ஞாயிறு, 21 அக்டோபர், 2018

குரு வணக்கம் - பாம்பாட்டி சித்தர்


காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே
தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப்
போற்றி மனம் வாக்குக் காயம் மூன்றும் பொருந்தப்
புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடுபாம்பே 

பொய் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களை
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும்
மெய்க்குருவின் பாதம் போற்றி ஆடுபாம்பே

வேதப்பொருள் இன்னதென்று வேதம் கடந்த
மெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விரும்பிய
போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூர்ண சற்குரு தாள் கண்டு ஆடுபாம்பே

உள்ளங்கையில் உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைகுருவை
கள்ள மனந் தன்னை தள்ளி கண்டுகொண்டு
அன்பாய் களித்து களித்து ஆடுபாம்பே

அங்கையிற் கண்ணாடி போல ஆதி வத்துவை
அறிவிக்கும் எங்கள் உயிரான குருவை
சங்கையற்  சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
தமணியப் படம் எடுத்து ஆடுபாம்பே

காயம் நிலை அழிகையைக் கண்டு கொண்டு பின்
கற்புநிலை யுள்ளிற் கொண்டு எக்காலமும் வாழும்
தூய நிலை கண்ட பரிசுத்த குருவின் 
துணையடி தொழுது நின்று ஆடுபாம்பே

கூடுவிட்டு கூடுபாயும் கொள்கை யுடைய
குருவின் வல்லபம் எவர் கூற வல்லவர் ?
வீடு பெரும் வகையை மேன்மேலும் காட்டும்
மெய்க்குருவை பணிந்து நின்று ஆடுபாம்பே

அட்ட திக்கும் அண்ட வெளியான விடமும்
அடக்கிய குளிகையோடு ஆடிவிரைவாய்
வட்டமிட்டு வலம் வரும் வல்ல குருவின் 
மலரடி தஞ்சம் என்று ஆடு பாம்பே

கற்பகாலம் கடந்தாதி கர்த்தாவோடுன்
கடமழி யாது வாழுங் காரண குரு 
பொற்பாதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து
பூரணச் சிந்தையோடு ஆடு பாம்பே!

வச்சிரத்திற் கோர் பழுது வாய்க்கு மாயினும்
வல்லுடம்புக் கொருமுறை வாய்த்திடாது
மெச்சுகட மமுள்ள எங்கள் வேத குருவின் 
மெல்லடி துதித்து நின்று ஆடு பாம்பே 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts