திங்கள், 3 ஆகஸ்ட், 2020

திருவாசகம் - சிவபுராணம் -2

             " ஏகன்  அநேகன்  இறைவ  னடிவாழ்க "

             ஏகன்  -  இறைவன்  ஒருவரே!  அநேகன்  -  எல்லா  ஜீவராசிகளிடத்தும் 
உயிராக,  அநேக  யோனி  பேதமாகவும்  இறைவன்  துலங்குகிறான்!  இப்படி 
எல்லாம்  வல்ல  இறைவன்  ஒருவரே,  எல்லா  உயிர்க்கும்  உயிராக  துலங்குகிறார்!
அப்படி  அவர்  துலங்கும்  இடமே  அவர்  திருவடியாக  கருதப்படும்.  அது  நமது 
கண்களே.  அது  வாழ்க  என்றுரைக்கிறது  மணிவாசகமான  திருவாசகம்!


              " வேகங்  கெடுத்தாண்ட  வேந்த  னடிவெல்க "

             நம்  மனமே  அதிவேகமாக  செயல்படுவது.  நாம்,  நமக்கெல்லாம் 
வேந்தனான -  அரசனான  அந்த  இறைவன்  திருவடியில்  சரணடைந்தால்,
நம்  மனதை  வேகத்தை  கட்டுப்படுத்தி,  பின்  இல்லாமலாக்கி  அருள்வான் 
அத்திருவடி  வெல்லட்டும்.

              " பிறப்பறுக்கும்  பிஞ்ஞகன்றன்  பெய்கழல்கள்  வெல்க "

             எண்ணிலா  பிறப்பெடுத்து  கர்மவினையால்  துன்புறும்  நம்மை  
மீண்டும்  பிறவாமல்  தடுத்து  காப்பது  இறைவன்  திருவடி -  கழல்களே 
-  கண்களேயாகும்!  அது  எப்படி  இருக்கிறது  தெரியுமா?  பிஞ்சாக  -
இளசாக -  பாப்பா  என  சொல்வோமல்லவா?  நம்  கண்மணிதான்  அப்படி 
உள்ளது.  அங்கே  தான்  கண்ணீர்  அருவியென  பெய்து  கொண்டே  இருக்கும் 
தவம்  செய்யும்  போது!  அது  வெல்லட்டும்.  வெற்றி  கிட்டட்டும்.

              " புறத்தார்க்குச்  சேயோன்றன்  பூங்கழல்கள்  வெல்க "

             திருவடியை  அடையாதவனுக்கு,  அறியாதவருக்கு  புறத்தார்க்கு 
எட்டாத  தூரத்தில்  இருப்பவன்  இறைவன்!  இறைவன்  திருவடியே  நம் 
கண்கள்  என  அறிந்தோர்க்கு  எட்டை  எட்டிப்  பிடித்தவர்க்கு  இறைவன் 
குழந்தையைப்  போலவே!  அவன்  கழல் -  திருவடி -  பூப்போன்ற  பாதமே!
அது  வெற்றி  பெறட்டும்.

               " கரங்குவிவார்  உள்மகிழுங்  கோன்கழல்கள்  வெல்க "

              இரு  கரங்கூப்பி  வணங்குதல்  புற  வணக்கம்.  இரு  கரம்  என்பது 
மெய்ஞானத்தில்  இரு  கண்களே!  இறைவனுக்கு  கால்  நமக்கு  கை  நம்  
இரு  கண்களே!  நம்  இரு  கரங்களை  -  கண்களை  உள்ளே  குவிப்பதே 
ஞான  தவம்!  அங்ஙனம்  தவம்  செய்வோருக்கு  மகிழ்வுடன்  பேரின்பம் 
அருளுவது  இறைவன்  -  தலைவன்  திருவடிகளே!  அது  வெல்க!

               " சிரங்குவிவார்  ஓங்குவிக்குஞ்  சீரோன்  கழல்  வெல்க "

              நமது  சிரசின்  உள்ளே  மத்தியில்  நமக்கு  சீர் -  கண்  கொடுத்த  
சீரோன்  இறைவன் -  ஆத்மாவாய்  இருப்பதை  அறிந்து,  சீர்கொண்டு -
கண்களை  அகமுகமாக  குவிப்பவரை -  திருவடி  ஒளியை  ஆத்ம  ஜோதியாய் 
ஓங்கச்  செய்வான்  இறைவன்!  அந்த  திருவடி  வெல்க. 

ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்  ஐயா 
www.vallalyaar.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts