Saturday, August 27, 2016

இறைவனை கண்டவர் யார் ?


இறைவனை கண்டவர் யார் ? யார்? என கேட்கிறார்களே?

கண்டேன் கண்டேன் என்று பதில் கூறுகிறார் பேயாழ்வார்

இறைவனை கண்டவர் யார் என்று கேட்பவர்களுக்கு , இறைவனை எப்படி எப்போது காண முடியும் என்று கேட்பவர்களுக்கு பதில் கூறுகிறார்கள் ஞானிகள்.கீழ்கண்ட கட்டுரையை முழுவதும் படியுங்கள்
"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"
- பேயாழ்வார்

இறைவனை கண்டவர் யார்? யார் ? என கேட்கிறார்களே? இதோ கண்டேன் கண்டேன் என்று கதறுகிறார் பேயாழ்வார்! ஆஹா என்ன அழகு! என்ன அழகு அதை எப்படி கூறுவேன்? இதோ எங்களை நெருங்கியது எம்பெருமானல்லவா? எம்பெருமானின் அழகிய திருமேனியை கண்டேன்.

ஒளி விளங்கும் கதிரவன் போல ஒளிரும் அழகிய மேனியை கண்டேன். திருமார்பிலே திகழ்கின்ற திருமகளை கண்டேன். அசுரரை துவம்சம் பண்ணிய பொன்னாலான அழகிய சக்ராயுதம் கண்டேன். மற்றொரு கையில் உயிர்களை ஈர்க்கும் அன்பான பாஞ்ச ஜன்யம் என்ற வலம்புரி சங்கையும் கண்டேன்.

கடல்வண்ணனாம் எம் கடவுள் பால் என்று இத்தனையும் கண்டேன் கண்டேன் என்கிறார் பேயாழ்வார். எல்லா ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் ஞானிகளும் மகான்களும் கடவுளை கண்டவர்களே. நமக்கு சொன்னது நாமும் காணவேண்டும் என்பதற்காகவே.

இந்நிகழ்ச்சி நடந்த சம்பவத்தை வில்லிபுத்தூராழ்வார்
கீழ்கண்ட பாடலில் விளக்குகிறார் :

"பாவரும் தமிழால் பேர் பெரு பனுவற்
பாவலர் பாதிநாள் இரவில்
மூவரும் நெருக்கி மொழி விளக் கேற்றி
முகந்தனைத் தொழுத நன்னாடு
தேவரும் மறையும் இன்னமும் காணாச்
செஞ்சடைக் கடவுளைப் பாடி
ஏவரும் மதித் தோர் மூவரில்
இருவர் பிறந்த நாடிந்த நன்னாடு"

ஒரு நாள் இரவு குளிர்காலம் ஒட்டுத்திண்ணை ஒன்றிலே படுத்திருந்தாராம் பொய்கையாழ்வார்! சிறு தூறல் வேறு வாடைக்காற்றும் வீசிய நேரம்! பூதத்தாழ்வார் அங்கு வந்து ஒதுங்கினாராம். படுத்திருந்த பொய்கையாழ்வார் பளிச்சென்று எழுந்து , இந்த இடம் ஒருவர் படுக்கவும் இருவர் இருக்கவும் ஆகும் என்று கூறி அவரை அருகில் இருக்கச் செய்து தானும் இருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு அங்கு பேயாழ்வார் வந்தார். அமர்ந்திருந்த இருவரும் உடனே எழுந்து, இங்கு ஒருவர் படுக்கலாம் , இருவர் இருக்கலாம் , மூவர் நிற்கலாம் என்று கூறி, நின்று கொண்டார்கள் அச்சிறு இடத்தில மூவரும் நெருங்கிய படியே நின்றார்கள்.

ஒரே அமைதி. சிறிது நேரத்திற்கு பின் கன்னங்கரேல் என்று ஒருவர், மொழு மொழு என்று உடம்புடன் அங்கு வந்து அவர்களை நெருங்கி கொண்டு உட்புகுந்து நின்றார். அந்த இடம் மிக நெருக்கமான சிறு இடம். ஒருவர் மட்டும் படுக்கவும், இருவர் மட்டும் இருக்கவும், மூவர் மட்டுமே நிற்கவும் முடியும். இந்நிலையில் அச்சிறு இடத்தில மூவர் நெருங்கி நின்று கொண்டிருக்க, நாலாவதாக வந்து ஒருவர் நெருங்கி நுழைந்து விட்டார். மூவரும் திக்கு முக்காடிப் போய்விட்டார்கள். முச்சுத் திணறியது. ஐயா நீர் யார்? என்று கேட்டார்கள், பதில் இல்லை.

ஐயா தங்களை யார் என அறிய விரும்புகிறோம் என்ற போதும் பதில் இல்லை. ஒரே அமைதி. மௌனம்.விளக்கு இருந்தால் அவர் யார் என நாமே பார்த்து விடலாமே என்று பொய்கை யாழ்வார் மொழி விளக்கு ஏற்றினார்.

வந்தது என்ன சிறுவிளக்கா? உலகில் உள்ள எல்லா விளக்குகட்கும் பெரிய விளக்கு! ஐந்து கண்டங்கட்கும் ஒளி தரக்கூடிய அத்துணை பெரிய விளக்கு! அப்படி பட்ட விளக்குக்கு நெய் ஒரு படி இப்படி விட்டாற் போதுமா? இந்த பூமியே அகல், கடலே நெய், மேருகிரி திரி, சூரியனே விளக்கு என்று பாடினார் பொய்கையாழ்வார்.

"வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய சுடரே விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று"

அடுத்ததாக பூதத்தாழ்வார் உள்ளத்தில் ஒரு விளக்கு ஏற்றுவாராயினர். அதற்கு அன்பு அகல், ஆர்வம் நெய், எண்ணம் திரி, ஞானமே விளக்கு.

"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாராணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்"

இங்ஙனம் பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பாடியபின் ஒரு ஜோதி விளக்கு தோன்றியது. அவ்வொளியில் தங்களை நெருங்கியபடி நிற்பது யார் என பார்த்தார்கள். கண்டார்கள். அவர் திருவுருவம் நன்கு தெரிகிறது. அப்போது பாடிய பாடல் தான் பேயாழ்வார் பாடியது, இக்கட்டுரையில் முதலில் கொடுக்கப்பட்டது.

இந்த கதை அனைத்தும் ஞான அனுபவமே! ஒருவர் படுத்திருந்தார் அது ஆத்மா. இருவர் இருந்தனர் அது இரு கண்கள். மூவர் நின்றனர் சூரிய சந்திர அக்னி. படுத்திருந்த நாராயணரை எழுப்ப வேண்டுமானால் அவரும் நம்மோடு இருக்க வேண்டுமானால் நம் இரு கண்களில் நாம் இருக்க வேண்டும்.

கண்ணனிடம் கண் - மணியிடம் ஒளியிடம் லயிக்க வேண்டும். இதுவே ஞான தவம். சாதனை கூடுமானால் சூரிய சந்திர ஜோதி எழும் அக்னியையும் எழுப்பிவிடும்.

மூவர் நின்றது இதுதான். மூவரும் நெருங்கி நின்றால் சூரிய சந்திர அக்னி சேர்ந்தால் வந்திடுவான் இறைவன் ஜோதியாக நம்முள்ளே. நம் முன்னே. நம்முடனேயே. ஈடு இணையில்லாத ஒப்பற்ற இறைவனை காண எவ்வளவு அழகான கதை இது பார்த்தீரா? இது கதையல்ல நிஜம். ஈடு இணையில்லாத ஞான சாதனை இது.

ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர வேண்டும். பிறந்த நாம் செத்தால் சேராது. இதற்கு முன் சேராததினால் தான் நாம் பிறந்துள்ளோம். தற்கொலை செய்தால் கிட்டி விடுமா? பேய் உருவம் தான் மிஞ்சும். பின் என்ன தான் செய்வது? ஞான தவம் ஒன்றினால் தான் பரமாத்மாவுடன் ஐக்கியம் ஆகா முடியும். தவம் செய்து குருவை பணிந்து தீட்சை பெற்று கண்களில் உணர்வுடன் விழித்திருந்தால் ஒளியை காணலாம். பின்னரே முக்தி மோட்சம்.
- ஞான சற்குரு சிவசெல்வராஜ் "ஞானம் பெற விழி" நூலில்

No comments:

Post a Comment

Popular Posts