ஞாயிறு, 15 டிசம்பர், 2013

ஒன்றவன் தானே

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே

ஒன்றவன் தானே - இறைவன் ஒருவரே

இரண்டவன் இன்னருள் - பரமாத்மாவாகிய ஏக இறைவன் ஜீவாத்மாவாக எல்லா ஜீவராசிகளில் துலங்குகிறான் ஏக இறைவன் இரு விதமாக அருள் பாலிக்கின்றான்! ஒன்று அறக்கருணை மற்றொன்று மறக்கருணை! நன்னெறி நடக்க வைத்து அருள் புரிந்து ஆட்கொள்வது அறக்கருணை. தீய நெறி நடக்கும் அசுர குணத்தவரை அழித்து ஆட்கொள்வது மறக்கருணை! நமது உடலில் உயிர் ஒன்று. அதை அடைய வழியாகிய  விழிகள் இரண்டு ஆக இறைவன் அருள் விளங்குவது இரு கண்களில் !

நின்றனன் மூன்றினுள்  - உடலில் உயிராகி துலங்கும் இறைவன், சூரிய கலையாக சிவமாக இடது கண்ணில், சந்திர கலையாக சக்தியாக இடது கண்ணிலும், இருகண்ணும் உள்ளே சேரும் இடத்தில் அக்னி கலையாகவும் ஆக மூன்று நிலையாக விளங்குகிறார்! சர்வ வல்லமை படைத்த இறைவன் முக்காலமும் மூவுலகமும் விளங்கும் பரம்பொருளாகும்.

நான்கு வேதங்கள் ஆகிய ரிக் யஜுர் சாம அதர்வண வேதம் ஆகியவற்றால் உணர்த்த படுபவனே இறைவன்! அவை சரியை கிரியை யோகம் ஞானம் எனும் நான்கு வழி முறைகளை போதித்து ஜீவர்களை பக்குவிகளாக்குகிறது. அவைகளை அந்த கரணம் நான்கு வழி அதாவது மனம் புத்தி சித்தம் அகங்காரம் வழிஉணரவைத்து முக்தியை தருகிறது!

ஐந்து வென்றனன் - இறைவன் பஞ்சகீர்த்தியம் புரிபவன்! படைத்தல் காத்தல் மறைத்தல் அருளல் அழித்தல் என்ற   ஐந்தொழிலையும் செய்து உயிர்களை கடை தேற்றுகிறான். மனிதன் ஐம் புலன்கள் வழியே சென்றால் துன்பமே! ஐம்புலன்களை இறைவன் வழியில் திருப்பினால் மட்டுமே பேரின்பம் பெறலாம்!

ஆறு
விரிந்தனன் சிவம் ஐந்து முகத்தோடு ஆறாவது  அதோமுகத்துடன்  ஒளியை நெற்றி கண்ணில் இருந்து வெளியாக்கி ஆறுமுக கடவுளானார்! நமது உடல். நமது உடலில் ஆறு ஆதாரமாகி உடல் இயக்கத்துக்கு காரணமாக   விளங்குகின்றார்!

நமது இரு கண்களாகி வெள்ளை விழி கரு விழி கண்மணி என மூன்று இரண்டு ஆகி ஆறுமுக - இருகண் ஒளியாகவும் துலங்குகிறார்.

இரு கண் உள் ஆறுபோல் ஒளி பாய்ந்து செல்லும் தன்மையாக உள்ளார்! நெருப்பாறு! நமக்கு ஆறாவது பகுத்தறிவாக துலங்குவதும் அந்த இறைவனின் ஒளியே!

ஏழு உம்பர் சென்றனன் - ஆறு ஆதாரங்களையும் கடந்து ஏழாவது சகஸ்ரதளத்தையும் ஊடுருவி நடுவில் துலங்குபவன்!  ஈரேழு உலகத்தையும் தாண்டி அதற்க்கு அப்பாலும் எல்லையில்லா பெருவெளியில் பேரொளியாக துலங்குபவன்! எழு வகை பிறவிகள் எல்லாவற்றிக்கும் உள்ளிருந்து ஒளிர்ந்து அருள் மழை பொழிந்து மோட்சம் அருளும் பிறப்பு இறப்பு இல்லாத பெருந்தகை!

நம்முள் இருக்கும் நம் ஜீவனாகிய அந்த இறைவனை நாம் எட்டி பிடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி "எட்டேயாகும்!" எட்டு என்றால் என்னில் எட்டு எழுத்தில் அ நமது கண்களே எட்டு. அதை நீ எட்ட வேண்டும்!

எதற்கு? உன்னுள் ஒளியான ஜீவாத்மாவான அந்த இறைவனை எட்டி பிடித்திடவே!

கட்டிப்பிடி நம் திருவடியாகிய நம் கண்களை!  இறுக பற்றிப்பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை ! இறுக பற்றிப்பிடி இறைவன் திருவடியாகிய நம் கண்களை! நம் கண்களிலில் ஒளியாக துலங்குவதை உணர்ந்து தவம் செய்தாலே, உள்ளே நம் ஜீவனாக அந்த பரமனே இருப்பதை உணரமுடியும்! திருமந்திரத்தின் மூவாயிரம் பாட்டும் முதிர்ந்த ஞானத்தையே ஊட்டுகிறது என்பதற்கு இந்த முதல் பாடலே போதுமான சாட்சியாகும்!

1 கருத்து:

  1. //ஆறு விரிந்தனன் சிவம் ஐந்து முகத்தோடு ஆறாவது அதோமுகத்துடன் ஒளியை நெற்றி கண்ணில் இருந்து வெளியாக்கி ஆறுமுக கடவுளானார்! //

    அய்யா இதில் ஆறாவது அதோமுகத்தோடு என்று சொல்லி இருக்கீங்க... அந்த அதோமுகம் என்பது என்ன?

    பதிலளிநீக்கு

Popular Posts