ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

சூக்கும உடலை அடைந்தவன் புத்திமானாவான்!



எட்டாம் தந்திரம்

"அத்த னமைத்த வுடலிரு கூறினிற்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமா னாங்காரம் புரியட்ட காயமே"

திருமந்திரம் பாடல் - 2123

உலக மக்கள் அனைவருக்கும் அத்தன் - அனைத்துமானவன் - இறைவன், தான் உயிராக உடலினுள் நின்று அருள்கிறான்!  அப்படி அவன் அமைத்த உடல் இரண்டு கூறாக உள்ளது! நாம் பார்க்கின்ற நமது ஸ்தூல உடல்! இதற்குள் அமைந்த சூக்கும உடல்! என இரண்டு! 

சூக்கும உடல் ஸ்தூல உடல் தோற்றம் போலவே வெள்ளொளியென விளங்கும் புகை படலம் போன்றது! இது சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்தினையும் உணர வல்லதாகும்! சத்தம் காதால் கேட்பது. பரிசம் உடலால் உணர்வது. ரூபம் கண்ணால் பார்ப்பது. ரசம் வாயால் சுவைப்பது. கந்தம் மூக்கால் நுகர்வது என பஞ்சேந்திரிய செயலாகும்! 

சூக்கும உடலை அடைந்தவன் புத்திமானாவான்! ஆங்காரம் உள்ளவன் - செயலாற்றும் திறன் படைத்தவன். தலைக்கனம் கொண்ட ஆணவக்காரன் அல்ல! இதுவே புரியட்டகாயம் எனப்படும்! ஔவையார் விநாயகர் அகவலில் புரியட்டகாயம் புலப்பட எனக்கு தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி என பாடுவதை காண்க!

                     🔥அருளியவர்🔥: 

       ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,

        ஞானசற்குரு சிவ செல்வராஜ் 

                          🔥அய்யா🔥

           www.vallalyaar.com

இரு கண் சேரும் இடமான ஆத்மஸ்தானமே

  எட்டாம் தந்திரம்

"எண்சாண ளவால் எடுத்த உடம்புக்குள்
கண்கா லுடலிற் கரக்கின்ற கைகளில்|
புண் கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண் பாலுடம்பு தன்னாலுடம் பாமே"

திருமந்திரம் பாடல் - 2127

எண்சாண் உடம்பு! நமது உடல் அளவு இதுதான்! அவரவர் கையால் அளந்தால் ஒரு சாண் ஒருகையளவு எட்டுகையளவுதான் எண் சாண்தான் உடம்பு! எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்! தலையே நம் உடலில் தலையாயது! முக்கியமானது! ஏனெனில் உயிர் நம் சிரநடுவுள் தான் உள்ளது! கண்கால் - நம் கண்களே இறைவனின் கால்கள். திருவடி! அதனால் தான் கண்கால் என்றார் திருமூலர்! 

நமது உடலில் கரக்கின்ற கை - தலையில் உள்ள கை நம் இரு கண்களே! நமது கண்கள் தான் நமது கை, இறைவனுக்கு கால்! பரிபாஷை இரகசியம்! நமது வலக்கை வலது கண் இடக்கை இடது கண் இரண்டையும் குவித்து இறைவனை தொழுதால்! இரு கரம் சேர்த்து தானே கும்பிட வேண்டும்! இரு கண் இணைந்தால், உள்ளே இரு கண் சேரும் இடமான ஆத்மஸ்தானமே புண் கால் நாம் சேர வேண்டிய மூன்றாம் இடம்! முச்சுடரும் சேர்ந்த நிலை! 

அது 8 கலை உடைய அக்னி! 8ன் விரிவு, 8x8 64 கலையாகும்! இரு கண் உள் சேர்ந்தால் வலது சூரிய கலை 12-ம் இடது சந்திர கலை 16-ல் 12 உடன் சேரும் எஞ்சிய 4 கலை அக்னி கலையின் 64 கலையுடன் சேர்ந்து 68 கலையாகும்! அப்போதுதான், சூரிய சந்திர கலை இணைந்து அக்னி கலையுடன் சேரும்போதுதான் ஆத்மஜோதி தரிசனம் கிட்டும்! புணர்தல் என்றால் சூரிய சந்திர கலைகள் இணைதல்! புணர்ந்து அக்னி கலையுடன் சேர்வதால் இது புண் கால் அறுபத்தெட்டு ஆத்மஸ்தான அவ்வுடலே சூக்கும உடல் - யாக்கை எனப்பட்டது! 

அங்கே தான் நன்மைதரும் பால்-அமுதம் கிட்டும் எனவே தான் நண் பால் உடம்பு என்றார் திருமூலர்! அதுயார்? இறைவன் தன்னால் நமக்கு அருளப்பட்ட உடம்பு! சூக்கும சரீரம்!- புரியட்டகாயம்!

                              🔥அருளியவர்🔥: 

       ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா

                            www.vallalyaar.com

பாம்பு என்றால் கட்செவி!

  எட்டாம் தந்திரம்

"அழிகின்ற ஒருடம் பாகும் செவிகண்"

திருமந்திரம் பாடல் - 2140

காம வசப்பட்டு மனிதன் கண்ணிருந்தும் குருடனாய்! செவியிருந்தும் செவிடனாய் வாழ்கிறான்! நல்ல சற்குருவை நாடி வேதபுராண உபதேசம் செவியில் கேட்க மாட்டான் பாவி! சற்குருமூலம் திருவடி தீட்சை கண்களில் பெற மாட்டான்! மெய்ஞ்ஞானம் உணராமல் உடம்பை அழிகின்ற உடம்பு தானே சாகும் வரை இஷ்டம்போல் வாழலாம் என முட்டாள்தனமாக கருதி தன் உடலை புண்ணாக்கி கெட்டு குட்டி சுவராகி செத்தும் போவான்! "

அழியுடம்பை அழியாமையாக்கும் வகையறியீர்" என ஒரு ஞானி மனிதனை எச்சரிக்கிறார்! ஆம், இந்த மானுடர் யாக்கை அழியக்கூடியது தான் மனம்போனபடிவாழ்ந்தால்! மனதை செவிகண்ணில் நிறுத்தி தவம் செய்தால், மனதை இறைவன் திருவடியில் ஒப்படைத்து தவம் செய்தால், செவிக்கண் ஒளிர்ந்து நாதத்தொனி கேட்டு, விண்ணிலே விளங்கும் நாதத்தொனி, ஓம் கேட்டு, தன்னிலும் ஒலிக்கக்கேட்டு, உடலில் ஒளிவியாபித்து உடலும் அழியாது உயிரும் பிரியாது பேரானந்த நிலை பெறுவர்! மெய்ஞ்ஞானியாவார்! செவிக்கண் -  நம்கண் பார்க்க மட்டுமல்ல! கேட்கவும், உள்ளேபோனால் நாதத்தொனி, தசவித நாதம் கேட்கவும் செய்யும்! பாம்புக்கு செவி - காது கிடையாது! கண்ணே பார்க்கவும் ஒலியை கேட்கவும் செய்கிறது அதனால் தான் பாம்பின் கண்ணை "கட்செவி" என்பர்! 

பாம்பிற்கு மற்றொரு பெயர் "அரவம்"! ஏன் எனில் அது சப்தத்தை அரவத்தை உணர்ந்து செயல்படுவதால் தான்! கண்ணால் பார்க்கவும் சப்தத்தை அரவத்தை உணரவும் ஆண்டவன் கட்செவி தந்துள்ளான்! இது ஒரு ஞான ஜீவன்! எல்லா தெய்வங்களுடனும் பாம்பு சம்பந்தப்பட்டிருக்கும்! ஒருவர் கழுத்திலே பாம்பு! ஒருவர் பாம்பணையில் படுத்திருக்கிறார்! ஒருவர் பாம்பை இடுப்பில் கட்டியிருக்கிறார்! ஒருவர் பாதத்திலே பாம்பு! ஒருவருக்கு பாம்பு கிரீடமாகிறது! இது போதாதென்று பாம்பாட்டி சித்தர் என்றொருவர்! பாம்பு என்றால் கட்செவி! 

கண்ணும் செவியும் சேர்ந்தது. கண்ணில் மணியில் ஒளியை நினைந்து நீ தவம் செய்தால் கண் உள்ளேயே தசவித நாதமும் ஓங்காரமும் கேட்கலாம்! இதை உணர்த்தவே, மனிதன் அறியவே இந்த பாம்பு புராணமெல்லாம்! கண்ணின் - செவிகண்ணின் மகத்துவத்தை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? ஞானம் பெற கண்ணை அறி!


                 படியுங்கள்! பண்படுங்கள்!

               பரம்பொருள் அருள் கிட்டும்!

             

                       🔥அருளியவர்🔥: 

         ஆன்மீக செம்மல், ஞானசித்தர், ஞானசற்குரு சிவ செல்வராஜ்  அய்யா

                    wwww.vallalyaar.com

சித்தர் போகர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல!

 "இலையா மிடையி லெழுகின்ற காமம்"

திருமந்திரம் பாடல் - 2141


மனிதன் பிறக்கிறான் - குழந்தை! ஒன்றுமே தெரியாது! பச்சை மண்! எந்த குசவன் கையில் அகப்படுகிறதோ அந்தவித மண் பாண்டமாகிறான்! ஆத்திக குடும்பத்தில் பிறந்தது ஆன்மீக சூழலில் வளர்வது ஆண்டவனை அறிய உணர வழிகாட்டும்! நாத்திக, குடும்பத்தில் பிறப்பது தான் பெரிய மேதை என கருதி முட்டாள்தனமாக வாழ்வது அந்த சூழ்நிலை இதுவரை யாரும் உருப்பட்டதேயில்லை! 

குழந்தை வளர்ந்து பாலனாகி பின் வாலிபனாகிறான் அப்போது நிகழும் உடல் வளர்ச்சி, பசி தாகம் தூக்கம் போல் காமமும் ஏற்படுகிறது மனிதனுக்கு! அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாலிப பிராயத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் இந்த இனக்கவர்ச்சி, காமம் கட்டுப்பாடுடன் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்! வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் - வாலிபத்தில் வந்து வயோதிகத்துக்கு முன்னால் முடிந்து விடுவது மட்டுமல்ல! நமது உடலின் இடையில் - இடுப்பு பிரதேசத்தில் ஏற்படும் உணர்வாலும் காமம் தலைதூக்குகிறது. இந்த இடையில் ஏற்படும் மாற்றமே, இடைப்பட்ட காலமே ஒரு மனிதன் பண்படும் காலமாகும்! 

நமது முன்னோர்கள் மனித வாழ்வை மேம்படுத்த சமுதாய அமைப்பை ஏற்படுத்தி ஒழுக்கம், பண்பை போதித்தார்கள்! பக்தியை ஊட்டினார்கள்! இயல் இசை நாடகமென முத்தமிழாலும் இறைவனை வழிபட, உணர வழிகாட்டினார்கள்! குருகுல வாழ்வை ஏற்படுத்தி பாலப் பிராயத்திலேயே நல்ல பண்போடு வளர வழி காட்டினார்கள்! மனிதன், மனிதப்பிறப்பெடுத்ததோடு நின்றுவிடாமல், மிருகம் போல் வாழாமல், மனிதனாக வாழவும்

வழிகாட்டினார்கள்! மனிதன் எப்போது மனிதனாவான்? பஞ்சமாபாதகமான பொய், கொலை, களவுகள், காமம் இவைகளை தன் வாழ்வில் சேர்க்காமல் இருந்தால்தான் மனிதன்! மனதில் எழும் மும்மலமான ஆணவம் கன்மம் மாயையின் செயல் ஆசை, காமத்தில் தான் உதயமாகிறது! "மாயை" மனிதனின் கர்ம வினைப்படி அவனை ஆட்டுவிக்கிறது! சிக்கிவிடாதே சீரழிந்து போவாய்! காமம் மனித

இயல்பு! சீராக்கிக்கொள்! திருமணமாகி ஏகபத்தினி விரதனாய் வாழு! மனைவியை காமக்கிளத்தி என்றும் சொல்வர்! மனைவியோடு மட்டும் காமம் வைத்துக்கொள்! பிற,உலக மாதரெல்லாம் தாய் என்று கொள்!

மனைவியோடும் மாதம் இருமுறை உறவு கொள்ளலாம்! அதுவே உத்தமம்! விந்துபலமே விந்துநாதம் பெற பேருதவியும் ஆகும்!

ஜாக்கிரதை! உடல் நலமாக, பலமாக, சீராக காம வசப்படாமல் இருக்க வேண்டும்! "காம சூத்திரம்" என்றொரு நூலை வாத்ஸ்யாயன மகரிஷி எழுதியுள்ளார்! ஒரு மகரிஷியே அதை எழுதி மக்களுக்கு நல்வாழ்வு வாழ வழிகாட்டியுள்ளார்! காமத்தை ஆபாசமாக்கி விடாதீர்கள் அழிந்துதான் போவீர்கள்! காமம் சாப்பாட்டில் சேர்க்கும் ஊறுகாய் போல இருக்க வேண்டும்! இலேசாக தொட்டுக் கொள்ளலாம்! ஊறுகாயை உணவாக கொண்டால் உயிர் தங்காது! திருமணமாகும் வரை ஆணும் பெண்ணும் ஆன்மீக உணர்வோடு வாழ வேண்டும்!

பக்தி ஞானஈடுபாடு உடையவராக திகழ வேண்டும்! நமது பாத பண்பாடு இதுவே! திருமணமான பின்னரே கணவன் மனைவி கருத்தொருமித்து  இல்லறநெறியோடு இறை உணர்வோடு வாழ வேண்டும்! சற்புத்திரர் பத்திரிகளை பெற்று பக்தியை ஊட்டி பண்போடு வளர்க்க வேண்டும் பாலபிராயமுடியு முன்னே தக்கதொரு ஆன்மீக குருவிடம் சேர்ப்பித்து பக்தி ஞான பாடம் படிக்கச் செய்ய வேண்டும்! பிள்ளைகளை பெற்றால் போதாது?!

தக்கதொரு சன்மார்க்ககுருவிடம் உபதேசம் பெறச் செய்ய வேண்டும்! மாதா பிதா தன் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக குருவை காட்ட வேண்டும்! குருவைக் காட்டாத பெற்றோர் வீண்! திருமணத்திற்கு பின்தான் காமம்! அதுவரை பக்தியுடன் ஒழுக்கத்துடன் பகவானை பணிய வேண்டும்! பண்பட்ட வாழ்க்கை அருள்வான் ஆண்டவன்! இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே! பெரிய பெரிய சாமியார்களெல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள்! சாமானியன் எம்மாத்திரம்! கடவுளே என்றிருந்தால், பெண்களையெல்லாம் தாயாக பார்த்தால் காமத்திலிருந்து தப்பிக்கலாம்! அபிராமி பட்டர் எல்லா பெண்களையும் தாய் அபிராமியாகவே பார்த்தார்! எல்லா ஞானிகளும் காமத்திலிருந்து மீண்டதால் தான் ஞானம் பெற்றனர்! காமத்தில் மூழ்கிகிடந்த அருணகிரி நாதர் காமத்தை விட்டார்-கடவுளை தொட்டார்! காமம் விலக கடவுளை நினை! கடவுளைப் பற்றி பேசும் சத்சங்கத்தில் சேர்! 

அசைவ உணவு காமத்தை உண்டாக்கும்! சைவ உணவே சன்மார்க்க உணவு! சாத்வீக குணம் சைவ உணவால் வரும்! அன்பு காட்டு! எல்லா உயிரையும் நேசி! எல்லா உயிரும் இறைவன்தான்! ஆசை கொள்ளாதே! காம உணர்வுக்கு அடிமையாகாதே! போகர்

சித்தர் பெண்ணோடு போகம் பண்ணியவரல்ல! பரம்பொருளோடு புருஷோத்தமனான இறைவனோடு எப்போதும் கலந்திருந்தவர்! அதனால் தான் போகர்! “பிறந்த இடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம்! கறந்த இடத்தை நாடுதே கடைகண்" என்றார் பட்டினத்தார்! இந்த பாட்டிற்கு படித்த முட்டாள்கள் எல்லாம் ஆபாசமாக பொருள் கொண்டனர்! பட்டினத்தார் மாபெரும் ஞானியல்லவா? அவர் உயர்ந்த ஞானத்தையல்லவா சொல்லியிருப்பார்?! அதை சிந்திக்க வேண்டாமா?

அடியேன் 1992-ல் முதன்முதலாக எழுதிய "கண்மணி மாலை" நூலிலேயே இதன் ஞான விளக்கத்தை சொல்லியிருக்கிறேன்! திருவருட்பிரகாச வள்ளலார் அருளால் அடியேன் எழுதி வெளியிட்டேன்! இதுவே மெய்ஞ்ஞானம்! பிறந்த இடம் - நாம் பிறந்தது பரமாத்மாவிலிருந்தல்லவா! நம்மை பேதை என்கிறார் -  பெண்ணின் பருவம் இது! ஜீவாத்மாக்களாகிய நாம் பெண் அம்சம் பேதைப்பெண்! சீவனாகிய பெண்பேதையாகிய நாம் நாட வேண்டியது எப்போதும் சிவனாகிய பரமாத்மாவாகிய நாம் பிறந்த இடத்தையே!

கறந்த இடம் - நாம் கண்மணி ஒளியை ஞானசற்குருமூலம் தூண்டி  பின் தொடர்ந்து தவம் செய்யச் செய்ய நம் கண் கடைசியில் உள்ளே போய் சேரும் இடம் கடைக்கண் இடம் ஆத்மஸ்தானம் அங்கே போனால் கிட்டும் அமுதம்! அந்த அமுதம் சாப்பிடவே ஜீவாத்மாக்களெல்லாம் துடித்துக் கொண்டிருக்கிறது! கடைசியில் கண்போய் கடைக்கண் சேர்ந்து நாடினால்தான் அமுதம் கிட்டும்! அதைத்தான் பட்டினத்தார் வெகு அழகாக கூறியுள்ளார்! காமம் நிறைந்த மனிதனுக்கு, மனம் படைத்தவனுக்கு எல்லாமே ஆபாசமாகத் தெரியும்! கடவுளை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி தவம் செய்பவர் எங்கும் எதிலும் கடவுளையே காண்பர்! அறிவுடையோர் எப்பொருள் யார் சொன்னாலும் மெய்ப்பொருளாகவே காண்பர்! அறிவு தானே ஞானம்! "காமமகற்றிய தூயனடி சிவகாமி நேயனடி" என்று வள்ளலார் பாடுகிறார். நாம் சிவகாமி அம்மையை சரணடைய வேண்டும்! சதாகாலமும் சிவத்தை காமமுற்றவளே சிவகாமி! நமக்கு சிவத்தை காமிக்கின்றவளே, காண்பிக்கின்றவளே சிவகாமி! 

அந்த சிவகாமிதான் தாய் - வாலை - கன்னி'ய' குமரி! தாயை பணிந்தால் சரணடைந்தால் காமத்திலிருந்து விடுபடலாம்! பணியுங்கள்! பார்க்கலாம்?! அடியேன் பார்த்தேன்! பரவசமானேன்! பகவதி அம்மா பரிவுடன் எங்களை காத்தருள்கிறாள்! ஆன்மீக குருவாய் எம்மை அமர்த்தி நாடி வருபவர் ஞானம் பெற மெய்ப்பொருள் உபதேசம், திருவடி தீட்சை செய்யும் பணியை செய்ய வைத்து காத்தருள்கிறாள்! இந்த வாலைத்தாயின் கன்னியாகுமரியைவிட சிறந்த கோவில் இந்த உலகத்திலேயே இல்லை!!

                 படியுங்கள்! பண்படுங்கள்!  பரம்பொருள் அருள் கிட்டும்!

                       🔥அருளியவர்🔥: 

         ஆன்மீக செம்மல், ஞானசித்தர்,          ஞானசற்குரு சிவ செல்வராஜ் 

               www.vallalyaar.com

Popular Posts