சனி, 25 ஜூன், 2016

சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

எல்லா சன்மார்கிகளும் அறிந்து அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பெரியவர்.சன்மார்க்க சான்றோன் – சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

 மதங்கடந்தது ஞானம்,

சன்மார்க்கம் என்பதற்கு கன்னியாகுமரி சதாவதானி செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம் ஆவார்! இந்த சன்மார்க்க பெரியவரை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் இடலாக்குடியில் இடர் இல்லா குடியில் பிறந்த இஸ்லாமிய பெரியவர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர். சன்மார்க்க நெறி நின்ற உத்தமர். அற்புத அறிவாற்றலால் தவபலத்தால் சதாவதானி ஆனார். ஒரே நேரத்தில் 100 விதமான செயல்களுக்கு கேள்விகளுக்கு பதில் தந்தார். அவதான கலை ஓர் ஒப்பற்றக் கலை. அதிலும் 100, சதாவதானி ஆவது மிகப் பெரிய ஆற்றல். ஆனார் நம் பாவலர். இவர் சிறந்த நாவலரும் ஆவார். செந்தமிழ் புலமை பெற்று மிக மிகச் சிறப்பாக பேசும் நா வன்மை கொண்ட நாவலர்.

வள்ளலார் இராமலிங்கர் பாடியது இறையருள் பாடல்கள் அல்ல என தமிழ்நாட்டின் சில மடாதிபதிகள் மட அதிபதிகள் நீதி மன்றத்திற்கே சென்றனர். வழக்கு தொடுத்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரே வள்ளலாரை கண்டதும் எழுந்து நின்று பணிந்து வணங்கியதை கண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். விடவில்லை மட அதிபதிகள் முட்டாள்கள். ஆறுமுக பாவலரின் சீடர் கதிர் வேற்பிள்ளை மூலம் சொற்போர் தொடர்ந்தனர். அருட்பா, மருட்பா என இரு தரப்பிலும் வாதம், விவாதம் பல நாட்கள் பல ஊரிலும் நடந்தது.

இப்போது வருகிறார் கன்னியாகுமரி தந்த சன்மார்க்க சீலன் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் விவாத மேடைக்கு. இலக்கண இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தேவார திருவாசக ஞான நூற்களை சுட்டிக் காட்டி திரு அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடியது இறைவன் அருளால் பாடிய அருள் பாக்களே! அருட்பாவே. அது திருஅருட்பா தான் என அறுதியிட்டு உறுதியாக பேசினார்.

ஊர்தோறும் பலருக்கும் பதில் தந்தார். திருஅருட்பா இறையருளால் பாடப்பட்ட தீந்தமிழ் பாக்கள் தான் அதில் எள்ளளவும் ஐயத்திற்கு இடமில்லை என்று சூளுரைத்தார். என்ன ஆச்சர்யம் பாருங்கள்! ஒரு முஸ்லீம் வள்ளலாரை போற்றினார். சைவ மட அதிபதிகள் தூற்றினர்.

மதங்கடந்தது ஞானம், சன்மார்க்கம் என்பதற்கு கன்னியாகுமரி சதாவதானி
செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம் ஆவார்!

மாமேதை தமிழ்க்கடல் செய்குத்தம்பி பாவலரின் இந்த சிறந்த குணம் சன்மார்க்க நெறி வள்ளலாரை போற்றிய பண்பு அனைவரையும் கவர்ந்தது. ஆச்சரியப்பட வைத்தது. பலன் என்ன தெரியுமா? அதை விட அதிசயம் கன்னியாகுமரி வாலை அருள் புரிந்தாள்! எப்படி?

காஞ்சி காமாட்சி கோயிலுக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் நம் செய்குத்தம்பி பாவலர். கருவரைக்கே சென்று காஞ்சி காமாட்சியை தொழும் பாக்கியத்தை தந்தனர் ஊர், கோவில் பெரியவர்கள். அது மட்டுமா பொன்னாடை போர்த்தி மலர் மாலைகள் சூட்டி பாராட்டி யானை மீது அமர்த்தி காஞ்சியிலே ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பு செய்தனர். பாராட்டி மகிழ்ந்தனர். அன்றைய காலகட்டத்தில் நம் நாடு மதங்கடந்த மனித நேயத்தை ஆன்ம நேயத்தை போற்றியது. வேற்றுமை இன்றி வாழ்ந்தனர்.

வள்ளலாரை இந்து மத துறவி என பார்க்க வில்லை செய்குத்தம்பி பாவலர். ஒப்பற்ற சன்மார்க்கி என்றே கண்டார். போற்றினார். வாழ்த்தினார்.
வள்ளலாரின் அருட்திறத்தை திருவருட்பா முழுவதும் காணலாம் என்று தக்க சான்றுகளோடு தமிழகமெங்கும் சென்று உரையாற்றினார். வள்ளலார் சன்மார்க்க சங்கத்தவர் ஒவ்வொருவரும் முதலில் கன்னியாகுமரி சதாவதானி செய்குத்தம்பி பாவலருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் முஸ்லீம் அல்ல ஆன்மநேயம் கொண்ட அற்புத மனிதர்.

சன்மார்க்கிக்கு இலக்கணம் சதாவதானி செய்குத்தம்பி பாவலரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts