வெள்ளி, 12 ஜூன், 2026

வள்ளலார் அற்புத சித்திகள் (miracles) - 1

 

1
தருமச் சாலையிலே பெரும்பாலும் தினமும் வள்ளல்பெருமானின் அருளுரை இருக்கும் !தேனை பருக எங்கிருந்தெல்லாமோ வண்டென ஆன்மதாகம் கொண்டோர் வரலாயினர். மனிதர்கள் மட்டுமா? வள்ளல்பெருமான் பேச்சை தினம்ம் ஒரு கால் ஊனமுற்ற ஆடு கேட்குமாம்!புண்ணியம் செய்த ஜீவன் அது!

ஒரு சமயம் வள்ளலார் பேச்சை கேட்க தொலை தூரத்திலிருந்து வந்த அன்பர், நேரமாகிவிட்டதே என்று குறுக்குப் பாதையில் ஒரு வாழை தோட்டம் வழியாக வேக வேகமாக வந்தார். எதிரே ஒரு நாகம் படமெடுத்து கடிக்கவர ,அன்பர் ,இராமலிங்கம் மேல் ஆணை என பயத்தால் கத்த பாம்பு அப்படியே நின்றது . திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்துவிட்டார். ஆச்சு! வடலூரில் தருமச் சாலையில் வள்ளல் தரிசனமும் உபதேசமும் !உரை கேட்டு திரும்ப யத்தனிக்கையில் வள்ளல் பெருமான் அந்த அன்பரை கூப்பிட்டு உன்னால் ஒரு வாயில்லா ஜீவன் வதைபடுகிறதே விரைந்து சென்று என்மீது விடுத்த ஆணையை விலக்கிவிடு அது போய்விடும் என்றார்?! அப்போது தான் அன்பருக்கு வழியில் நடந்தது நினைவுக்கு வந்தது .பெருமானிடம் ஆசிபெற்றுப் போனார்! ஆணையை விடுவித்தார் பாம்பும் ஓடி மறைந்தது !எங்கோ நடந்ததை வள்ளலார் எங்ஙனம் அறிந்தார்? வாயில்லா ஜீவன் வதைபடுவதை காண சகியாமல் விரைந்து போ என்றாரே எவ்வுயிருக்கும் கருணை காட்டும் அந்த உள்ளம் எத்தகைய மேன்மையானது!! மென்மையானது!


2
இன்னொரு சமயம் அன்பர்களோடு வள்ளல் பெருமான் காட்டு பாதையில் நடந்துவரும் போது ஒரு நல்ல பாம்பு எதிர்பட கூட வந்தவர்கள் ஓட வள்ளலார் நின்றார் .அப்பாம்பு வள்ளலாரின் காலை சுற்றி சிறிது நேரம் இருந்தது .சற்று தூரத்தில் இருந்த அன்பர்கள் கண்டணர். வள்ளலார் ஏதோ சொன்னதும் அப்பாம்பு விலகி அப்பால் சென்றது .வள்ளலாரின் பாத தரிசனம் பெறவந்தது அப்பாம்பு !யாரோ ?எவரோ?எவ்வுயிரும்வள்ளலார் தம் உயிராகவே கருதினார் !மெய்ஞ்ஞானியின் ,கடவுள் மயமானவரின் இயல்பும் அதுதானே!


3
தருமச் சாலையிலே வள்ளல் பெருமான் அருளுரை கேட்கவரும் அன்பர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் .வள்ளலார் ஏன் முக்காடு போட்டிருக்கிறார்?நேரே கேட்க தயக்கம் பயம். தன் புதல்வனை ஒரு நாள் கூட்டிவந்தார். புறப்படும் போது வள்ளலார் அந்த அன்பரை தனியே அழைத்து இதைத்தானே கேட்க விரும்பினாய் என்று தன் தலைமுக்காட்டை எடுத்தார்!ஒரே ஒளி வெள்ளம் அதை காணப்பொறாத அன்பர் மயங்கிமூர்ச்சையானார்!அன்பர்கள் மூர்ச்சை தெளிவிக்க எழுந்தவரிடம் இது பற்றி எவரிடமும் கூறாதே எனக்கூறி அனுப்பினார் வள்ளலார்!

4
ஒரு சமயம் வள்ளலார் அன்பர்களுடன் சிதம்பரதரிசனம் பெற்று தருமச் சாலை திரும்புகையில் வழியில் பயங்கர மழை. ஒதுங்குவதற்கு இடமில்லா பொட்டல்காடு .என்செய்வது எல்லோரும் மழையில் தெப்பமாக நனைந்து விட்டார்கள் .ஆனால் அதிசயம் அவர்கள் கூடவே நடந்துவந்த மழையில் வந்த வள்ளல் பெருமான் மீது ஒரு துளி மழை கூட படவில்லை !பெருமான் அருகே மழை துளி வந்ததுமே ஆவியாகி விட்டது!? அப்படியானால் வள்ளல் பெருமான் உடல் எத்தகைய ஒளிமிகுந்தது உஷ்ணமாயிருந்தது ?!உடன் வந்தவர்கள் வியந்து போற்றினார். எல்லோரிடமும் இந்த அற்புதக்காட்சியை கூறி மகிழ்ந்தனர்!! வள்ளலாரை பலரும் வெள்ளாடை துறவி முக்காட்டுசாமி ,சித்தர் ,ஞானி ,கடவுளே அவதாரம் செய்துள்ளார் என பலவாராக போற்றி மகிழ்ந்தனர். இறைவன் ஜோதிமயமானவர் என்று கூறி ,அகல் விளக்கேற்றி வைத்து வழிபட உபதேசித்தார். ஆரம்பத்தில் உருவத்தை தான் தியானிக்க வேண்டும் பின் அதுவே ,உருவம் கரைந்து அருவமாகும் தொடர்ந்து தவம் செய்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை காணலாம் என்றார் .சதா சர்வ காலமும் தெய்வ பாவனையை தீபத்தில் கொள்க என்றார்.

5

ஒரு சமயம் தருமச் சாலையிலே அன்பர்களோடு இருக்கையிலே, திடீரென ,ஒரு காவியுடை சடைமுடிருத்திராட்ச பாணியாக துறவி ஒருவர் வள்ளலார் முன் தோன்றி ஒரு லட்டும் கொடுத்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார்!பின் திடீரென மறைந்தும்போனார். பார்த்துக் கொண்டிருந்த அன்பர்கள் வியப்புமேலீட்டால் வள்ளலாரிடம் கேட்டபோது ,அவர் எம்மை சந்தித்து அளவளாவ வந்த ஒரு சித்தர் என்றும் இந்நேரம் அவர் காசியிலேயிருப்பார் என்று கூற அன்பர்களுக்கோ மேலும் வியப்பு! பாம்பின் கால்பாம்பறியும் !வள்ளல் பெருமான் மகத்துவம் அறிந்து தரிசிக்க வந்தார் ஒருமாபெரும் சித்தர் பெருமான் !

6

தருமச்சாலையில் நிகழ்ந்த மற்றொரு அற்புதம்! சிதம்பரத்திலே ஆனித் திருமஞ்சன விழா .அன்பர்கள் வள்ளலாரோடு போகலாம் என கருதியிருந்தார்கள் . முன்பு சில முறை அப்படி போனதால் இம்முறையும் போக எண்ணினர். குறிப்பிட்ட நாளும் வந்தது .வள்ளலார் கிளம்பிக் காணோம். நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது. அன்பர்கள் செய்வதறியாது திகைத்தனர். இம்முறை போக முடியாமல் தோய்விட்டதே என வருந்தினர்.வள்ளலார் அவர்களின் எண்ணத்தை அறிந்து தருமச்சாலையினுள்ளே ஒரு திரைகட்டச் செய்து, அதில் பாருங்கள் என்றார்! என்ன அதிசயம்!சிதம்பரம் கோவிலில் நடந்த அபிஷேக ஆராதனைகள் தெளிவாக திரையிலே எல்லோரும் கண்டு சேவித்தனர் .இப்போது தானே சினிமா தொலைக்காட்சி எல்லாம் வந்துள்ளது. வள்ளல் பெருமான் கைகாட்டிய இடத்தில் , எங்கோ சிதம்பரத்தியில் நடந்தவைகளை வடலூர் தருமச் சாலையிலிருந்தபடியே சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதிமுன்னிருந்து பார்ப்பது போல் பார்த்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய மகா அதிசயம் இது!! பார்த்த அன்பர்கள் அடைந்த பேரானந்தத்திற்கு அளவேயில்லை!

7

தருமச்சாலைக்கு வெளியே உச்சிவேளையில் வெயிலில் அமர்ந்திருப்பார் நம் பெருமானார். அப்போது பார்த்த சிலர் பெருமான் தலையிலிருந்து மேலே சூரியன் வரை பெரிய அக்னிகம்பம் தோன்றியிருப்பதை கண்டு மெய்சிலிர்த்தனர்!

ஒரு சமயம் உச்சிப் போதில் பெருமானார் தருமச் சாலைக்கு வெளியே சென்றார். சிறிது நேரமாகியும் வராததால் அங்கிருந்த சண்முகம் பிள்ளை வெளியே வந்து பார்க்க பெருமானின் அங்கங்கள் கைவேறு கால்வேறு தலைவேறாக தனித்தனியாக வெட்டுண்டது போல் கிடக்க பார்த்து பதறி கத்தி மயங்கி வீழ்ந்தார். உடனே பெருமானார் அங்கமெல்லாம் ஒன்றாகி அவர் மயக்கம் தீர்த்து இனி இப்படி திடீரென வராதீர் எனக்கூறி இதுவும் ஒரு சாதனையே என்று கூறுவாராயினர். இது தான் நவகண்டயோகம் என்பர்!

சில சமயம் தருமச் சாலை சமையலறையில் அன்பர்களை சொல்லி சுற்றி இரும்பு வாணலியில் நெருப்பு கங்குகளை போட்டு அதன் மத்தியில் அமர்ந்து தியானம் செய்வார். அவரே நெருப்புமயம் .அவரை சுற்றிலும் அனல், இப்படி பலவிதமான கடுந்தவங்களையெல்லாம் செய்தார். இறைவன் நம் வள்ளல் பெருமானுக்கு அற்புத சித்திகள் எல்லாம் வாரி வாரி வழங்கினான்!'ஆடுறு சித்திகள் அனைத்தும் தந்தான் 'என வள்ளலாரே கூறுகிறார்.


8

இன்னொரு முறை பெருமானார் திருவதிகை வழிபாட்டுக்கு சென்றார். பெருமான் மகிமை அறிந்து பெருங்கூட்டம் கூடலாயிற்று .பெருமானை காண முண்டியடித்து வந்தனர். ஆனால் பின் விழா கூட்டம் அமைதியானது! பார்த்தால் பல இடங்களிலும் வள்ளலார் தோன்றி மக்களுக்கு ஆசிவழங்கி அருள் பாலித்தார்! ஒரே நேரத்தில் பல உரு எடுக்கும் ஆற்றல் பெற்ற மாபெரும் சித்தர் பெருமானாகவும் விளங்கினார் வள்ளலார்!


தருமச் சாலையில் ஒருநாள் இரவு உணவு அருந்தும் நேரத்தில் வெளியூரிலிருந்து 100 பேர் வந்து விட்டனர். சண்முகம் பிள்ளை பெருமானிடம் வந்து 10 பேர் உட்கொள்ளவே உணவு இருப்பதை தெரிவித்து ஒன்றும் புரியாமல் நின்றார். பெருமான் உடனே நீங்கள் போய் அனைவருக்கும் இலைபோடுங்கள் நானே பரிமாறுகிறேன் என்றார். வள்ளல் பெருமான் தன் திருக்கரத்தால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். வள்ளல்பெருமான் எடுக்க எடுக்க அமுதசுரபிபோல உணவு வந்து கொண்டேயிருந்ததை கண்ட சண்முகம்பிள்ளை அதிசயத்து அப்படியே நின்று விட்டார்!

இன்னொரு நாள் சண்முகம்பிள்ளை மறுநாள் சமைக்க அரிசி இல்லையே என்று வள்ளலாரிடம் கூற சரி, போம் நாளை வரும் என்றார்கள். மறுநாள் காலை வண்டி வண்டியாக அரிசி காய்கறிகள் தருமச்சாலைக்கு வந்தது. வந்தவர் நேற்றிரவு கனவில் பெருமான் தோன்றி விபரம் கூற கொண்டு வந்தேன் எனக் கூறிப் போனார்.

10 

ஒருசமயம் கோடைகாலத்தில் மழையின்றி துன்புற்ற மக்கள் துயர் நீக்க பெருமானார் ஒரு செம்பு தண்ணீர் கொண்டு வந்து தம் காலில் ஊற்றும்படி கூறினார். அன்பர்கள் அவ்வாறு செய்த சற்று நேரத்தில் மேகங்கள் சூழ்ந்து பெரு மழைபெய்தது!மக்கள் மகிழ்ந்தனர்.
இதை அறிந்த புதுப்பேட்டை எனும் ஊர் மக்கள் திரண்டு வந்து தங்கள் ஊர் ஏரிகினறு குளம் எல்லாம் வற்றி பஞ்சம் நிலவுகிறது நீங்கள் தான் காக்கவேண்டும் என கதறினர். வள்ளல் பெருமான ஆறுகுடம் தண்ணீரை தன் தலையில் விடச்சொன்னார். அவ்வாறே செய்ததும் புதுப்பேட்டையிலும் பெருமழை ஆறு கிணறு நீர் நிலைகள் நிரம்பின ஊரே செழித்தது. மக்கள் மகிழ்ந்து வள்ளல் பெருமானை போற்றி துதித்தனர்.

11 
ஒரு சமயம் அன்பர் ஒருவருடன் மாட்டு வண்டியில் அவர் ஊருக்கு போகும் வழியில் கள்வர் இருவர் வண்டியை மறித்தனர் .அன்பர் மோதிரத்தை கழற்ற முற்பட்டபோது பெருமான் வெளியிறங்கி அவசரமோ எனகேட்க கள்வர் அடிக்க தடியை ஓங்கினர் .வள்ளலார் பார்த்தார். ஓங்கிய கை அசைவற்று நின்றுவிட்டது. கண்பார்வையும் கள்வர்கள் இழந்தனர் .வந்திருப்பது சாதாரண ஆள் அல்ல என்றுணர்ந்த கள்வர்கள் கதறி தங்களை காப்பாற்றும்படி கெஞ்சினர். மனமிரங்கிய வள்ளல் அவர்களை மன்னிக்க "பிச்" என்றார். கள்வர்கள் முன் போல் சரியாயினர். வள்ளலாரை வண்டியோடு சுற்றி வந்து வணங்கி மன்னிப்பு கேட்டு போயினர்.


12 

வள்ளல் பெருமான் பார்த்தாலே போதும் புலால் உண்பவன் புலாலை மறப்பான் ! தீய எண்ணமுடையவர்களும் வள்ளலை தரிசித்தால் நல்லவர்களாயினர். ஒரு சமயம், பல காலமும் ரசவாதம் கற்றுத்தருக என சதா தொந்தரவு செய்த அன்பரிடம் வடலூரில் கீழேயிருந்து ஒரு பிடி மண் எடுக்கச் சொல்லி தன் கையில் வாங்கி மூடிக் கொண்டு அவர்கையைக் காட்டச்சொல்லி கொட்டினார். என்ன ஆச்சரியம் மணல் அனைத்தும் தங்க பொடியாயிருந்தது !
உடனே வள்ளலார் அவனிடம், "பற்றற்ற ஞானி கைப்பட்டமண்ணும் பொன்னாகும் 'இதற்காக காலத்தை வீணடிக்காதே !அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையும் வழியைபாரு! அவர் அருள் கிட்டினால் நீ தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று நல்ல புத்தி சொல்லி அனுப்பினார்.

13

வள்ளல் பெருமான் பலர் நோயை மருந்துகள் கொடுத்து குணப்படுத்தினார். சித்த மருத்துவத்திலும்  தேர்ந்தவர் ரசவாதத்திலும தேர்ந்தவர். வள்ளல்பெருமானையெல்லா தரப்பு ஆட்களும் காணவந்தனர். அருள்வேண்டி வந்தவர் பொருள் வேண்டிவந்தவர், பொன்செய்ய வேண்டி வந்தவர், நோய் தீர நாடி வந்தவர் ,சித்த மருத்துவம் படிக்க வந்தவர்,வேதபுராணம் இலக்கியம் படிக்க வந்தவர்இன்னும் பல வேண்டுகோள்களோடு வந்தவர் பலர். எல்லோருக்கும் எல்லாம் வழங்கினார் வள்ளலார் .நாடி வந்தோரெல்லாம் நல்லருள் பெற்றனர்.

14 
வேட்டவலம் எனும் ஊர் ஜமீந்தாருக்கு இரு மனைவிகள் . ஒருத்திக்கு மகோதரம் நோய். மற்றொருத்தியை பிரம்மராட்சஸ் பிடித்திருந்தது.வள்ளல் பெருமான் அவர் மாளிகை போனார். வீட்டு வாசலில் கால் வைத்ததும் பிரம்மராட்சஸ் ஓடிவிட்டது !அடுத்த மனைவிக்கு விபூதிகொடுக்க அவரும் குணமானார்! வள்ளலார் திருவடிகள் வீழ்ந்து வணங்கினார்.வள்ளல் பெருமான் வேண்டுகோள்படி அவர் ஜமீனுக்குட்பட்ட எந்த கோவிலிலும் உயிர்பலி கொடுப்பதை தடை செய்தார்!

15

தம்மில் அமிழ்ந்து இருப்பதால் இது "தமிழ்" என்று இலக்கண இலக்கியங்களை ஆதாரமாக காட்டி தமிழின் பெருமையை பாரறியச் செய்தவர் வள்ளலார்!!வள்ளலாரின் பெரும் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவலாயிற்று! இறைவன் சந்நிதியிலே வள்ளலாரின் பாடல்கள் எல்லோராலும் பாடப்பட்டது! வள்ளலாரின் மகத்துவம் அறியாத அறிவிலிகள் அவர் மேல் பொறாமைப்பட்டனர். தூற்றினர். வள்ளலாரின் பாடல்களையும் பழித்துரைத்தனர். சமயவாதிகள் வெறுப்பால் பொறாமையால் புழுங்கினர். அவர்களுக்கு பழியேற்க வந்து சேர்ந்தார் யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். சைவசமய பற்றுள்ளவர் ,வள்ளலார் பாடல்கள் சரியில்லை என நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்தோ பரிதாபம் ஆறுமுகநாவலர் பாடு. குறிப்பிட்ட நாளில் எல்லோரும் நீதிமன்றம் வந்தனர் .வள்ளலாரை கூப்பிட அவர் உள்ளே வர அங்கு அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வள்ளலாரை வணங்கினர்.வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலரும் எழுந்து வள்ளலாரை வணங்கினார்.


www.vallalyaar.com 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts