அக்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அக்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 நவம்பர், 2025

சூரியன் 12 கலை சந்திரன் 16 கலை அக்னி 8 கலை

"பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி
ஒத்த நல் அங்கிய தெட்டெட் டுயர் கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே"

பத்தும் இரண்டும் பகலவன் கலை !
பன்னிரண்டு ஒளிக் கலைகளையுடையது சூரியன் நமது வலது கண் !

பதினாறு ஒளிக் கலைகளையுடையது சந்திரன் நமது இடது கண் !
இவ்விரண்டு கண்ணும் ஒத்து - ஒன்று சேர்ந்து உள்ளே சேரும் இடம் அக்னிகலை !
அது எட்டு கலை எட்டின் விரிவுமாகும் !

இம்மூன்று கலைகளையும் ஒளிக்கதிர்களையும் ஒன்றிணைப்பதே நம் ஞான சாதனையாகும் !

சூரியன் 12 கலை
சந்திரன் 16 கலை
அக்னி 8 கலை

முதலில் இம் மூன்றும் சேர 36 கலையாகும் !
ஆத்மஸ்தானம் அடைந்தவன் 36 கலை பெற்றவன் 36 தத்துவம் வென்றவன் என்பர் !

ஒப்பற்ற உயர்ந்த ஞான சாதனை இது !

சந்திரனின் ஒவ்வொரு ஒளிக் கலையும் சூரியனுடன் ஒவ்வொன்றாக சேரும் 
இப்படி சூரியகலை 12 உடன் சந்திர கலை 12 சேரும் !

எஞ்சிய சந்திர ஒளிக்கலை 4 சூரியனை ஊடுருவி அக்னி கலையுடன் சேரும் !

அங்கே ஏற்கனவே 8 கலை உண்டு இந்த 4ம் அங்கே போய் சேர்ந்ததும் அதுவும் 
12 கலையுடன் மிளிரும் !


இப்போது

சூரியகலை 12
சந்திரகலை 12
அக்னிகலை 12

என மூன்றும் ஒன்றாகவே ஒரே நிலைபெறும் !

இதுவே, " முச்சுடரும் ஒன்றாகி முடிந்ததோர் ஜோதி பாதம் அச்சுதனும் அயனும் காணா அனந்தமாம் பாதம் " என ஞானிகள் கூறுவர் !
அந்த பாதம். பதம் அடைந்தவர் தன்னை அறிந்தவராவார் ? தத்துவம் 36-ம் கடந்த ஆத்ம ஞானியாவார் !
என்னுள்ளிருந்து நந்தி உரைக்க அடியேன் எழுதிவிட்டேன் எல்லா ஞான இரகசியங்களையும் !அனுபவங்களையுமே !

படித்து தெளிந்து உணர்ந்து பண்படுக !


இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

வியாழன், 13 ஜூன், 2024

🔥திருமந்திரம் 1682 - ஞானவிளக்கம்🔥

 🔥திருமந்திரம் 1682 - ஞானவிளக்கம்🔥

"தாய்முலையாவது அறியார் தமருளோர்"


நம்மை பெற்றெடுத்த தாய், பிறந்தவுடன் நமக்கு பால் தந்து சீராட்டி அருமையாக வளர்த்தாள் ! 

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி நமக்கு அமுதம் தந்து இறைவனிடம் சேர்ப்பிப்பாள் இறைவி ! 

உலகத்து உயிர்க்கெல்லாம் தாயே அந்த இறைவி ! வாலை ! தாய் ! 

அந்த தாய் இருப்பது நம் சிர நடு உள் !      அக்னி கலை - ஜீவஸ்தானம் ! 

"உச்சிக்கு கீழே அண்ணாக்கின் மேலே," அமுதம் சொட்டும் ! 

      அப்படியானால் அங்கேயும் தமர் - ஓட்டை உள்ளதல்லவா ? அதுவே தாய் மார்பு ! உருவகம் - பரிபாஷை ! மார்பிலிருந்து அமுதம் வரும் ! 

நாம் நம் இரு கண்மணி ஓட்டை வழியே தவம் செய்து வருங்கால் மணியிலுள்ள ஒளி பெருகி ஓட்டை வழி உள் சென்று ஜீவஸ்தானத்தை அடையும் ! "அந்தக் கரு விந்து நாதம்"! தாய் இருப்பிடம் ! 

தாய் அமுதூட்டி தந்தையிடம் அனுப்பிவைப்பாள் ! 

    இந்த அமுதம் சாப்பிட்டவர் வினையகன்று மரணமிலாது பேரின்பம் பெறுவர் ! சீரஞ்சீவியாக வாழ்வர் ! பசிதாகம் அற்றுப்போகும் ! காயசித்தி பெறுவர் ! அழியாத உயிரைப் போல உடலும் அழியாத ஒளித்தன்மை பெறுவர். 

தாய்ப் பால் குடித்து வளரும் பிள்ளையே தவராஜ சிங்கமாகும் ! ஞானியாவான் ! சித்தனாவான் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

புதன், 4 மார்ச், 2020

சுருதி - யுக்தி - அனுபவம் மூன்றும் தான் பூரணமான நிலை!

"சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட்டோ டுமே"

பாடல் - 1631 திருமந்திரம்


வேத சாத்திரம் புராணம் இதிகாசம் உபநிஷத்து இன்னும் உள்ள
ஞான நூற்களையெல்லாம் ஓதிக் கொண்டேயிருந்தால் போதுமா?
கடவுளை பாடி மகிழ்ந்தால் மட்டும் போதுமா? லட்டு இனிக்கும்
என்றும் அது எப்படி செய்யலாம் தித்திக்க என்ன வேண்டும் என
சொல்லிக் கொண்டேயிருந்தால் இனிக்குமா என்ன?!

"சுருதி" என நூற்களை பெரியோர் கூறுகின்றனர்!
சுருதி சொன்னதை "யுக்தி”யால்
சிந்தித்து தெளிந்து - தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து புரிந்து பின்
அனுபவத்தில் பார்க்கவும் வேண்டும்!

சுருதி - யுக்தி - அனுபவம்
மூன்றும் தான் பூரணமான நிலை! ஓதியதை உணர்க! செயல்படுக!
அப்போதுதான் உண்மை விளங்கும்!

லட்டு இனிக்கும் என்றால்
சாப்பிட்டு பார்த்தால் தானே தெரியும்?! ஞான நூல்களில்
சாத்திரங்களில் எல்லாமே சொல்லப்படுகிறது! முடிந்த முடிபான நிலை
ஞானத்தை பெற என்ன சொல்லப்பட்டிருக்கிறது என பார்த்து புரிந்து
அதன்படி நடக்கணும்!

வேத சாத்திரங்கள், எல்லாம் வல்ல இறைவன்
நமது உடலில் கண்களில் மணியில் ஒளியாக துலங்குகிறான் என
திரும்பத் திரும்ப கூறுகின்றன!

 கண்ணில் மணியில் ஒளியை
நினைத்து உணர்ந்து அங்கேயே நிலைத்து நின்றால் அதுவே திருவடிதவம்
என்றும் எல்லா ஞானியரும் கூறியிருக்கின்றனர்! அங்ஙனம் தவம்
செய்கையில் கண்மணி ஒளி உள்ளே போகும் இரு கண்ணும்
உள்ளே சேரும் அக்னி நிலையை அடையும்! இதுவே சாதனை
அபைவம் ! தவப்பயன் !

ஏ, மனிதா ஒரு மாத்திரை நேரமாய்
கண் சிமிட்டும் நேரம் மட்டிலாவது கண்மணி ஒளியை புறப்பார்வையிலிருந்து 
மாற்றி அகப்பார்வையாக மாற்று ! உள்நோக்கு !


எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா? பசுமரத்தாணி போல் உள்ளே
விரைவாக செல்ல வேண்டும்! ஊன்றி பதிய வேண்டும் ! தவம்
அங்ஙனம் நிலைத்து நீடித்தால் இறப்பு என்பது இல்லாதாகும்!

பிறப்புக்கு சந்தர்ப்பமே இன்றி பிறந்த இப்பிறவியிலேயே முக்தி
பெறுவோம்!

" நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே "

- அருள் விளக்கமாலை - ஆறாம்திருமுறை - திருவருட்பா


ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு
திரு சிவசெல்வராஜ் அய்யா
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை
கன்னியாகுமரி

வெள்ளி, 30 டிசம்பர், 2011

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!


இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம்  மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?

இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து  இனியும்  பிறப்பது அல்ல!?

இந்த பிறவி இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குதான் நம் ஞானிகள் வழி
கூறுகிறார்கள்.

அது என்ன? எப்படி? நாம் ஞான குரு ஒருவரை பெற்று
உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே  மறுபிறவியாம்! அதாவது
உடலால் பிறந்த நாம் உணர்வால் நம் சூட்சம உடலை பிறப்பிக்க ஒரு
குருவை பெற்றே ஆகவேண்டும்!

யார் நம்மை, சூட்சம சரீரத்தை பிறப்பிக்க செய்கிறாரோ அவரே குரு!
நம் வாழ்வின் பெரும் பேறே இதில்தான் இருக்கிறது!  ஞானமடைய
இதுவே வழி!


நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும
தேகம் உள்ளது! முதலில் அதை உணரவேண்டும்! குருவானவர் தீட்சையின்
மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்க செய்கிறார்!

ஸ்தூல தேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறு பிறவி!
பிறந்த இப்பிறவியிலே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!
இதை யார் உணர்கிறார்களோ அவரே ஞானம் பெறுகிறார்!

வேதங்களில் சொல்லபடுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே!

மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!

"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்"
மறுபடியும் பிறந்தால் தான் பரலோக ராஜ்யம்!? எப்படி?
எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ?  அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!

அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழி கூறும் உபநயனம்!

வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்! 

துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!

பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான  தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!


குரு   மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று  தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.

"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை"  என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!

பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்! 

சனாதன தர்மம் - சற்குரு சிவசெல்வராஜ்.
http://www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

Popular Posts