சனி, 17 டிசம்பர், 2011

மெய்ப்பொருள் - கண்மணி ஒளி

மெய் என்றால் உண்மை. சத்தியம். இன்னொரு பொருள் உடல்.
"தமிழ் மொழி தெய்வீகமானது அதிவிரைவில் சுத்த சிவானுபூதியை
நல்க வல்லது" என வள்ளல் இராமலிங்கர் பகர்ந்துள்ளார்! எப்படி எனில்
தமிழ் எழுத்துகள் உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து என்றே
உள்ளது. உயிரான இறைவன் உடலான மெய்யில் இணைந்தாலே ,
உயிர்மெய் கூடி எழுத்தாகி சொல்லாகி பொருளாகிறது! உயிரோடு கலந்தது
தமிழ் என்பதே சரி!

மெய்யிலே உள்ள மெய் உயிரே! மெய்யாகிய உடலிலே உள்ள சத்தியம்
உயிரே! மெய்எழுத்து தனித்து இயங்காதே! உயிர் எழுத்தோடு மெய் எழுத்தும்
சேர்ந்தே இயங்கும். உடல்மட்டும் மெய்மட்டும் தனித்து இயங்காது.
உடலோடு உயிரும் சேர்ந்தாலே இயக்கம். எட்டும் இரண்டும் எழுத்தாகி ஓங்கார சொல்லாகி மெய்பொருளாக விளங்குகிறது!

"தேவர் குறளும் திருநான் மறை முடிபும்
மூவர் தமிழும் முனி மொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்" -
திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகஸ்தியர்

முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும்
உரைப்பது ஒரு வாசகம் ! மெய் ! உண்மை ! சத்தியம்! அது மெய்பொருள் !

ஆக தமிழில் உள்ள எல்லா நூற்களுமே, சங்க இலக்கியமாகட்டும் பக்தி
இலக்கியமாகட்டும் அருட்பாக்கள் ஆகட்டும் இவை அனைத்தும் உரைப்பது
முடிவில் மெய்பொருள்!

மெய்யிலே விளங்கும் பொருள் கண்மணி ஒளியே மெய்ப்பொருள்.
"எண்சான் உடம்புக்கு சிரசே பிரதானம்" அவரவர் கையால் அளந்தால்
அவரர் உடம்பு எட்டு சான் அளவே இருக்கும். இதில் தலை ஒரு சாண்.
நமது உடம்புக்கு தலையானது - முக்கியமானது தலையே-சிரசே!
முக்கியமான - பிரதானமான இடத்தில தானே தலைநகரத்தில் தானே
தலைவர் இருப்பார். தலை போலே இருப்பதால் தான் தலைவர்.

நம் தலைவர் இறைவன் நம் மெய்யில் முக்கியமான, தலையில் இருக்கிறார்.
இறைவன் -பரம் பொருள் நம் உயிராக , பிராணனாக ஜீவனாக நம் தலையின்
உள் மத்தியில் பத்திரமாக இருக்கிறார். பத்திரமாக நம் மெய் உடல் இறைவனை - நம் உயிரை தாங்கி கொண்டு இருக்கிறது.

உயிர் தங்கிய சற்பாத்திரம் - நமது உடலில் நேத்திரத்தில் துலங்கி நிற்கிறது!
அதுவே மெய். அதுவே மெய்பொருள்.

மெய்யிலே இருக்கும் மெய் துணை கொண்டு, காயமே இது பொய்யடா
என்றவர்களின் வாக்கை பொய் ஆக்கிவிடலாம்! காயத்துள் நின்ற கடவுளை
கண்டால் மெய் மெய்யாகிவிடும்.

மெய்யை-உடலை பொன் போல பாதுகாக்க வேண்டும் என்றர் வள்ளலார்.
உடலினுள் துலங்கும் தங்க சோதியை கண்டால் நம் உடலும் பொன் உடலே!
இது மெய்! பொன்னம்பலவனை, பொன்னர் மேனியனை நம் மெய்யில்
கண்டால் நம் உடலும் பொன் உடலாகும்! இது மெய்யே.


மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

பக்கம் 42

சற்குரு - சிவசெல்வராஜ்


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts