ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

அகத்தியர் - அடுக்கு நிலை போதம்

சொல் பிறந்த இடம் எங்கே?
முப்பாழ் எங்கே?
துவார பாலகர் எங்கே?
நல்ல சங்கு நதி எங்கே?
வைகுண்டம் எங்கே?
நாரணன் ஆழ் இலை மேல் படுத்தது எங்கே?
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே?
ஆறுஐந்து இதழ் இரண்டும் முளைத்தது எங்கே?
சொல்ல வல்லார் உண்டானால் அவரை
நாமும் தொழுது வணங்கி குருவென பணிந்து
வழங்கல் ஆமே


உந்தி எனும் நிலை எங்கே?
அறுகோணம் எங்கே?
ஓங்கார நிலை எங்கே?
உற்ற இடம் எங்கே?
மந்திரமும் சாத்திரமும் பிறந்தது எங்கே?
மறைநாலும் விரித்த அயன் தாணும் எங்கே?
முந்திவரும் கணபதியும் பிறந்தது எங்கே?
முக்கோண முளை எங்கே? அடிதான் எங்கே?
இந்த வகை பொருள் அறிந்து சொல்வார் தம்மை
இறைவன் என்றே கருதி இயம்பல் ஆமே

பலபதத்தில் பொங்கி வரும் வழிதான் எங்கே?
பரிந்து முறைகொண்டு நின்ற அறியும் எங்கே?
உற்பனம் ஆம் கரு நின்று விளைந்தது எங்கே?
ஒருபாதம் தூக்கி நின்ற அடையாளம் எங்கே?
தற்பரமாய் ஆகிநின்ற நிலைதான் எங்கே?
சர்வஉயிராய் எடுத்த சிவனும் எங்கே?
இப்பொருளை அறிந்து உரைக்கும் பெரியோர் தம்மை
இறைவன் என்றே கருதி இயம்பல் ஆமே

அடி முடியும் நடுவான நிலையும் எங்கே?
அறுசுவையும் கொண்டு ஒளித்த இடமும்  எங்கே?
 வடிவான ஐந்து தலை மாணிக்கம் எங்கே?
வரையான ஊமை எனும் எழுத்தும் எங்கே?
இடம் ஆக ஆடி நின்ற பாதம் எங்கே?
இச்சையுடன் பேசி நின்ற எழுத்தும் எங்கே?
அடைவு ஆகப் பொருள் அறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குரு என நம்பல் ஆமே 


சற்குருவும் சகநிதியும் ஆனது எங்கே?
சாகாத தலை எங்கே?
வேகாக்கால் எங்கே?
முப்பொருளும் ஒரு பொருளாய் நின்றது எங்கே?
முனை எங்கே  தலை எங்கே முகமும் எங்கே?
நன் கலம் ஆயிரத்து எட்டு இதழும் எங்கே?
நாலுகை ஒருபாதம் ஆனது எங்கே?
இப்பொருளை அறிந்து உரைக்கும் பெரியோர் தம்மை
இறைவன் என்று கருதி இயம்பல் ஆமே

அகத்தியர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts