செவ்வாய், 21 ஜனவரி, 2020

ராமானுஜர் - ராமலிங்கர் - ரகசியம்

மஹானுபவர் ஸ்ரீ ராமானுஜர் தன் குரு தனக்கு உபதேசித்த அஷ்டாச்சர மந்திரத்தை
நீ  வெளியே சொன்னால் நரகத்திற்கு தான் போவாய் இது ரகசியம் என்று உரைத்ததை  மீறி
உலகர் எல்லோரும் சொர்க்கத்திற்கு போகட்டும் என்று ஊர் நடுவே கோபுரம் ஏறி
கூறினாரே அவரல்லவா ஞானி! தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை
என்று மூட குருவின் வார்த்தையை மீறி சொன்னாரே! அவரல்லவா கருணைக்கடல்!
அவர் உலகர் மீது கொண்ட அன்புக்கு ஈடேது!!

மந்திரத்தை சொன்ன ராமானுஜரே கருணை கடல் என்றால் இறைவனை அடைய
இதுவரை ரகசியமாக சொன்னவற்றை வெளிப்படுத்திய வள்ளலார் ஸ்ரீ ராமலிங்கர் யார்?
கடவுள் யார்? எப்படி இருக்கிறார்? நம் உடலில் கண்ணில் ஒளியாக இருக்கிறார். நம்
சிர நடுவில் ஆத்ம ஜோதியாக துலங்குகிறார் !  அதுவே சத்திய ஞான சபை விளக்கம்!
தை பூச ஜோதி தரிசன விளக்கம் என்று உரைத்த வள்ளலார் மனித குலத்தை உய்விக்க
வந்த மகாஞானியல்லவா இதை உலகம்  உணர வேண்டாமா?

பக்தியால் பண்படும் மனிதன் இறைநிலை அறிய  உணர அடைய வழி-விழி காட்டுகிறார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் - ஞானம் பெறுவதிழும் வந்தது வள்ளலாரால்!
மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டுவதே நம் நாட்டில் ஆதியில் இருந்து வந்துள்ள
தர்ம நெறியாகும்! அறநெறியாகும்! அப்படி வாழ்ந்த மனிதன் தன்னை படைத்த பரம் பொருளை
அறிவதே, உணர்வதே திருவடியை அடைவதே பரிபூரண நிலையாகும்! இதை நம் நாட்டில் காலம் அறியப்படாத

பல யுகங்களாக சொல்லி வந்தனர் ஞானிகள் பலர்! இதை தான் சனாதன தர்மம் என்றனர்!
இதைத்தான் வள்ளலாரும் ஸ்ரீ ராமலிங்கரும் சன்மார்க்கம் என்று பெயரிட்டு உபதேசித்தார்
வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருவனன்றே என பணிவாக கூறுகிறார் வள்ளலார்!

வள்ளலார் உரைத்த சன்மார்க்க நெறி வேதத்தில் சொல்லபட்டதுதான்! 18 புராணங்களில் உபநிஷத்துகளில் சொல்லபட்டதுதான்! இதுவரை இவ்வுலகில் தோன்றிய ஞானிகள் சொன்னது தான்! இயேசு பிரான் பைபிளில் சொன்ன ஞானம்! முகமது நபி பெருமான் குர்ஆனில் சொன்ன ஞானம்! திருமூலர் திருமந்திரத்தில் சொன்ன ஞானம்! மணிவாசகர் திருவாசகத்தில் சொன்ன ஞானம்! தேவாரம் திருக்குறள் இன்னும் எத்தனையோ மகன்களின் ஞானம்! குணங்குடி மஸ்தான் உரைத்த ஞானம் ! தக்கலை ஞான மாமேதை பீர்முகமது உரைத்த ஞானம் ! எல்லார் உரைத்த ஞானமும் சன்மார்க்கமே!

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts