சுழியாகிய முனைகண்டபின் உற்றாருற வற்றாய்
சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்
வழியாகிய துறைகண்டபின் அனுட்டானமு மற்றாய்
வழங்கும் பலநூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்
விழியாகிய மலர்கண்ட பின் உயர்ச்சனை யற்றாய்
மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்
அழியாப்பதி குடியேற்றினை அச்சம்பல வற்றாய்
யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே!
நெஞ்சிற் பொருளடி கண்டபின் நெஞ்சிற் பகையற்றாய்
நேசத்தோடு பார் மங்கையர் மேலும் நினைவாற்றாய்
மிஞ்சிச்சொலு முறையாண்மையும் வீம்பும் இடும்பற்றாய்
விரதங்களும் வேதங்களும் வீணாக மறந்தாய்
அஞ்சும் உடலாய் கண்டபின் ஆசைத்தொடர் பற்றாய்
ஆருந்திருக்கோயில் சிவம் அதுவும் தனில் உற்றாய்
தஞ்சம் எனும் ஞானக்கடல் மூழ்குந் திறமாகித்
தாள் சேர்ந்தனை குறைவேதினி சாலியாதிரு மனமே!
நாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்
ஞானக் கண்ணாலதனை நாடிச் செயல் கண்டு
சீசீயெனு முரையற்றனை சினமற்றனை உயிர்கள்
செய்யுமந் நினைவற்றனை நேசத்துடன் கூடிக்
கூசிக்கூல வரவற்றனை கோளற்றனை பாவக்
குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங்
காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி
கண்டாய் அரண் கொலுவாகிய சபை மேவினை மனமே
வெளிபெற்றிடு சொருபப்பொருள் வெளியாகிய ஒளியில்
விளையாகிய நாதத்தொனி விந்தின் செயல்கண்டு
களிபெற்றனை தயவுற்றனை பிறவிக் கடலென்னும்
தளையற்றனை உலகத்தினில் வரவற்றனை காணா
ஒளிபெற்றனை மயலற்றனை ஒழிவற்றனை ஓதும்
உரையற்றனை களிபெற்றனை பயனற்றனை ஊறல்
குளிபெற்றனை அரனுற்றிடு கொலுவுற்றனை கோமான்
கொடைபெற்றனை அறிவுற்றனை கோளற்றனை மனமே
பத்தோ டிருகலையாகிய பனிரெண்டில் நாலும்
பாழ்போகிட மீண்டேவரும் பதியின்கலை நாலும்
பெற்றோடி வந்திங்கேரிய பேரமைந்தனை கண்டு
பேசும் நிலையோடும் உறவாகி பிணக்கற்றாய்
கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமு மற்றாய்
கானற்புன லோகப்பிடி மானத்தையு மற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பல மீதே
சேர்ந்தாய் குறைதீர்ந்தாய் இனிவாழ்வாயிரு மனமே
அல்லற்படு மோரொன்பது வாயில் பெருவாசல்
ஆறுமறி வார்கள் அறியார்க ளொருவாசல்
சொல்லப்படு தில்லைச்சிறு வாசற்படி மீதே
சூழும்பல கரணாதிகள் வாழும் மணிவாசல்
தில்லைப்பதி யருகே யடையாள மெனலாகும்
சேருங்கனி காணும்பசி தீரும் பறந்தோடும்
சொல்லப்படு மல்லற்பல நூற்கற் றதனாலே
சின்னஞ்சிறு வாசல்புக லாமோசொலு மனமே
விண்டு மொருவர்க்கும் உரையாடப் பொருள்தானும்
பீஜாட்சர வீதித்தெருக் கோடிமுடிந் திடத்தே
கண்டு மிருந்தார்க்குள் ளிருபன்னிரு காலற்
காணமது தானும் பனிரெண்டாங் குலம்பாயும்
பிண்டம் புகு மண்டம்புகு மெங்கும் விளையாடிப்
பீடமெனும் நிலைசேர்ந்திடு பெருமைதனைக் காண்பாய்
என்றும் மொழியாற்றார் பரத்தோடும் உறவாகி
ஏதும் உரையாமல் இருப்பார்க ளரிமனமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக