வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ஞான சற்குருவை நாடுங்கள்!

"சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலு மாமே"

திருமந்திரம் பாடல் - 2119


சிவனை வழிபட்டார் எண்ணிலாத்தேவர், இதேபோல் தெய்வங்களை வெவ்வேறு உருவத்தில் பெயரில் வழிபட்டவர் எண்ணிலா கோடி கோடி மாந்தர்! அதனால் பயனொன்றுமில்லை என்கிறார் திருமூலர்! இதெல்லாம் பக்திமார்க்கம்! இதேபோல் ஜப தபம் யாகம் வளர்த்தல் பூஜித்தல் செய்தும் பயனொன்றுமில்லை இதெல்லாம் கர்மமார்க்கம்! இதேபோல் பிராணாயாமம் குண்டலியோகம் ஹடயோகம் வாசியோகம் இப்படி செய்வதாலும் பலனொன்றுமில்லை! இதெல்லாம் யோகமார்க்கம்! இவைகளில் ஒருவர் உண்மையாக ஆத்மார்த்தமாக ஈடுபடுவானேல் அவனுக்கு என்ன கிட்டும் தெரியுமா? பக்தி கர்ம யோக மார்க்கங்களில் இறைவனை நீ அறிய முடியாது? ஏதோ ஒரு சில அற்ப சித்திகள் தான் கிட்டும்!? அது பிரயோஜனமில்லை!? தாயுமானவர் திருமூலர் சொன்னதையே அழுத்தந்திருத்தமாக அடித்துக் கூறுகிறார்!

"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக ஆடினவர்க்கு வார்த்தை சொல ஒரு சற்குரு வாய்க்கும் பராபரமே” என தெளிவாக கூறுகிறார்! உண்மையான பக்தனுக்கு உண்மையான கர்மிக்கு உண்மையான யோகிக்கு இறைவன் தகுந்த நேரத்தில் சிறந்த தகுந்த ஞானசற்குருவை காட்டுவித்து அவர் மூலம் உபதேசம் தீட்சை பெற வைத்து தவம் செய்ய வைத்து பின்னரே தகுதியுடையவரை ஆட்க் கொள்வார்! குரு இல்லாமல் இறைவனை அடைய முடியாது! பக்தியில் சிறந்தவரை இறைவன் சோதித்து பக்குவியாக்கி குருவிடம் சேர்ப்பித்து பின்னரே ஞானம் அருள்கிறார்!

குரு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே, ராமன், கிருஷ்ணன் பல குருவிடம் உபதேசம் கேட்டு நமக்கு பாடமாக வாழ்ந்து காட்டினர்! அந்த காலத்தில் எல்லா மன்னர்களும் ராஜகுரு வைத்திருந்தனர். அவர் ஆலோசனைபடியே நாட்டை ஆண்டனர். குருகுலம் சென்று கல்வி பயின்றே வாழ்ந்தனர்! குரு இல்லாமல் இருந்த ஒருவரை கூற முடியுமா? நமது வேதம் புராணம் இதிகாசம் ஞான நூற்கள் ரிஷிகள் சித்தர் உபதேசங்கள் இவையெல்லாம் குருவின் மகத்துவத்தை உங்களுக்கு உணர்த்தவில்லையா?

"குருதான் பிரம்மா குருதான் விஷ்ணு குருதான் மகேஸ்வரன் குருதான் சாட்சாத் பரப்பிரம்மம் இப்படி எல்லாமான குருவை வணங்குகிறேன் என்கிறது வேதம்! புரியவில்லையா? நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை அம்மா அப்பா சகோதர சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் உலகர் பல பள்ளி ஆசிரியர்கள் பலநூல்கள் இப்படி எல்லோரும் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தது தானே இப்போதைய உங்கள் அறிவு! பிறரால் சொல்லப்பட்டது நூற்களில் படித்தது இயற்கை இவையெல்லாம் குருவாக இருந்து கற்றுத் தந்த பாடம்தான் இப்போதைய உங்கள் அறிவு! இதுவா அறிவு?! இதனால் தான் இன்றைய விஞ்ஞானிகள் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டார்கள்! என்ன? இன்றைய மனிதனின் மூளை ஐந்து சதவீதமே இயங்குகிறது?! மீதி 95 சதவீதம் இயங்கவில்லை என்றனர்! மாபெரும் உண்மை இது! பல்கலைகழகங்கள் கொடுத்த தாள்களை வைத்துக்கொண்டு தங்களை அதிமேதாவி எனச் சொல்லும் படித்த முட்டாள்களே அந்ததாள்களை - காகிதங்களை வைத்து ஒரு பிரயோஜனமுமில்லை!

இறைவனின் தாள்களை திருவடிகளை அறிந்தாலே உணர்ந்தாலே முக்தி! அதற்கு ஞானசற்குருவை நாடுங்கள்! உங்களை போல பல்கலை கழக தாள் இல்லாதவராயிருக்கலாம் குரு! உங்களைப்போல் பணம் பதவி அந்தஸ்து இல்லாதவராயிருக்கலாம் குரு! உங்களை விட வயதில் சிறியவராயிருக்கலாம்

 குரு! எப்படியிருந்தாலும் சரி  ஞான உபதேசம் தீட்சை 

கொடுப்பாரானால் அவர்தான் ஞானசற்குரு!   அவரை பணி!

                        🔥அருளியவர்🔥: 

    ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா

------------------------------------------------------------------------                                                 

                      கன்னியாகுமரி

        🔥தங்கஜோதி ஞானசபை🔥 

          வந்தால் பெறலாம் ஞானம்!


மேலும் அறிய:

🌐 www.vallalyaar.com

▶️ YouTube: Thangajothi Gnanasabai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts