மகாவிஷ்ணு ! #புருஷோத்தமன் ! #பார்த்தசாரதி ! #பரந்தாமன் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
#பெரியாழ்வார் #மலரடி போற்றி !!
#வள்ளலார் #திருவடி போற்றி !!
#ஞானசற்குரு #சிவசெல்வராஜ் அய்யா
#vallalar #meditation #thiruarutpa
www.vallalyaar.com

வியாழன், 4 ஏப்ரல், 2024

திருமந்திரம் ஞானவிளக்கம்


🔥திருமந்திரம் 373 - ஞானவிளக்கம்🔥


"வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே"

 வானேழுலகுறும் - இப்பிரபஞ்சம் எல்லையில்லாமல் விரிந்து பரந்த வான் வெளிதானே ! 
 எல்லாமே வான் வெளியில் வெட்ட வெளியில் தானே கொட்டிக்கிடக்குது ! 
 அப்படிப்பட்ட வான்வெளி எங்கும் நிறைந்திருக்கும் ஒவ்வொரு அணுவிலும் அணுவாக ஒளியாக இருப்பவனல்லவா ஆண்டவன் ! ஆண் - மகன் ! 

 ஒவ்வொரு அணுவையும் ஆண்டு கொண்டு இருப்பவன் ! இப்பிரபஞ்சத்தின் ஒரே ஆண் ! புருஷோத்தமன் இறைவனே ! 

பரமாத்மாவாகிய இறைவனே ஆண் !
ஜீவாத்மாவாகிய நாமனைவருமே பெண் !

அந்த ஆணுடன், ஆண்- டவன், ஆண்அவனுடன் சேர்வதே பெண்ணாகிய நமக்கு பெருமை ! பெண்ணாகிய நம் வாழ்வும் பூரணமாகும் !

ஞானம் எவ்வளவு சுவையானது பாருங்கள் !

🙏இந்த ஆண்மகன் என் மணியிலும் கண்மணியின் உள்ளிலும் இருப்பதை யான் 
அறிந்தேன் குரு உபதேசத்தாலே ! அறிவித்தான் என் கண்மணியான ஒளியே !🙏

அவன் அருளாலே அவன் திருவடியை என் கண்மணியை அறிந்து உணர்ந்து அவனையே அடைந்தேன் !

எல்லாம் அவன் செயல்தானே !

அவனே - சிவனே என் கண்ணாக இருந்து அறிவித்து தன்னோடு என்னை சேர்த்தும் கொண்டான் !

எல்லாம் அவன் செயலே தான் ! சந்தேகமேயில்லை !

"அவனருளாலே அவன் தாள் பணிந்து" என மணிவாசகர் மணிவாசகம் - திருவாசகத்தில் பகர்ந்ததை உணர்க !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

உணர்வின் மூர்த்திதான் இறைவன்


🔥திருமந்திரம் 2938 - ஞானவிளக்கம்🔥

 
"உணர்வுடை யார்கட்கு உலகமுந் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண்டாரே"

 
சற்குரு மூலம் மெய்ப்பொருளில் - கண்களில் உணர்வுடையார் தவம் செய்து செய்து மேலும் மேலும் உணர்வை பெருக்கினால் அவர்கள் முன் முதலில் தோன்றுவது உலகம் ! உலகை பார்க்கின்ற கண்கள் உலகம் - பூமியைப் போல் இருக்கின்ற கண்மணி !

ஞானசாதனை செய்து உணர்வை பெருக்கியிருக்கின்றவர்களுக்கு மூவினைத்துயர் அற்றுப் போகும் ! 

தவசீலர்கள் உணர்ந்தபோதே, கண்ணில் உணர்வை பெருக்கி உள்சென்று ஆத்மாவை உணர்ந்த அப்போதே இறைவனை உணர்ந்தவர் யாவார் !

தன்னை உணர்ந்த அக்கணமே தான் ஆன இறைவனையும் உணர்வார்கள் காண்பார்கள் !

எப்போதும் உணர்வு இருந்தால் மரணம் இல்லை !

உணர்வு அற்றுப் போனால் தானே மரணம் !

எப்போதும் உணர்வு இருந்தால் ஒளி பெருகி ஜீவஜோதி பிரகாசிக்கும் !

ஊன உடலே ஒளி உடலாகும் !

அதன்பின் உயிர் பிரியாது ! சிரஞ்சீவியாவான் !

"உணர்வின் மூர்த்திதான் இறைவன்"

என நம்மாழ்வார் கூறுகிறார் !

"உதிக்கின்ற உச்சித்திலக உணர்வுடையார்"

என அபிராமிபட்டரும் அழகாக கூறுகிறார் !

"நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து"

என வள்ளலாரும் பாடியருள்கிறார் !

உணர்வோடிரு !

உன்னை நீ அறியலாம் !

பேரின்பம் பரவசம் பெறலாம் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

-ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts