திங்கள், 28 நவம்பர், 2022

🔥 எட்டு இரண்டு 🔥


சாகாக்கல்வி நூலிலிருந்து : 35

🔥 எட்டு இரண்டு 🔥


ஊர்ப்புறங்களில் வீட்டிலுள்ளவர்கள் பக்கத்தில் எங்காவது போய் வரவேண்டுமானால் சொல்லிக் கொண்டுபோவர் ! எப்படி தெரியுமா ? இரண்டு எட்டு போய் வாரேன் என்பர் !!

இரண்டும் எட்டும் இரு மெய்ப்பொருளை குறிக்கும் சங்கேத வார்த்தைகள் ! இதெல்லாம் நம் அறிவுக்கு எட்டவேண்டும். புலப்படவேண்டும். எட்டை, மெய்ப்பொருளை பிடித்தால் எட்டிவிடலாம் இறைவனை பரம்பொருளை !

இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை. தூரத்தில் இல்லை. கூப்பிடுதூரத்தில் கைக்கு எட்டிய இடத்தில்தான் எட்டாக இரண்டாக மெய்ப்பொருளாக உள்ளார் !

இதுவரை இந்த உலகில் எல்லோரும் மெய்ப்பொருள் பரம்பொருள் கண்ணில் மணியில் ஒளியாக உள்ளார் என்பதை இரகசியமாகவே, மறைத்தே சொல்லி வந்துள்ளனர்.

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியாலும் எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும் இந்த உலகத்திலேயே அடியேன் தான் முதன்முதலாக இந்த இரகசியங்களை வெளிப்படுத்தி நூலாக வெளியிட்டுள்ளேன் !

மெய்ப்பொருளை சொல்லாத ஞானிகளே இல்லை !

ஆனால் எல்லாமே மறைபொருளாக பரிபாஷையாக சூட்சுமமாக குரு மூலம் அறியக்கூடிய வகையிலேயே உள்ளது !

உலகர் அனைவரும் ஞானம் பெற, மெய்ப்பொருள் அறிய உணர அடியேனை கருவியாக்கி இதோடு 24 ஞானநூற்களை எழுதவைத்து மெய்ப்பொருளை வெளிப்படுத்தியுள்ளனர் !

எல்லா ஞானிகளின் அருளும் அடியேனுக்கு துணை நிற்கிறது !

இயேசுபெருமானும் நபிபெருமானும் வள்ளல் பெருமானும் உபதேசித்தது ஒன்றே ! 
நன்றே ! மெய்ப்பொருளே !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

ஞாயிறு, 20 நவம்பர், 2022

🔥 7 - திரை எங்கே இருக்கிறது? 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 33

🔥 7-திரை எங்கே இருக்கிறது? 🔥

வள்ளல் பெருமான் கண்ணே, கண்மணியே என்று மெய்ப்பொருளை பல்லாயிரம் தடவை திருஅருட்பாவில் சுட்டிக்காட்டி நாமும் மரணமிலா பெருவாழ்வு பெற வழிகாட்டியுள்ளார்.


"தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக்கொள்வது நலம்"! என வள்ளல் இராமலிங்கர் உரைத்துள்ளார் ! நடுக்கண் - கண்மணியை திறக்கப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ?! அப்படியானால் நடுக்கண் மூடப்பட்டுள்ளது என்று தானே பொருள் !

யார் மூடியது ? எதற்காக மூடியது ?
எதனால் மூடியது என அறிய வேண்டாமா மனிதா ?

கண்மணியின் மத்தியில் ஊசிமுனையளவு சிறிய துவாரம் உள்ளது !? அந்த ஓட்டை தான் மெல்லிய ஜவ்வால் மூடப்பட்டுள்ளது ! உள்ளே, ஊசிமுனை துவாரத்தின் உள்ளே ஊசிமுனையளவு ஒளி நம் ஆத்மஜோதி துலங்குகிறது !

ஓட்டையை மறைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே. நமது மும்மலங்கள் ! வள்ளல்பெருமான் இதைத்தான் திரைகள் என்கிறார் !

இதையெல்லாம் சூட்சுமமாக சிருஷ்டித்தவன் எல்லாம் வல்ல இறைவன் ! இதனை கண்டு உணர்ந்து உய்தனர் ஞானிகள் !

திரைகளாகிய ஜவ்வே நாம் நீக்க வேண்டிய பொருள் ! திரை - நீங்கினாலே, மெய்ப்பொருளின் திரை நீங்கினாலே நம் ஆத்மஜோதியை நாம் காணமுடியும் ?! இதுவே, நாம் அடைய வேண்டிய மாபெரும் பேரின்ப பெருநிலையாகும் !

மனிதனாக பிறந்த நாம் பெறவேண்டிய அதி உன்னத நிலை இதுவே !

நம்மை நாம் காண உணர மெய்ப்பொருள் அறிந்து உணர்ந்து தவம் செய்ய வேண்டும் !

ஞான சற்குருவை பணிந்து தீட்சை பெற்று தவம் செய்து பெறவேண்டும்.



இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வெள்ளி, 18 நவம்பர், 2022

🔥 மெய்ப்பொருள் காண்பது அறிவு 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 34

🔥 மெய்ப்பொருள் காண்பது அறிவு 🔥

நமது மூதாதையர்கள் நாமெல்லாம் ஞானம் பெற வேண்டி வாழ்க்கையின் எல்லாநிலையிலும் காணுகின்ற பொருட்களிலும் ஞானம் விளங்கும்படி எல்லாவற்றையும் அமைத்து வைத்தனர்.

பல ஊர் பெயர்கள் மெய்ப்பொருள் விளக்கம் :

திருக்கண்ணபுரம், எண்கண், எட்டுக்குடி, திருவாவடுதுறை, குறுங்குடி இப்படி ஊர் பெயர்கள்.
திருவாகிய இறைவன் குடியிருப்பது கண் ஆகிய இடத்தில் அது திருக்கண்ணபுரம் !
எண் ஆகிய எட்டும் இரண்டும் கண் எனக் குறிக்கும் எண்கண் !

எட்டுக்குடி என்பது எட்டாகிய கண்ணில் குடியிருக்கும் இறைவன் !
திருவாகிய ஜோதி ஆடிக்கொண்டிருக்கும் இடம் அதுவே திருவாவடுதுறை !
ஊசிமுனையளவு குறுகிய சின்ன இடத்தில் குடியிருப்பவன் இறைவன் எனவே குறுங்குடி !
இப்படி ஊர் பெயரும் மெய்ப்பொருள் விளக்கமே !

தாம்பரம் - தாம் அதாவது நாம் தான்பரம் எனக் குறிக்க வந்ததே தாம்பரம் !
சிதம்பரம் சின்ன அம்பரம் சின்னகோவில் அதுதான் சிதம்பரம்.
கண்ணன் என்ற பெயர் மெய்ப்பொருளே !

கண் ஆகிய அவன் கண்ணிலே இருக்கும் ஒளியாகிய இறைவன். கண் அவன் கண்ணன் - கிருஷ்ணமணி ! கண்மணி !

கணபதி - கண்ணின் பதி - கணங்களின் பதி கணநாயகன் ! திருக்கண்ணை மங்கை !

நேத்திர தரிசனம் திருப்பதியில் கண்டவர் மோட்சம் பெறுவர் !

நேத்திரம் நயனம் என்றாலும் கண்.

உபநயனம் ஒரு சடங்கு. பூணூல் பூட்டும் வைபவம் !

துணை, இரு என்பது உப எனப்படும். நயனம் என்றால் கண். இரு கண்பற்றி அறிவதே அறிவிப்பதே உபநயன வைபவத்தின் நோக்கம் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 15 நவம்பர், 2022

🔥 பட்டினத்தார்க்கு குரு சொன்ன உபதேசம் 1 🔥

சாகாக்கல்வி நூலிலிருந்து : 31 

                  🔥 பட்டினத்தார்க்கு  குரு சொன்ன உபதேசம் 1 🔥

“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து கட்டாத லிங்கம் கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே" 

     இதையெல்லாம் என் குருநாதன் எனக்கு உபதேசித்து மெய்ப்பொருள் உணர்த்தி அருளினார் என்றார் சித்தர் பெருமகனார் ! என் அனைத்தும் பரிபாஷை ! 

சூட்சுமமாக சொல்லப்பட்டது ! 

அனைத்துமே ஒரே பொருள்தான் ! 

மெய்ப்பொருள் தான் !


⚫ வெட்டாத சக்கரம் : 
      சக்கரம்போல் உருண்டையாக வட்டமாக இருப்பது நம் கண்மணி ! சக்கரம் உருள்வது போல் கண்மணி சுழன்று கொண்டிருக்கிறது !      கண்மணியாகிய சக்கரம் வெட்டி உருவாக்கப்பட்டதல்ல ! வெட்டி ஒட்டாமல் முழுதாக இறைவனால் உருவாக்கப்பட்ட சக்கரமே கண்மணி ! அதனால்தான் கண்மணியை வெட்டாத சக்கரம் என்றனர் !


👀 பேசாத மந்திரம் :    மந்திரம் எனப்படுவது இறைவனை மனதில் திறமாக நினைந்து இருத்தச் சொல்லப்படும் வார்த்தை ! இது எண்ணிலடங்கா அளவில் உள்ளது !      " மாமறை நூல் ஏற்றிக்கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய் " என வள்ளல் பெருமான் கூறுகிறார் !      " பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் பலகோடி " என சிவவாக்கியர் கூறுகிறார் !  அப்படியானால், ஜபிக்க வேண்டாம் வார்த்தைகளை !  மந்திரம் என்றால் மனதை திறமாக திடமாக வைத்து விடுவது ! மனம் திடமான இருக்கும் இடம் ! அந்த - இடத்திலேயே இருத்திவிடுவது ! அது கண்மணியான இடமே ! கண்மணியின் ஊசிமுனை வாசலில் உள்ள மெல்லிய ஜவ்வே திரையே நம் மும்மலத்திரை ! அதிலிருந்து வெளிப்படுவதே மனம் ! கண்மணி முன்னர் சூட்சுமமாக இருப்பதே மனம் ! கண்மணியிலுள்ள மனதை அதிலேயே திறமாக வைப்பதால் "மந்திரம்" எனப்படுகிறது கண்மணி ! கண் பேசாது அல்லவா அதனால் தான் கண்மணியே பேசாத மந்திரம் !


🌼 வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் : 

புஷ்பம் என்றால் மலர் பூ. கண்மலர் என்று நாம் கூறுவோமல்லவா ? இந்த புஷ்பத்தை வேறு யாராவது எட்ட முடியுமா ?  அவரவர் கண் - மெய்ப்பொருள் அவரவர்க்கே எட்டும் இடத்தில் உள்ளது !  எட்டாக உள்ள புஷ்பம் வேறொருவர்க்கும் எட்டாத புஷ்பம் நம் கண்மணியே !


 இறைவன் திருவடிகளே நம் கண்கள் !! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

ஞாயிறு, 13 நவம்பர், 2022

நடுக்கண் புருவபூட்டு - வள்ளலார்

சாகாக்கல்வி நூலிலிருந்து : 30
🔥 புருவமத்தி - வள்ளலார் 🔥


வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறி விட்டார்.
"கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டுகளி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு” என வெட்ட வெளிச்சமாக்கி விட்டார் ! "நடுக்கண் தான் புருவபூட்டு"

இதற்கு விளக்கமும் வேண்டுமோ ?!
 
“பூட்டை திறப்பது கையாலே மனப்பூட்டை திறப்பது மெய்யாலே"
 என்றொரு சித்தர் பாடுவார். நடுக்கண் புருவபூட்டை திறக்க வேண்டும் !

எப்படி ? கையாலே இங்கே கை என்பதும் நமது கண்களே ! கண்கள் தான் நமக்கு கை !
 
கண்கள்தான் இறைவனின் திருவடி - கால்கள் !
 
இந்த சித்தர் கண்ணாலே பூட்டை திறக்க கூறியுள்ளார்.

அங்கே மனமாகிய பூட்டும் உள்ளதாம் அதை மெய்யாலே திறக்கணுமாம் !

இங்கே இன்னொரு இரகசியமும் வெளிப்பட்டது.

மனம் இருப்பதும் கண்ணில் தான் !
அதை மெய் கொண்டு திறக்கணுமாம் !

மெய் எது உண்மை. சத்தியம் அழியாதது. ஒளி ஒன்றுதானே !
அதாவது கண்மணியில் உள்ள மனதை அகற்ற கண்மணியின் உள் உள்ள ஒளியை பிடி !
ஒளியை வைத்து மனதை திற !

கண்மணி வாசலை திறந்துவிடலாம் என்பதே ஞான இரகசியம் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 8 நவம்பர், 2022

🔥 புருவ-மத்தி 🔥



சாகாக்கல்வி நூலிலிருந்து : 29

🔥 புருவ-மத்தி 🔥


புருவ மத்தியில் தியானம் செய் என எல்லோரும் கூறுவர்.
புருவமத்தி எது என தெரிய வேண்டாமா ?

சாதாரணமாக யாரிடம் கேட்டாலும் புருவமத்தி நாம் நெற்றியில் பொட்டு
வைக்கும் இடத்தையே காட்டுவர் ! அதாவது இரு புருவங்களுக்கிடையே தான் காட்டுவர்.

ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே !
புருவமத்தி என்று ஒருமையில் தானே கூறினர்.
ஒரு புருவம் அதன் மத்தி ஒன்றுமில்லை,

அதன் கீழேயிருப்பது கண்.
இப்படி சிந்திக்க வேண்டும், யூகிக்க வேண்டும்.

புருவமத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணைப் பற்றித்தான்
சொல்லியிருப்பர். அதன் விளக்கம் இதுவாகத்தான் உள்ளது என சிந்தித்து அறியவேண்டும்.

கண்ணின் தன்மையை அறியவேண்டும்.

புருவமத்தி என்றால் கண்தான் என மற்றொரு சித்தர் உண்மையை போட்டு உடைக்கிறார்.

ஒரு சித்தர் போட்ட பூட்டை இன்னொரு சித்தர் திறந்துவைக்கிறார் ! இப்படியேதான் எல்லா சித்தர்களும் ஞானிகளும் மெய்ப்பொருளை பரிபாஷையாக சூட்சுமமாக பலப்பலவிதமாக கூறி அருளியிருக்கிறார்கள் !

" புருவமத்தி ஏதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி ".
எவ்வளவு சிறந்த சூட்சுமமான - பரிபாஷை சங்கேத வார்த்தை ! - படிக்கப் படிக்க பேரானந்தம் !
புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி !

அண்டம் போல் அழகான, பூமிபோல அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும் !
அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது.

புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி !
இப்படியே தான் எப்பொருளும் மெய்ப்பொருளே !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 1 நவம்பர், 2022

அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் - பரிபாஷை


சாகாக்கல்வி நூலிலிருந்து : 28
🔥 பரிபாஷை 🔥 பட்டினத்தார் கூறுகிறார்,

"அண்டம் போல் அழகியதாம் கண் மூன்றுடையதாம் ஒற்றி கடலருகே நிற்கும் கரும்பு" என்று.
நமது கண்மணி நாமிருக்கும் பூமியைப் போல அழகாகத்தானே உள்ளது !

கண் மூன்றுடையதாம், வெள்ளைவிழி கருவிழி கண்மணி என புறத்தே மூன்று நிலைகளாக உள்ளது.
வலது கண் இடதுகண் இரண்டும் உள்ளே கூடும் நெற்றிக்கண் என கண் மூன்று உள்ளது.

பட்டினத்தார், திருவொற்றியூர் கடற்கரையிலே நிற்குமாம் கரும்பு என்கிறார்.
நேரடியாக பொருள் காணமுடியாது !

இதுதான் பரிபாஷை !

கடற்கரையிலே கரும்பு விளையாதே !
கடல்போல நீர் பெருகும் கண்களிலே ஒற்றியிருக்கும் கண்மணி ஒளி என்பதே !

கரும் - பு !
அதாவது கருப்பு பூ !
அது நம் கண் மலரை குறிப்பதாகும் !

உலகத்தில் எங்காவது கருப்பு பூ உண்டா ?
கண்மலர் என கண்ணை சொல்வோமல்லவா ?
பட்டினத்தார் கூறியது கண்மணியே !

கருப்பு பூ என்றும் அது இந்த பூமியை போல அழகானது என்றும் அது மூன்று கண் என்றும் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்.

இப்படியே எல்லா சித்தர்களும் ஞானிகளும் பரிபாஷையாக சூட்சுமமாக இறைவன் ஒளியாக துலங்கும் கண்மணியை, மெய்ப்பொருளை பலப்பல விதமாக கூறியருளியிருக்கிறார்கள் 

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts