திங்கள், 17 ஆகஸ்ட், 2026

15. திருத்தோணோக்கம்

 15. திருத்தோணோக்கம்

“நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்

புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்

உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே

பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ”

திருவாசக மெய்ஞ்ஞான உரை எழுத ஆரம்பித்த பின் அடியேன் மேலும் மேலும் பற்பல ஞான விளக்கங்களை உணர முடிகிறது! எல்லா ஞானிகளின் பாடல்களுமே, ஊன்றி கவனித்தாலே மெய்ப்பொருளை உணர்த்தும்!

 கற்றது கைமண்ணளவு என்பது உண்மையிலும் உண்மை! இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது என்பதை இந்நூல் எழுதும்போது அறிந்து கொண்டேன்! இறைவன் எண்குணத்தான் என எல்லோரும் கூறுவர்! எட்டாக இருப்பவன் என்பர் பரிபாஷையாக எண்ணிலும் எழுத்திலும் ‘அ’வாக எட்டாக இருக்கிறான் - வலது கண் சிவம் என்பதும் பரிபாஷைகள்! இரு கண்ணும் 8 போல் infinity போல் இருக்கிறது என்பது சிந்தித்து கண்ட உண்மை! உன் மெய்யிலுள்ள கண் என ‘கண்’டதால் சொன்னது!! 

இங்கே மாணிக்கவாசக பெருமான் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், உயிர், சந்திரன், சூரியன் என்ற எட்டும் சேர்ந்த இரு கண்களே என அழகாக தெளிவாக நமக்கு கூறுகிறார்! எட்டும் சேர்ந்திருப்பவன், எட்டிலே இருப்பவன் என்றனர்! ஐம்புலன்களாய் அமைந்தோன்! எட்டு வகையாய் சேர்ந்தும் நின்றான்! உலகம் ஏழு என நின்றான்! ஆறு ஆதாரமும் ஏழாவது சகஸ்ரதளமும் சேர்ந்து ஏழு உலகு என்றனர்! திசை பத்து எண்திசையும் மேலுலகு கீழுலகு என திசை பத்தாகவும் இறைவன் நின்றான்! யார் அவன்? ஒருவனே இவ்வாறு பலவாக திரிந்து நின்றான் அவனே பரம்பொருள் பரமாத்மா நம் கண்ணானவன்! இறைவன்! அவனை கண்டு மகிழ்ந்து பாடியாாடுங்கள்! கண்டால் கண்-டால் அடிப்படை காணலாம்! கண்டவர் விண்டிலர்! கண்டவர் பேச முடியாது பேராநந்தத்தில் மூழ்கி திளைப்பதால் பேச்சு வராது! பரவசமாகி மெய் மறந்து போவார்!! எப்படி பேச்சு வரும்! திகைத்து நிற்பர்! எண்குணன்! - எட்டிலே! - ‘அ’விலே! இரு கண் ஒளியாக! சிவமாக சக்தியாக 

அ-உ ஆக துலங்குகிறான்! ஆஹா எவ்வளவு பெரிய உண்மை! ஞானம்! இரகசியம்! அடியேன் அறிய அறிவித்த இறைவா என் மணியே மணிவாசகம் சொன்ன மாணிக்கவாசக பெருமானே என் குருமணியே வள்ளலே உலகுக்கு மெய்ஞ்ஞான உரை எழுதி தெரிவிக்க வைத்தவரே எப்படி நான் நன்றி சொல்வேன்! என்ன கைம்மாறு செய்வேன்! நீங்கள் இட்ட கட்டளைப்படி என்றும் உலகுக்கு மெய்ஞ்ஞானத்தை எவ்விதமாவது சொல்லிக் கொண்டேயிருப்பேன்!

“புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் சித்தம் சிவமாக்கி செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ”

புத்தன் முதலாய புல்லறிவாளர்களால் உருவான பல சமயங்களும் கடவுளை உணராமல் வாத பேசியே மெய்ஞ்ஞானம் இன்றி தாம் சொல்லும் மத சமய கருத்துக்களிலேயே தடுமாற்றம் கொண்டவராய் இருக்கின்றனர்! முரட்டு பிடிவாதம் கொண்டவராய் உடலை வருத்தி கொடிய விரதங்களை மேற்கொண்டும் உண்மையறியாமல் மடிந்து போகின்றனர்! “நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்” என மகாகவி பாரதியும் பாடுவதை கவனிக்கவும்! மாண்டவர் மீண்டும் பிறப்பர்! 

அப்படியாயின் அவர் பூரண நிலையடையவில்லை என்றுதானே பொருள்! பூரணத்தை - ஒளியை அறிந்தாலல்லவா மோட்சம்! அன்பை போதித்த புத்தன் தன் ஜீவன் மேல் அன்பு வைக்க - கருணை காட்ட தவறிவிட்டார்!?

 “ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்”! என்றாரே வள்ளலார்! தன் ஜீவனை காக்க, கண் ஒளியை பெருக்கி தவம் அல்லவா செய்ய வேண்டும்! கண்ணை மூடாமல் விழித்திருந்து தவம் - விழிப்புணர்வுடன் - விழியில் உணர்வுடன் தவம் செய்தாலே கிட்டும் மோட்சம்! முக்தி!

 சமண மதத்துறவிகளை வாதில் வென்று திருஞானசம்பந்தர் சைவநெறியை இறைநெறியை நிலைநாட்டினார்! புத்தமத துறவியை வாதில் வென்று அவரை சைவ சமயத்தை தழுவச் செய்தார் மாணிக்கவாசகபெருமான்! சமண மதத்திலே ஈடுபட்டு கொண்டிருந்த திருநாவுக்கரசரை இறைவனே ஆட்கொண்டு சைவநெறியில் ஈடுபட வைத்தார். இப்படி இறைவனே நல்ல நெறியை அடியார்களுக்கு போதித்து இங்கே நிலவும் சநாதனதர்மத்தை எல்லோரும் கடைபிடித்து ஒழுக அருள்பாலித்தார்! 

இந்தியாவில் தோன்றிய இந்த மதங்களெல்லாம் காணாமல் போய் சநாதன தர்மம் மட்டுமே இன்றளவும் நிலைத்து நிற்கிறது. பிற நாட்டிலிருந்து வந்த கிருத்துவ இஸ்லாம் மதமும் இங்கே வளரமுடியாது போயிற்று! பாரத தேசத்தில் விளங்கும் சநாதன தர்மம் சாதி மத இன மொழிபேத மற்ற சமத்துவ சன்மார்க்க நெறியுடையது! அதனால் எத்தனை மதம்

மார்க்கம் வந்தாலும் தோன்றினாலும் இந்த தர்மம் சநாதன தர்மம் அழியாது என்றும் நிலைத்து நிற்கும்! இதில் தான் உண்மை இருக்கிறது! உண்மைக்கு சத்தியத்திற்கு என்றுமே அழிவில்லை! 

சநாதன தர்மம் சைவ உணவு உட்கொள்ள சொல்கிறது! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்த்துகிறது! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிறது! மனிதன் மனிதனாக வாழ்ந்து ஆன்மநேய ஒருமைப்பாடுடையவனாக உயர்ந்து முடிவில் மரணமடையாமல் இறைவனடி சேர வேண்டும் என்கிறது!

 வேறு எல்லா மதமும் பிறந்தவன் இறப்பான் என்றே கூறுகிறது?! ஒப்புயர்வற்ற அறிவுப்பூர்வமான தெளிவான ஞானகருத்துக்களை கொண்டதே இங்கே விளங்கும் சநாதன தர்மம்! இனி வருங்காலத்தில் உலகெங்கும் சநாதன தர்மமே விளங்கும்! இன்றைய உலகில் நடைபெறும் கஷ்டங்கள் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது! கொஞ்சம் கொஞ்சமாக உலகமே சைவ உணவு பழக்கத்திற்கும் சன்மார்க்க நெறிக்கும் மாறி வருகிறது! 

மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம்! மக்கள் சண்டை சச்சரவின்றி அமைதியாக ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்கட்டும்! யாரும் யாரையும் தன் மதத்துக்கு வருக என இழுக்காதீர்கள்! அவரவர் ஒழுக்கமாக நல்லநெறியாக பஞ்சமாபாதகம் புரியாமல் உலகமக்கள் அனைவரையும் சகோதர சகோதரிகளாக கருதி ஒற்றுமையுடன் வாழ்ந்தாலே போதும்! 

இறைவன் ஒருவரே! ஒளியே கடவுள்! உன் கண்ணே திருவடி! உன் ஆன்மாவை இறைவனோடு சேர்ப்பாயாக! வாழு! வாழ்வாங்கு வாழ்க! நலமெல்லாம் பெற்று வாழ்க! சித்தத்தில் சிவனை இருத்தி ஞானதவம் செய்வோர் வாழ்வாங்கு வாழ்வர்! மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வர்! பின் இறைவனடி சேர்வர்! இது சத்தியம்!

 அப்படி வாழும் ஞானதவ சீலர்கள் செய்வது எல்லாமே தவமாகும்! அவர் சொல்வது எல்லாமே மந்திரமாகும்! “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப” என்பது தொல்காப்பிய சூத்திரம்!

 ஞானதவம் செய்வோரோ நிறைவான மனிதர் அவர் சொல்வதே வேதம் மந்திரம்! அப்படிப்பட்டவர் நல்லதுதான் செய்வார். நல்லதுதான் செய்வார் சந்தேகமில்லை! இறைவன் அருளால் கருணையால் ஞானதவம் செய்வோர் ஞானியாவார் இறைவனடி சேர்வர்! அந்த இறைவனை கண்டு பாடி ஆடுக! ஒப்புயர்வற்ற உயர்ந்த உன்னதமான வாழ்க்கைநெறியான சநாதனதர்மம் இங்கே விளங்கும்போது வேறு எந்த மதமும் மார்க்கமும் சமயமும் இங்கே துலங்கவில்லை! கொல்லன் தெருவில் ஊசி விற்க வந்த கதைதான் பிற மதத்தவர் நிலை! 

நமக்கு மதம் இல்லை - ஆணவம் இல்லை! வாழ்க்கை நெறியே உள்ளது! நமக்கு ஜாதி மதம் இனம் மொழி முதலிய எந்த வேறுபாடும் வேண்டாம்! நாம் மனிதர்கள் அவ்வளவுதான்! நமக்குள் இரண்டே பிரிவுதான் ஒன்று ஆண், இன்னொன்று பெண்! வேறெதுவும் வேண்டாம்! நாமனைவரும் எல்லாம்வல்ல இறைவனின் பிள்ளைகளே!

“பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்

தங்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே

சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு

எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ”

திருமால் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு சிவனை அர்ச்சிக்கும் போது ஒரு பூ குறைந்ததாம்! உடனே தன் கண்ணை பிடுங்கி மலராக சிவன் பாதத்தில் இட்டாராம்! மகிழ்ந்த சிவன் மாலுக்கு சக்கராயுதத்தை வழங்கினாராம்! இப்படிப்பட்ட சிவன் மகிமையை எங்கும் கூறி பாடியாடி மகிழ்வோம் நாமே!

“பிரமன் அரியென்று இருவருந்தம் பேதைமையால்

பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க

அரணார் அழலுருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ”

திருமாலும் பிரம்மனும் நான்தான் பெரியவன் நான் தான் பெரியவன் என்று வாதம் புரிந்து கொண்டிருக்கையில், மிகப்பெரிய ஜோதியாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஓங்கி உயர்ந்து நின்றான் சிவபெருமான்! முடியை தேடி அன்னமாக பிரம்மனும், அடியை தேடி பன்றியாக திருமாலும் போயினர் போயினர் போய்க்கொண்டேயிருந்தனர். முடியும் அடியும் காணாமல் சோர்ந்து திரும்பினர்! சிவமே உயர்ந்தது என்று ஒப்புக்கொண்டனர்!


www.tamil.vallalyaar.com 

14. திருவுந்தியார்

 14. திருவுந்தியார்

சிவபெருமானின் திருவிளையாடல்களை, பிரதாபங்களை கூறி பாடியாடும் மகிழ்ந்தாடும் பாடல்கள்! இங்கும் ஞான நிலைகளே மறைவாக சொல்லப்படுகிறது!

“வளைத்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற”

வில் வளைந்தாலே அம்பு எய்த முடியும்?! வில்லிலே அம்பை வைத்து எப்படி விடுவார்கள்? வில்லிலே கட்டப்பட்ட நாண் - கயிற்றை பின்னாலே இழுப்பர்! அப்போதுதான் அம்பு விடும்போது முன்னால் வேகமாக போகும்! அதுபோல நம் இரு கண் நாண். உள்ளே மத்தியில் அக்னி கலையில் சேரும்போது சக்தியுடன் அம்புபோல நடுவிலிருந்து ஒளி பாயும்! சிவபெருமான் இப்படி வில்லை வளைத்தால் விளையும் பூசல் என்கிறார்! கண்மலர் ஒளியால் ஒளி மிகுவதால் விளையும்! சல்லென பாயும் ஒளியால் முன் நிற்கும் முப்புரம் - மும்மலத்திரை எரிந்து போகும்! இதுதான் ஞானம்! இதற்கு எது காரணம்? உந்தீபற உன் - தீ - பற்றி எரிந்து பறந்து வந்து மும்மலத்திரையை எரிக்கணும்! எல்லாமே வெந்து சாம்பலாகணும் மும்மலம் அற்றாலே பிறவிப்பிணி நீங்கும்!

“ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற”

முப்புரம் எரித்த சிவன் கையில் இரண்டு அம்பு இல்லை! ஏகம்பமாய் ஒரே - நீண்ட - கம்பம் போன்று ஒளி பெருகியவனாய் இருக்கும் சிவம் தன் கையில் ஒரு அம்பே வைத்துள்ளார்! நம் இரு கண்களே வில்! உள் அக்னிகலையே வில் நாணை பின் இழுத்து சேர்க்கும் இடம்! நாண் பின் குவியும் இடம்! அந்த ஓர் அம்பே, ஓரம்பே முப்புரம் எரித்தது! சிவன் புன்னகைத்தார்! என்பது கண்மணி வாய் திறந்தது ஒளி பிறந்தது மலம் எரிந்தது ஞான அனுபவமே!

“பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனை”

பார்ப்பதி - பார்ப்பது எது கண்தானே! அந்த கண்ணின் பதி - தலைவன் கண்ணிலே பதிந்திருப்பவன் சிவம்தானே! ஒளிதானே! அந்த சிவத்தை பகைத்த தக்கனை அழித்தார் சிவமே! சிவத்தை தூஷித்த தக்கன் சிவத்தாலேயே அழிந்தான்! நாம் சாப்பிடும் ஆகாரம் சத்தாகி அவிப்பாகமாகி நம் ஆவியோடு சிவத்தோடு சேரும்! இல்லையேல் நாம் சவம்!

13. திருப்பூவல்லி (thiruvasagam) - 3

“எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி உருமூன்று மா கி உணர்வரிதாம் ஒருவனுமே புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ”

சூரியன், சந்திரன், அக்னி என மூன்று தீயை இறைவன் உலகுக்கு அருளி சக்தியூட்டினான்! அவற்றை நம் சிரசிலும் - வலதுகண் இடதுகண் உள்ளே உள்ள அக்னிகண் ஆக மூன்றாகவைத்து படைத்தான்! அண்டத்திலுள்ளது பிண்டத்தில்! 

நம் மூன்றாம் கண் கடைக்கண் திறக்க முகத்திரண்டு கண்ணே - கண் வழியேதான் போகணும்! இரு புருவம் நெரித்து பார்வை அகமுகமாக பார்க்கும்போது போகும் ஒளி அக்னியை சேரும்! அக்னி பத்திக்கும் - பெருநெருப்பாகும்! இதுவே ஞானசாதனை! 

இறைவன் உருமூன்றாகி நின்றது மூன்று கண்ணாகி நின்றதே! சில அதி புத்திசாலி உரையில் உருவம் அருவம் அருஉருவம் என மூன்றாகி என எழுதியுள்ளார். மூட்டாளே, உரு மூன்று என்றல்லவா மாணிக்கவாசகர் கூறுகிறார்! அருவம் உருஅருவம் எல்லாம் உருவமா? அறிவில்லாதவர்களே?! குருவின் பாதங்களில் பணிந்து ஞானம் கற்று, ஆணவம் அற்று திருவடியை பற்று!! 

நீ பற்றிய உலகப்பற்று அற்றால்தான்! பற்றற்ற இறைவனை நீ பற்ற முடியும்!! பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்! இது சாதாரணமாக படித்து அறியக்கூடியதல்ல குருவின் பதமலரில் பணிந்து அறியக்கூடியது! உணரக்கூடியது! 

அந்த இறைவன் யார் தெரியுமா முப்புரம் எரித்தவன்! எப்படி? புன்னகையால்! வேறு யாருமல்ல! எதுவுமல்ல! நம் கண்மணியின் உள் உள்ள சிவமே அ!! கண்ணே சிவம் - கண்மணி சிரித்தால் - கண்மணி அடைபட்ட துவாரம் திறந்தால் உள் உள்ள சிவமான நெருப்பு முப்புரமாகிய நம் மும்மலங்களை எரித்துவிடும்! இந்த உண்மை அறியாதவர்களை திருமூலர் மூடர்கள் என திட்டுகிறார்! அப்படியானால் நான் திட்டுவதில் தவறென்ன இருக்கிறது!? படித்தவன் திமிர் பிடித்தவன் அடுத்தவனை மதிக்க மாட்டான்! எப்படி குருவை வணங்குவான் பணிவான்! 

ஒரு கூட்டத்தில் கல்லூரி பேராசிரியர் இப்போது ஒரு மாணவனும் ஆசிரியரை மதிப்பதில்லை என்று அலுத்துக் கொண்டார்! மாணவன் மதிக்கும்படியா இவர்கள் நடந்து கொள்கிறார்கள்? பல கல்லூரிகளில் மாணவன் யார் ஆசிரியர் யார் என்றே அறிய முடியாதபடி மாணவனைப்போல நவநாகரீக உடை உடுத்தி தன் உடல்நாற்றம் போக்க நறுமணபொருட்களை பூசி பகட்டாக திரிந்தால் எப்படி மதிக்கத் தோன்றும் டேய் நண்பேண்டா என தோளில்தான் கைபோடுவார்கள்! கல்லூரி பேராசிரியர் பலர் புகைபிடித்தல் தண்ணியடித்தல் புலால் உண்ணல் இன்னும் பல போதை பொருட்களுக்கு அடிமையாகி காமாந்தகனாகவே திரிகிறார்கள்!? 

எப்படிடா உங்களை மாணவர்கள் மதிப்பார்கள்! மிதிக்காமல் விட்டிருக்கிறார்களே என சந்தோஷப்படு! அந்த காலத்தில் உபாத்தியாயர்கள் என்றால் ஒரு பயம் மரியாதை இருந்தது! மாணவர்கள் மட்டுமல்ல சமுதாயமே மதித்தது. அவர்களும் அங்ஙனம் ஒழுக்கசீலர்களாக மேதைகளாக திகழ்ந்தார்கள்! இன்றோ உபாத்தியாயர்கள் போய் வாத்தியார் ஆகி வாத்தி என்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல் ஆகிவிட்டது! மரியாதையே கிடையாது! ஓய்வாத்தி! என்று கூப்பிடுகிறான் மாணவன்! கிண்டல் பண்ணுகிறான்! அன்றைய ஆசிரியர் கௌரவமாக உடையணிந்தனர். சமுதாயத்தில் கௌரவமாக வாழ்ந்தனர் எல்லோரும் போற்றினர்! இன்று பள்ளிக்கூடத்தில கூட பாடம் நடத்துவதில்லை! 3000 ரூ 5000ரூ வாங்கி டியூசன் நடத்தி லட்சலட்சமாக பணம் சம்பாதிக்கும் +2 ஆசிரியர்களே அதிகம்! யாரிடம் சொல்ல இந்த அக்கிரமத்தை! பலர் நன்றாக தின்று கொழுத்து காட்டுப் பண்ணி போலவே உள்ளனர்! மாணவன் எப்படி மதிப்பான்! இன்றைய ஆசிரியர் பலரும் ஆ! - சிறியரே!? ஆண்டவா மாணவர்களை காப்பாற்று!

“வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்கத் தன்சீரடியார் கூட்டமும் வைத்து”

நாம் வணங்க இறைவன் தன் திருவடியை நம் தலைமேல் - கண்ணாக வைத்து அருளியிருக்கிறான்! அந்த திருவடி வார்கழல்வாய் - வார் - திரையால் மறைக்கப்பட்ட, கழல் - திருவடி, வாய் - கண்மணி மத்தியிலுள்ள துவாரம். வாழ்த்த வைத்து நாம் வாயார வாழ்த்தி கண்ணாரக் கண்டு ஞானதவம் செய்ய வேண்டும். நாம் இணங்கி இருக்க, சத்சங்கம் கூடி சத்விசாரம் செய்ய, சீர்பெற்ற அடியார் - கண்ணை குருவருளால் திறக்கப் பெற்ற, இறைவன் அருளால் சீரான கண்ணை பெற்ற நல்ல அடியார் கூட்டமும் தந்தருள்வான்!

“கன்னா னுரித்தென்னை ஆண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான”

கல்லிலே நார் உரித்ததுபோல, எனது வார்கழல் - கழலிலே - திருவடியிலே உள்ள வார் - நார்! திரையகற்றி என்னை ஆண்டு கொண்டான்! இறைவன் அடியேன் மீது கருணை கொண்டு என் கண்மணி மறைப்பை மும்மலத்திரையை, கட்டி வைத்த நாரை - வார் - கயிரை உரித்து இல்லாமலாக்கி திருவடிகளை பொன்போல் ஒளிரச் செய்தான்!


“அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி”

இறைவன் முன்பு, நெடுங்காலத்திற்கு முன்பு ஆலமரத்தின் கீழ் அமர்ந்து அருமறைகள் இவ்வுலகுக்கு அருளினான்! இறைவனால் அருளப்பட்டதே வேதங்கள்!

13. திருப்பூவல்லி (thiruvasagam) - 2

 "அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன்"

அம்பலம் என்றால் கோயில் என்றொருபொருள்! அம்பலம் ஆகிவிட்டது - வெளிப்பட்டுவிட்டது என்றால் இதுவரை இரகசியமானதாக சொன்னது எல்லோரும் அறிய வெளிப்பட்டுவிட்டது என்பது மற்றொரு பொருள்!

 நமது உடலே கோயிலாக கொண்ட அம்பலவாணன் நமது கண்களிலே எல்லோரும் பார்க்கும்படியாகவே, நாம் இந்த உலகத்தையே பார்க்கின்ற கருவியாகவே கண்மணி ஒளியாகவே ஆடிக் கொண்டிருக்கின்றான்! 

கண்ணே - மெய்ப்பொருள்! கண்ணிலே மணியிலே பிணைந்திருக்கிறான் புணையாளன் - ஒளி - சிவம்! அம்பலத்திலே ஆடுகிறான்!

"ஆனந்தத் தேனிருந்த பொந்தை பரவி"

நம் கண் கருவிழிக்குள் மரத்திலுள்ள பொந்து போல் பாறைகளுக்கிடையே உள்ள குகை போல உள்ளே சிவத்தையடைய பாதை உள்ளது! முன்பாக கண்மணி உள்ளது! ஞானதவம் செய்வோர் கண்மணியில் நினைவை நிறுத்தி உணர்ந்து விழித்திருந்தால் பொந்தின் உள்ளே ஒளி போகும்!

 “அக்கினிகுஞ்சொன்று கண்டேன் ஆங்கே மரப்பொாந்திடை வைத்தாய்” என்று மகாகவி பாரதி பாடி மகிழ்ந்ததும் ஞானநிலையே! பாரதியைப் பற்றி ஆகா ஓஹோ என்று வாய்கிழிய பேசுவார் பலர்! அன்று உண்ண உணவின்றி வறுமையில் வாடினார்! பட்டினியால் செத்தான் பாரதி! 

 நோவாலே மடிந்திட்டான் புத்தன்,
 சிலுவையிலே அடியுண்டு இயேசு செத்தான்,
 தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
 பார் புகழும் இராமனுமேயாற்றில் வீழ்ந்தான்
 நான் பார் மீது சாகாதிருப்பேன் பாரீர் என்ற பாரதி பட்டினியால் செத்தான்! 

மகா கேவலம்! அன்று பாரதியை ஆதரிக்க நாதியில்லை! செத்தபின் மணிமண்டபம் கட்டி போற்றுகிறது உலகம்?! 

கேடு கெட்ட மனிதர் நிறைந்த உலகமடா இது! பாரதியை போல ஞானசாதனையாளர்கள் பட்டினியால் துன்பப்படக்கூடாது என்பதற்காகவே வடலூரில் திருவருட்பிரகாச வள்ளலார் தர்மச் சாலையை ஏற்படுத்தி உணவு வழங்கினார்! 

வசதி படைத்தவர்கள் வக்கணையாக இருந்து சாப்பிடுவதற்கு கட்டப்பட்டதல்ல தர்மச்சாலை! புரிந்து கொள்ளுங்கள்! 

அந்த பொந்துவழியே உட்போனால்தான் ஆனந்ததேன் கிட்டும்! தருவதற்கு வாலைத்தாயிருக்கிறாள்! 

அடியேன் பட்டினியால் பரிதவிக்கக் கூடாது என்பதற்காகவே வாலைத் தாய், பல சீடர்கள் மூலமாக காணிக்கை தந்து காக்கிறாள்! 

சீடர்கள் பிச்சையில்தான் இந்த சிவசெல்வராஜ் வாழ்கிறேன்! மனநிறைவோடு ஆன்மீக பணி செய்கிறேன்! சீடர்கள் உதவி யான் மெய்ஞ்ஞான நூல்கள் எழுதி வெளியிடுகிறேன்!

13. திருப்பூவல்லி (thiruvasagam) - 1

13. திருப்பூவல்லி

திருவாகிய இறைவன் தங்கிய கண்மலரில் உள்ள அல்லி - பூவில் உள்உள்ள, நடுவிலுள்ள பகுதி கண்மணி - அதுவே திருப்பூவல்லி என்றார் மணிவாசகர்! தாமரைப்பூவின் உள்ளே உள்ள தாமரை மணி உள்ள அல்லி! அதுபோலவே கண்ணே தாமரையாகவும் மணியே அல்லியாகவும் கூறப்படுகிறது ஞானத்தில்!

“இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்”

இணையாக இரு திருவடித்தாமரையை என் சிரசில் கண்களாய் இறைவன் அருளி ஞானோபதேசம் ஞானதீட்சை அருளியதால் இந்த பிறவியே இரட்சைபட்டது! 

அதுவரை துணையாக இருந்த சுற்றங்கள் நண்பர்கள் சொந்த பந்தங்கள் அனைவரும் போய் தொலைந்தனர்! அப்பாடா நிம்மதி கிட்டியது! மாணிக்கவாசகர் சுற்றத்தை துறந்து துறவியானார் என்கிறார்! அடியேன் துறக்கவில்லை! சுற்றத்தார் சொந்தபந்தம் நண்பர்கள் அன்பர்கள் அனைவரும் என்னை துறந்தனர்? நான் தனியாக விடப்பட்டேன்! 

அப்போதுதான் பட்டினத்தார் கூறிய, “சுற்றத்தை வாழ்வை குடங்கவிழ் நீரொட்டமன்றேஇரு” என்பதன் உண்மை உணர்ந்தேன்! இறைவா நீயே கதி! என்ற நிலைக்கு என்னை எங்குரு தள்ளி எனக்கு இறைவன் வாலை அருள்பெற வழிவகை செய்தார்கள்!!? நான் யாரையும் வெறுக்கவில்லை! எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கினர்! “நாமாக தள்ளவில்லை! 

தன் பொல்லாங்கை கருதி தாமாகவல்லோ போய்விட்டார்கள்” என்ற சித்தர் பாடலே உண்மையாயிற்று! “அற்ற குளத்தில் அறுநீர் பறவைபோல” தண்ணீர் வற்றிய குளத்தில் பறவைகள் கூட வராது அதுபோல செல்வம் இழந்து துன்பப்பட்ட இந்த செல்லவத்தை எல்லோரும் ஒதுக்கித் தள்ளினர்!

 இறைவன் அன்போடு சேர்த்துக் கொண்டார்! இது என் வாழ்வில் நடந்த உண்மை! இன்று நல்லாயிருக்கும்போது சொந்தபந்தங்கள் நண்பர்கள் அன்று பேசக்கூட விரும்பாதவர்கள் தேடி வருகிறார்கள்! வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் தஞ்சம் நீ எனக்கு சாமி என்றனர் சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர் என்று வள்ளலார் சொன்னபடி அன்று என்னை திட்டியவரெல்லாம் இன்று நாடி வருகிறார்கள்! இறைவா எல்லாம் உன் லீலை!!

 யாருமே உதவிக்கு இல்லையே என நடுத்தெருவில் குடும்பத்தோடு கலங்கி நின்றபோது நானிருக்கிறேன் என்று கன்னியாகுமரி வாலைத்தாய் கூப்பிட்டு அருள்புரிந்தாள்! காத்தாள்! வாழ வைத்தாள்! இன்றும் படிஅளக்கிறாள்! தாயல்லவா? கருணையின் வடிவம்! அன்பின் - இரக்கத்தின் இருப்பிடமே தாயல்லவா? துன்பத்தால் வேதனையால் துடிதுடித்த என்னை காத்தருளினாள்!! உறுதியான நம்பிக்கை!

 விடாப்பிடியான - வைராக்கியமான தவம்! வள்ளலாரின் - குருபிரானின் அன்பு என்னை காத்தது! திருவாசகத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு ஞானியும் கூறுவது தன் அனுபவமே! அதுவே தவம் செய்வோர் எல்லோரது அனுபவமும் ஆகும்! இப்படியெல்லாம் வரும் - நடக்கும், கலங்காதே! 

உறுதியாக இறைவன் திருவடியை பற்றி்க்கொள், விடாதே! என நமக்கு கூறுகிறார்கள்! அந்தந்த அனுபவம் பெற்றவர்களுக்கு ஞானப்பாதையில் முன்னேற ஊக்கமும் கிட்டும்! அதை நமக்கு தரவே ஞானநூல்களை நமக்குத் தந்தனர் ஞானியர்!


Popular Posts