செவ்வாய், 31 அக்டோபர், 2023

தனிஒருவன் மாறனும் ! - சநாதனதர்மம்

நூல் : சநாதனதர்மம் 20

🔥 தனிஒருவன் மாறனும் ! 🔥

 அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல். அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

நல்வழி காட்டும் நல்ல ஒரு குரு தேவை.
நன்னெறி நடத்தும் வல்ல ஒரு குரு தேவை.
ஞான குரு வேண்டும் !
இறைவனை உணர்த்தும் குரு வேண்டும் !

எவன் ஒருவன் பேதம் பார்க்கிறானோ
அவன் இறைவனை அடைய முடியாது !
எவன் ஒருவன் தீயபழக்கம் உடையவனோ
அவன் இறைவனை அடைய முடியாது !

எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரும் இன்புற்றிருக்க 
எண்ணுபவன் எவனோ எல்லாவுயிரிடத்தும் அன்பு காட்டுபவன் எவனோ 
அவனே இறைவனை அடைவான் !

அவனே ஞானவான் !

அரபியில் சொன்னாலும், ஹீப்ரூவில் சொன்னாலும், சமஸ்கிருதத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் எல்லோராலும் சொல்லப்பட்டது - இறைவனைப் பற்றி மட்டுமே !

மொழியை பார்க்காதீர்கள் !
உபதேச மொழியை பாருங்கள் !?

இனத்தை நாட்டை பார்க்காதீர்கள் !
மனித இனம்தான் என உணருங்கள் !?

ஒவ்வொருவரும், நான் மனிதன் ! உலகிலுள்ள அனைவரும் என் 
சகோதர சகோதரிகள் என என்றைக்கு உணருகிறார்களோ அன்றுதான் உலகம் சுபிட்சமடையும் !

மதத்தை பரப்ப நினைக்காதீர்கள் !
மதம் எனும் ஆணவம் கொண்டு அலையாதீர்கள் மனிதனாக பாருங்கள் !

மனிதகுலம் தழைக்க பாடுபடுங்கள் !
எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.

🔥 இதெல்லாம் வர வேண்டுமானால் அதற்கு ஒவ்வொரு வரும் தன்னை 
உணர்வதுதான் ஒரே வழி ! இறைவனை உணர்வதுதான் !🔥

தனி ஒருவன் மாறினாலே, சமுதாயம் மாறும் !
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

தனிமனிதன் மாறவே தவஞானிகள் அருள்புரிகிறார்கள். காப்பாற்றுகிறார்கள்.

நான் நல்லவனாக இருக்க வேண்டும் !
என எல்லோரும் எண்ண வேண்டுமே !? இதற்கெல்லாம் தான் குரு வேண்டும்!

உலகுக்கே ஆதி குரு முதல் குரு "ஸ்ரீ தட்சிணாமூர்த்தி"தான் !
இதுவே உண்மை !

அதன்பின் தந்தைக்கே உபதேசித்தான் தனயன் !? ஆறுமுகங் கொண்டவன் !

அகத்தியருக்கும் உபதேசித்தான் !

அருணகிரிக்கும் உபதேசித்தான் ! அழகனே !

இந்த வழிவந்த, வாழையடி வாழையென வந்தவர்தான் 
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 27 அக்டோபர், 2023



நூல் : சநாதனதர்மம் 19

🔥 இப்பிறவி ஆண்டவனை அடையவே! 🔥

இராமலிங்க சுவாமிகளை சத்குருவாக கொண்டுதான் அடியேன் வாழ்கிறேன்.


இராமலிங்க சுவாமிகள் உரைத்த திருவடி ஞானத்தைத் தான் எங்குரு ஜோதி இராமசாமி தேசிகர் எமக்கு உபதேசித்தார், தீட்சை வழங்கினார்.
 
கடந்த இருபத்தைந்து ஆண்டாக சாதனைகள் செய்து, இராலிங்க சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு கண்ணியனானேன் !
 
எமக்கு இராமலிங்க சுவாமிகளை சுட்டிக்காட்டி, உணர்த்திய ஞானசித்தர் திருச்சி ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி கொள்ளுமுன் அடியேனை அழைத்து குரு பீடத்தை அளித்தார்கள்.
 
அடியேனை பக்குவபடுத்தி, முதல் 12 ஆண்டு முடிவில் " கண்மணி மாலை " எழுதி வெளியிட வைத்தார்கள் !
 
அடுத்த 12-வது ஆண்டிற்குள் என்னை குருபீடத்தில் இருத்தி விட்டார் வள்ளலார்."குச்சண்டி - குச்சண்டி" என்று பாபாவும் அருள்வாக்கு கூறினார்.

 பாலாவின் கோயிலிலேயே அடியேனை குருவாக அமர வைத்தனர்."வலிந்து என்னை ஆட்கொண்டார் வள்ளலார்"

இப்போது 5 வருடங்களாக குருவாக அமர்ந்து எல்லா ஞானிகளும் உரைத்த திருவடி ஞானத்தை உபதேசித்து வருகிறேன், தீட்சை வழங்கி வருகிறேன் இறைவன் அருளால் !

"எல்லாம் அவன் செயல்"
"பாட்டுவித்தால் பாடுகிறேன் பணிவித்தால் பணிகிறேன்"
 "என் செயலாவது யாதொன்றுமில்லை"
 அடியேனை குருவாக இருத்தி, உள் இருந்து தீட்சை வழங்குவதும் அவர்களே !
 சென்னையிலும் நெய்வேலியிலும் பலநூறு அன்பர்கள் அடியேனிடம் தீட்சை பெற்றுள்ளனர்.
 கன்னியாகுமரிக்கு வந்து அடியேனிடம் தீட்சை பெற்றவர்களும் பலர்.
 அடியேன் செய்த புண்ணியம் ! ஞானவான்களின் அருள் கிட்டி இன்று ஞானகுருவாக இருக்கிறேன் அவர்கள் இட்ட பணியை செவ்வனே செய்கிறேன். செம்மையாக செய்ய வைப்பதும் அவர்களே !
 
உலகோரே வாருங்கள் !
உபதேசம் பெறுங்கள் !
தீட்சை பெறுதல் அவசியம் !
 
அரிதான இப்பிறவி ஆண்டவனை அடையவே !
காலந் தாழ்த்தாதீர் கண் திறக்க வாருங்கள் !

குரு யார் என தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம்.


 🔴தன் ஜாதியில் உள்ள சாமியாரை போற்றுகிறது ஒரு கூட்டம்.

 🔵தன் மதத்தில் உள்ள சாமியாரை கொண்டாடுகிறது மற்றொரு கூட்டம்.

 🔴தன் மொழி பேசும் ஒருவனை பாராட்டுகிறது இன்னொரு கூட்டம்.

 🔵சிற்சில காரியங்கள் நடந்ததை வைத்து ஏமாந்து விடுகிறது பிறிதொரு கூட்டம்.

பணத்துக்காக ஒரு கூட்டம்
புகழுக்காக ஒரு கூட்டம்
நோய்நீங்க ஒரு கூட்டம்
பொழுது போக்கவும் ஒரு கூட்டம்

இப்படியாக உலக மாந்தர்கள் அறியாமையால் அங்கங்கே சிக்கி அல்லலுறுகிறார்கள் !
 ஏமாந்தவர்களை திட்டம் போட்டு ஏமாற்றும் போலிகள்தான் ஏராளமாக இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.அறியாமையில் உழலும் மக்களை மிருக நிலையில் வாழும் மக்களை திருத்தி மனிதனாக வாழ வைப்பதே ஞானிகளின் ஒரே செயல்.

அதற்கு அவர்கள் குருவை பற்றிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!\
வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 13 அக்டோபர், 2023

🔥 ஆன்மநேயம் ? 🔥 சநாதனதர்மம்


நாம் செய்த முற்பிறவி பிராரத்துவ வினையால் பிறந்த நாம்,,,

இப்பிறப்பில் மேலும் மேலும் பாவஞ்செய்யாமல், நல்ல குருவை பணிந்து, திருவடி தீட்சை பெற்று இப்போது செய்கின்ற கர்மங்களை பகவான் பாதத்தில் அர்ப்பணித்து எல்லாம் நீயே என பரிபூரண சரணாகதி அடைந்து வாழ்வோமானால் ஆகாமியகர்மம் நம்மை சேராது.

இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை !
" கர்மாவை செய் பலனை என்னிடம் விட்டுவிடு "

என பகவத் கீதையில் கண்ணன் உரைத்ததை சிந்திக்கவும்.

" எல்லாம் அவன் செயல் "
என்பதை முழுமையாக உணர்ந்து வாழ்வதே வாழ்க்கை !

" என் செயலாவது யாதொன்றுமில்லை "
என முழுமையாக இறைவனிடம் - திருவடியில் சரணடைந்து வாழ்வதுதான் வாழ்க்கை.

" நான் யார் "
என்பதை அறிய முற்படுவதே அதற்காக பிரயர்த்தனபடுவதே வாழ்க்கை !

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செவ்வனே செய்ய வேண்டும். எல்லோரும் சேர்ந்ததுதான் சமுதாயம். பெரியவன் சிறியவன் எல்லாம் கிடையாது.

எல்லாதொழில் செய்பவரும் வேண்டும் !

எல்லோரும் எல்லா தொழிலையும் செய்ய முடியாது ! எல்லோரும் தத்தம் கடமையை சரிவரச் செய்தாலே நாடு சுபிட்சமடையும், மனித வாழ்க்கை மேம்படும்.

இப்போது நமக்கு கிடைத்த வாழ்க்கை எப்படிபட்டதாயினும் சரி, அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்து சிறப்புடன், அர்ப்பணிப்பு மனபாவத்துடன் வாழ்ந்தால் ! யாரும் வாழ்வாங்கு வாழலாம் !

நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதுவும் செய்துவிட முடியுமா ?

போலீஸ், கோர்ட்டு இதெல்லாம் எதற்கு ?

நம் சுதந்திரம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். பிறரை துன்புறுத்தாத செயல்களை செய்யத்தான் நமக்கு சுதந்திரம் இருக்கிறது.

நம்மால் ஒரு சிறு உயிருக்கும் எப்போதும் எந்த துன்பமும் வராமல் வாழ்வதுதான் உன்னதமான வாழ்க்கை !

இன்றைய உலகில் எல்லோரும் மனிதநேயம் வேண்டும். மனிதநேயம் உலகம் முழுவதும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்திய ஞானிகள் என்றோ இதைவிட மேலாக உபதேசித்துள்ளனர்.


"ஒன்றேகுலம் ஒருவனே தேவன்"
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
"எவ்வுயிரும் தம்முயிர் போல் கருதுக"


இப்படி மனிதநேயத்தைவிட மிக உயர்ந்த ஆன்ம நேயத்தை போதித்தனர் !

மனிதனை மட்டும் நேசிக்க சொல்லவில்லை !
எல்லா ஜீவராசிகளையும் உன் உயிர்போல் அன்புகாட்டு என்பதே ! சிறந்தது.

உலகுக்கே இந்திய நாடு ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்றது.
இதுவே இந்தியாவின் பெருமை.

மனம் விரிந்து பரந்து இருக்க வேண்டும். எல்லா ஆத்மாவும் இறை சொரூபந்தான் என்பதை உணர வேண்டும்.

அதுதான் வாழ்க்கை.


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts