ஞாயிறு, 26 ஜூன், 2016

சன்மார்க்கிகள் விபூதி பூசலாமா!?

சன்மார்க்கிகள் விபூதி பூசலாமா!?



சாதி , மதம் , இனம் என வேறுபாடு இல்லாமல் நல்ல விஷயங்களை ஏற்பதே சன்மார்க்கம். துவேசம் காண்பிப்பவன் , ஆணவம் கொள்பவன் சன்மார்க்கி அல்ல.

சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம்.“எம்மத நிலையிலும் நின் அருளே துலங்க கண்டேன் “ என வள்ளலார் பாடுகிறார்.

விபூதி வேண்டாமெனில் ஏன் தரும சாலையில் , சித்தி வளாகத்தில் விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள்?!

வள்ளல் பெருமான் இருந்த காலத்தில் விபூதி பூசியே பல அன்பர்கள் நோயினை தீர்த்துளார்கள். வள்ளல் பெருமானும் நெற்றியில் திருநீறு பூசியே இருந்தார்.

ஓரு முறை கடலூர் தேவநாதன் என்ற அன்பர் மகன் நோய்வாய்பட்டான். வள்ளல் பெருமானை எண்ணி வணங்கினார். அச்சமயம் தருமச்சாலையில் அன்பர்களோடு வள்ளல் பெருமான் உரையாடிக் கொண்டிருந்தார் .தேவநாதன் வேண்டிய அக்கணமே பெருமானார் அவர் வீடு சென்று மகனுக்கு விபூதி பூச நோய் குணமாயிற்று .வள்ளலார் போய்விட்டார். மறுநாள் குணமான தன் மகனுடன் வடலூர் வந்து அன்பர்களிடம் நடந்ததை கூற , தருமச் சாலையிலிருந்த அன்பர்களோ பெர்மான் நேற்று ழுழுவதும் எங்களுடன் தான் இருந்தார் வெளியே எங்கும் போகவில்லை என்றதும் ,வள்ளல் பெருமான் ஒரேநேரத்தில் இரு இடங்களிலும் இருந்ததை கண்ட அன்பர்கள் ஆச்சரியமுற்றனர்.

அவர்களின் வியப்புக்கு அளவேயில்லை !ஓடி வந்து காத்த அவர் கருணை உள்ளத்தை போற்றி புகழ்ந்தனர்!வணங்கி மகிழ்ந்தனர்!

வேட்டவலம் எனும் ஊர் ஐமீன்தாருக்கு இரு மனைவிகள் . ஒருத்திக்கு மகோதரம் நோய். மற்றொருத்தியை பிரம்மரட்சஸ் பிடித்திருந்தது. வள்ளல் பெருமான் அவர் மாளிகை போனார். வீட்டு வாசலில் கால் வைத்ததும் பிரம்மரட்சஸ் ஓடிவிட்டது !அடுத்த மனைவிக்கு விபூதிகொடுக்க அவரும் குணமானார்! வள்ளலார் திருவடிகள் வீழ்ந்து வணங்கினார்.வள்ளல் பெருமான் வேண்டுகோள்படி அவர் ஐமீனுக்குட்பட்ட எந்த கோவிலிலும் உயிர்பலி கொடுப்பதை தடை செய்தார்!

விபூதி பூசுங்கள்! தலை நீர் போகும் !விபூதி பூசாதவனுக்கு ஒன்றும் ஞானம் வராது!வள்ளல் பெருமான் எத்தனையோ அன்பர்களுக்கு விபூதி கொடுத்தே தீராத பிணி மற்றும் துன்பங்களை போக்கியிருக்கிறார்!

படிக்கவில்லையா?!”மந்திரமாவது நீறு ”என திருஞானசம்பந்தர் பாடல் பாடியிருக்கிறாரே தெரியாதா உங்களுக்கு? தருமச்சாலையிலே ,மேட்டுக்குப்பத்திலே பின் எதற்கு விபூதி கொடுக்கிறார்கள்?! வீண் வாதம் விதண்டவாதம் பண்ணாமல் வள்ளலார் வழியில் ஒளியிடலாகி மரணமிலா பெருவாழ்வடையும் வழியை தேடுங்கள்!

ஆதி சங்கரர் கூறுகிறார் , வீடு சுவருக்கு சுண்ணாம்பு பூசுவது போல , தூய வெண்ணீறு நம் உடலெல்லாம் பூச வேண்டும். சராசரி மனிதன் முடிவில் வெந்து வெண்ணீறு சாம்பல் ஆவதை குறிப்பதுவே இது. என்றும் உன் மனதில் இதை நிறுத்தி , எல்லாரையும் போல உன் உடலும் முடிவில் வெந்து சாம்பல் ஆகாமல் நிலைத்திருக்க வழியை தேடு என்பதே – வெண்ணீறு பூசுவத்தின் விளக்கமாம்.

வெண்ணீறு – விபூதி பசுஞ்சாணத்தை சுட்டு தயாரிக்கப்படுவது. பசுஞ்சாணம் மிக சிறந்த கிருமி நாசினி என்பது விஞ்ஞானம் ஒத்து கொண்ட உண்மை. நாம் அதை உடலில் பூசுவதால் உடல் நீரை எடுக்கும் ஆற்றலும் அதற்கு உண்டு. பூசுவது நீறு திரு ஆலவயான் திருநீறே என ஞான சம்பந்தர் திருநீற்றுப்பதிகமே பாடியுள்ளார்.

வள்ளல் பெருமானும் நெற்றியில் திருநீறு பூசியே இருந்தார். சன்மார்கிகளே வடலூரில் சத்திய தரும சாலையில் தரும் விபூதியை வாங்கி நெற்றி நிறைய பூசுங்கள். வள்ளலார் அருள் தருவார். இது பக்தி என ஒதுக்கி விடாதீர். நீ என்ன பெரிய ஞானியா? அகங்காரம் பிடித்து அலையும் சாதாரண மனிதன் நீ.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் விபூதி பூசுவதும் பூசாததும் சன்மார்க்கம் அல்ல.

ஞான தவம் செய்ய “தகுந்த ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்று கொள்வது நலம்” என்று உரைத்த வள்ளலார் கூற்றுப்படி தியானம் செய்வதை விடுத்து விபூதி பூசுவது சுத்த சன்மார்கமா? விபூதி பூசாமலிருப்பது சுத்த சன்மார்க்கமா ? என வீண் வாதம் செய்து வீனே காலம் கழிக்காதீர்கள்.

திருநீறு என்பதன் அகப்பொருள் திரு + நீறு. இறைவன் திருவடி பட்டு வரும் நீர்.
நாம் கண்மணி ஒளியை நினைந்து , தீட்சையின் போது குரு கொடுத்த கண்மணி உணர்வை பற்றி கண் திறந்து தவம் செய்கையில் பெருகும் நீரே திருநீறு. அதாவது இறைவன் திருவடியான நம் கண்மணி ஒளியால் பெரும் நீரே திருநீறு.

இந்நீரால் நம் உடல் முழுவதும் நினைய வேண்டும். ஞான சரியையில் “உற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நினைந்து” என்று இதனையே வள்ளல் பெருமான் கூறுகிறார்.

உலக குரு வள்ளலாரை வணங்கி கை நிறைய விபூதியை எடுத்து வாய் நிறைய மகாமந்திரத்தை கூறி நெற்றி நிறைய இடுங்கள். ஞான தவம் செய்து இறைவன் திருவடியால் – கண்மணி ஒளியால் பெரும் “திரு”நீறால் உடல் முழுவது நினையுங்கள். உடலும் உள்ளமும் மணக்கட்டும். உயர்வு கிடைக்கட்டும். வடலூரார் வளம் எல்லாம் தருவார். கிட்டும் மரணமிலா பெருவாழ்வு.

சனி, 25 ஜூன், 2016

சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

எல்லா சன்மார்கிகளும் அறிந்து அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பெரியவர்.சன்மார்க்க சான்றோன் – சதாவதானி செய்குத்தம்பி பாவலர்

 மதங்கடந்தது ஞானம்,

சன்மார்க்கம் என்பதற்கு கன்னியாகுமரி சதாவதானி செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம் ஆவார்! இந்த சன்மார்க்க பெரியவரை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் இடலாக்குடியில் இடர் இல்லா குடியில் பிறந்த இஸ்லாமிய பெரியவர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர். சன்மார்க்க நெறி நின்ற உத்தமர். அற்புத அறிவாற்றலால் தவபலத்தால் சதாவதானி ஆனார். ஒரே நேரத்தில் 100 விதமான செயல்களுக்கு கேள்விகளுக்கு பதில் தந்தார். அவதான கலை ஓர் ஒப்பற்றக் கலை. அதிலும் 100, சதாவதானி ஆவது மிகப் பெரிய ஆற்றல். ஆனார் நம் பாவலர். இவர் சிறந்த நாவலரும் ஆவார். செந்தமிழ் புலமை பெற்று மிக மிகச் சிறப்பாக பேசும் நா வன்மை கொண்ட நாவலர்.

வள்ளலார் இராமலிங்கர் பாடியது இறையருள் பாடல்கள் அல்ல என தமிழ்நாட்டின் சில மடாதிபதிகள் மட அதிபதிகள் நீதி மன்றத்திற்கே சென்றனர். வழக்கு தொடுத்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரே வள்ளலாரை கண்டதும் எழுந்து நின்று பணிந்து வணங்கியதை கண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். விடவில்லை மட அதிபதிகள் முட்டாள்கள். ஆறுமுக பாவலரின் சீடர் கதிர் வேற்பிள்ளை மூலம் சொற்போர் தொடர்ந்தனர். அருட்பா, மருட்பா என இரு தரப்பிலும் வாதம், விவாதம் பல நாட்கள் பல ஊரிலும் நடந்தது.

இப்போது வருகிறார் கன்னியாகுமரி தந்த சன்மார்க்க சீலன் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் விவாத மேடைக்கு. இலக்கண இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தேவார திருவாசக ஞான நூற்களை சுட்டிக் காட்டி திரு அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடியது இறைவன் அருளால் பாடிய அருள் பாக்களே! அருட்பாவே. அது திருஅருட்பா தான் என அறுதியிட்டு உறுதியாக பேசினார்.

ஊர்தோறும் பலருக்கும் பதில் தந்தார். திருஅருட்பா இறையருளால் பாடப்பட்ட தீந்தமிழ் பாக்கள் தான் அதில் எள்ளளவும் ஐயத்திற்கு இடமில்லை என்று சூளுரைத்தார். என்ன ஆச்சர்யம் பாருங்கள்! ஒரு முஸ்லீம் வள்ளலாரை போற்றினார். சைவ மட அதிபதிகள் தூற்றினர்.

மதங்கடந்தது ஞானம், சன்மார்க்கம் என்பதற்கு கன்னியாகுமரி சதாவதானி
செய்குத்தம்பி பாவலர் ஓர் ஒப்பற்ற உதாரணம் ஆவார்!

மாமேதை தமிழ்க்கடல் செய்குத்தம்பி பாவலரின் இந்த சிறந்த குணம் சன்மார்க்க நெறி வள்ளலாரை போற்றிய பண்பு அனைவரையும் கவர்ந்தது. ஆச்சரியப்பட வைத்தது. பலன் என்ன தெரியுமா? அதை விட அதிசயம் கன்னியாகுமரி வாலை அருள் புரிந்தாள்! எப்படி?

காஞ்சி காமாட்சி கோயிலுக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் நம் செய்குத்தம்பி பாவலர். கருவரைக்கே சென்று காஞ்சி காமாட்சியை தொழும் பாக்கியத்தை தந்தனர் ஊர், கோவில் பெரியவர்கள். அது மட்டுமா பொன்னாடை போர்த்தி மலர் மாலைகள் சூட்டி பாராட்டி யானை மீது அமர்த்தி காஞ்சியிலே ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பு செய்தனர். பாராட்டி மகிழ்ந்தனர். அன்றைய காலகட்டத்தில் நம் நாடு மதங்கடந்த மனித நேயத்தை ஆன்ம நேயத்தை போற்றியது. வேற்றுமை இன்றி வாழ்ந்தனர்.

வள்ளலாரை இந்து மத துறவி என பார்க்க வில்லை செய்குத்தம்பி பாவலர். ஒப்பற்ற சன்மார்க்கி என்றே கண்டார். போற்றினார். வாழ்த்தினார்.
வள்ளலாரின் அருட்திறத்தை திருவருட்பா முழுவதும் காணலாம் என்று தக்க சான்றுகளோடு தமிழகமெங்கும் சென்று உரையாற்றினார். வள்ளலார் சன்மார்க்க சங்கத்தவர் ஒவ்வொருவரும் முதலில் கன்னியாகுமரி சதாவதானி செய்குத்தம்பி பாவலருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் முஸ்லீம் அல்ல ஆன்மநேயம் கொண்ட அற்புத மனிதர்.

சன்மார்க்கிக்கு இலக்கணம் சதாவதானி செய்குத்தம்பி பாவலரே.

வெள்ளி, 24 ஜூன், 2016

தாயருளாலே தந்தையை காண முடியும்.

உத்தரகோச மங்கையூராகவும் 
 
நம் ஜீவனாகிய அந்த சிவம் நம் சிர நடு உள்ளே இருக்கிறது ! அதை அடைய
நம் இரு கண் வழி உட்புக வேண்டும் இதுவே ஞான சாதனை! உட்புகும் போது
நாதத்தொனி கேட்கும் பின் தாய் வாலை அமுதம் கிட்டும். சூரிய சந்திர
ஜோதி உட்சேரும் இடம், வாலை இருக்கும் இடம், உத்தரகோச மங்கை
இருக்கும் இடம், அந்த ஊரே சிவன் இருக்கும் இடம்! தாயருளாலே தந்தையை
காண முடியும்.

உத்தரகோச மங்கை

உத்தரகோச மங்கையு ளிருந்து - கீர்த்தி திருவகவல்

உத்தரகோச மங்கை ஊரிலிருந்து, கோவிலில் இருந்து  என்று
மாணிக்கவாசகர் பாடவில்லை! நன்றாக கவனியுங்கள். திருவாசகம்
ஞானக்களஞ்சியம் கதை புராணம் என்று போய் விடாதீர்கள்! அனுபவித்து
பாருங்கள் உண்மை ஞானம் விளங்கும். உத்தரகோச மங்கை உள்ளிருந்து
- நம் சிர நடு உள் போய்ச் சேருமுன் தாய் - சக்தி வருவாள் உத்திரம் மேலே
இருப்பது வீட்டில் மேல் கூரையை தாங்குவது.நம் சிரமேல் சிவத்தை தங்குவது சக்தி! கோசத்தின் மேல் இரு கண் உள் சேரும் நம் சிரநடுவுள் பகுதி. சிவனை காணுமுன் சக்தி - வாலை வருவாள். மங்கை நல்லாள் அமுதம் தருவாள் பின்னரே சிவத்தை  அடையலாம்.

சனி, 4 ஜூன், 2016

சிதம்பர ரகசியம்

நாம் தவம் இடக்கண்ணிலே நினைவை நிறுத்தினால் தவம் செய்தால் சக்தி பிறக்கும்! சக்தியோடு வலக்கண் சிவத்தை பற்ற ஒளி பெருகும்! லலாடஸ்தானத்தில் உள்ள நம் ஜீவஸ்தானத்தை அடைய தடையாக இருக்கும் கர்மத்திரை விலகும்! பூட்டு திறக்கும்! கதவு திறக்கும்! உள்ளே போகலாம் ஆகாய வெட்ட வெளியில் உலாவலாம்! இது தான் சிதம்பர ரகசியம். ஆகாய வெளிக்கு போக வழியாக விழியை நாடுவதே தவம் செய்வதே சிதம்பர ரகசியமாம்! எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் உள்ளே போனால் அங்கே போனால் அங்கே ஒன்றுமில்லை வெட்ட வெளிதான்! ஆகாயம் மட்டுமே!! வெட்டவெளி தான் மெய்! நம் உடல்! வெட்ட வெளி தான் இறைவன்! புரிந்துகொள்ளுங்கள்! சிதம்பர ரகசியம்! இதுவே! ஞானம்!

www.vallalyaar.com Gnana Sarguru

Popular Posts