வெள்ளி, 17 ஜூன், 2022

நாம் பிறந்த இடம் எது ? கீழான இடத்தை நினைக்காதீர்கள்.

          🔥 கண்மணிமாலை 🔥


"சிற்றம் பலமுஞ் சிவனும் அருகிருக்க 

வெற்றம் பலந்தேடி விட்டோமே - நித்தம்

பிறந்திடத்தைத் தேடுதே பேதைமட நெஞ்சம்

கறந்திடத்தை நாடுதே கண்"

    - பட்டினத்தார் 


ஆன்மாக்களே, 

     இந்நூலை நீங்கள் சரியாக படித்து உணர்ந்திருப்பீர்களானால் இந்தப் பாடலுக்குரிய ஞான விளக்கத்தை சரியாக புரிந்து கொள்வீர்கள் ! அதை விடுத்து இந்தப்பாடலை ஆபாசமாக நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இது எதுவுமே புரியவில்லை என்று பொருள். 

சிந்தித்துப் பாருங்கள். 


 சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க - 

     சிற்றம்பலமாகிய கண்ணும் அதில் ஒளியாக நின்றிலங்கும் சிவனும் அருகிருக்க, 

 வெற்றம்பலந்தேடி விட்டோமே - 

     ஒன்றுமில்லாத வெருமையான வெளியிடங்களை தேடிவிட்டோமே ; 

 நித்தம் பிறந்திடத்தை தேடுதே பேதை மட நெஞ்சம் - 

     நம் பேதை மனம் தினமும் நாம் பிறந்த இடத்தை தேடுகிறது. 


நாம் பிறந்த இடம் எது ? 

நாம் ஜீவாத்மாக்கள் அல்லவா ? நாம் பரமாத்மாவிலிருந்துதானே பிறந்தோம் ! நமது பேதை மனது தினமும் நாம் பிறந்த இடமாகிய பரமாத்மாவையே தேடுகிறது எனக் கூறுகிறார் ! 

கீழான இடத்தை நினைக்காதீர்கள். 

 கறந்திடத்தை நாடுதே கண் - 

     நமது கண்கள் சூரியனும் சந்திரனும் ஆகும் அல்லவா ? இந்த இரு ஒளிக்கலைகளும், அகமுகமாக அக்னி கலையோடு கூடும்போது நாம் நம் ஜீவனை ஒளியாக நம் முன்னே காணலாம் !  நாதத்தொனி கேட்கலாம் ! 

     பின்னர் நமக்கு இறைவன் பிரசாதமாக சகஸ்ராராரத்திலிருந்து அமுதம் சொட்டும். அந்த மங்காத பால் கறக்கும் இடத்தையே நமது கண் நாடுதே என பட்டினத்தார் கூறுகிறார்.  எவ்வளவு உயர்ந்த ஞானம் ! 

தவறாக பொருள் கொண்டு மோசம் போகாதீர்கள். எல்லா ஞானவான்களும் மிக உயர்ந்த பொருளையே - இறைவனையே - அடையும் வழியையே கூறுகின்றனர். 

எனவே,,, 


 "மெய்ப்பொருளை" உணருங்கள் ! 

 "திருவடியை" சரணடையுங்கள் ! 

 "கண்மணிமாலை" யைப்பற்றி கனிந்து நில்லுங்கள் ! 

 மரணமிலா பெருவாழ்வு வாழலாம் ! 


"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !" 


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


 இறைவன் திருவடிகளே நம் கண்கள் ! 

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts