ஞாயிறு, 28 ஜூலை, 2013

இறைவனுக்கு ஓரவஞ்சனையா?

 பற்பல காலம் தவம் செய்து உடலை வருத்தி செய்யும் தவ முனிவர்கள் பலர் இருக்க இறைவன் மாணிக்க வாசகருக்காய் இரங்கி அருள் புரிந்து ஆட்கொண்டாராம். ஏன் ? இறைவனுக்கு இந்த ஓர வஞ்சனையா?




யார்?எப்படி? தவம் செய்தார்கள்? என இறைவன் பார்க்கிறார்?! பூடம் தெரியாமல் ஆடுகிறார் என எங்கள் ஊரில் சொல்வார்கள்! இறைவன் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் எப்படி அடைவது என தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்பவருக்கு(இது தவமா?) எப்படி இறைவன் அருள் கிட்டும்!


குருட்டு பூனை கிணற்றிலே விட்டத்தை தாண்டிய மாதிரி தான்! இப்படி கண்னை  மூடி - கண்மூடித்தனமாக தவம் செய்பவர்களை தான்  திருமூலர் இவ்வாறு கூறுகிறார் 'எண்ணாயிரத்தாண்டு தவம் செய்யினும் கண்ணார் அமுதினை கண்டவாரில்லை' கண்ணார் அமுதினை அறிந்து கண்டுணர்ந்து கண் திறந்து நீதவம் செய்தாலே காண்பாய் கடவுளை!

அதற்க்கு நீ முதலில் கட-உள்ளே , உன் கடமாகிய உடம்பினுள்ளே புக வேண்டும்! எப்படி கண்மணி வழி! அது தான் ஒரே வழி! அது அறிய ஞான சற்குருவை நாடு ! காவி உடுத்து உடலெல்லாம் திருநீறு பூசி  நீண்ட சடாமுடி, தாடி வளர்த்து , உத்திராட்சமாலை அணிந்து , உடலை வெறுத்து, பட்டினி கிடந்து , காய் கனி புசித்து இருப்பதால் யாதொரு பயனுமில்லை !

"ஜீவ ஒடுக்கம் பூதவொடுக்கம் ஒரு சேர உதிக்கும் சீதள பத்மம் தருவாயே"என  அருணகிரிநாதர்  முருகப்பெருமானை திருப்புகழ் பாடி வேண்டி பணிகிறார்!

வேஷம் போட்டு ஏமாற்றுபவர் தான் அதிகம் பேர் உலகிலே! நம் ஜீவன் ஒடுங்கியிருக்கும் இடம்  ஐம்பூதங்களும் ஒன்று சேரும் இடம் சீதள பத்மம் - குளிர்ச்சி பொருந்திய  தாமரை மலர் போன்ற உன் திருவடி தருவாயே! இரு கண்களில் தானே ஐம்பூதங்களும் உள்ளது. இறைவன் திருவடி தானே நம் இருகண்கள் ! இரு கண்வழி தானே உள்ளே நம் ஜீவன் ஒடுங்கியிருப்பதை காண முடியும்!

ஞான சற்குரு மூலம் கண்ணை அறி  - உன்னை அறி! அதை விடுத்து வேறு எதை செய்தாலும் கிட்டாது ஞானம்! இல்லை, இறைவன் தான் வர வேண்டும்! இறைவன் இறைவனே உன்னை தேடி வரவேண்டுமெனில் மாணிக்க வாசகரை போல உத்தம பக்தனாக சதா சர்வ காலமும் இறைவனையே எண்ணி வாழ்!  நிச்சயம் வருவார் நம்புங்கள்! தேவரும் மூவரும் காண திருவடியை நீ காண உத்தமனாகு!

உண்மை அறி ! உன் மெய் அறி! மெய் என்றால் சத்தியம் - நித்தியம் - அழியாது - அது மெய்ப்பொருள்! அதுவே இறைவன்! உற்றுப்பார் உன்னிலே !




- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts